1 இராஜாக்கள் 17:10-11 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்.அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.
கொண்டுவர அவள் போகிறபோதுஅவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.
நாம் இன்றைய வேதாகமப் பகுதியில் எலியாவுக்கும் , இந்த அந்நிய நாட்டு விதவைக்கும் முதல் சந்திப்பிலே நடந்த உரையாடலைப் பார்க்கிறோம். இந்தப் பெண்ணிடம்தான் தான் தேவனாகியக் கர்த்தர் எலியாவைப் பராமரிக்கும்படி கட்டளையிட்டிருந்தார்.
நான் இதை வாசிக்கும்போது,இவள் ஒருவேளை இஸ்ரவேல் நாட்டை சேர்ந்தவளாக இருந்து அந்த சீதோன் நாட்டில் போய் குடியேறியிருப்பாளோ என்று நினைத்தேன். அல்லது ஒருவேளை அவள் ஒரு சீதோனியனைத் திருமணம் செய்து அங்கு வாழ்ந்து கொண்டிருந்தாளோ என்றும் நினைத்தேன்.ஆனால் வேதமோ அல்லது வேறு எந்த வேதாகம வல்லுநரோ இந்த மாதிரி நினைத்ததாகக் கூடத் தெரியவில்லை!
ஆதலால் இவள் எனக்கு ஒரு ராகாபைப் போலத் தோன்றினாள். எரிகோவின் மதிலின்மேல் வாழ்ந்து கொண்டிருந்த ராகாப், இஸ்ரவேலின் தேவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். அவள் இஸ்ரவேலரின் வேவுகாரரை சந்திக்க நேர்ந்ததும் அவள் உள்ளத்தில் ஒரு விசுவாசியாகிவிட்டாள்.
இந்தப் பெண்ணைப் பற்றி அந்த அளவுக்கு நமக்குத் தெரியாவிட்டாலும், அவள் தேவனுடைய கட்டளையை ஏற்றுக் கொண்டு நடந்து கொண்டது ,அவளுடைய வார்த்தைகளைவிட அதிகமாகவே நமக்கு அவளைப்பற்றித் தெரியப்படுத்துகிறது. அவள் எலியாவைப் பார்க்காத மாதிரி கடந்து போகவுமில்லை, அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் ஓடிப்போகவுமில்லை.
நாம் வேதத்தின் படி பார்ப்போமானால், உண்மையில் அந்த விதவைதான் உதவி பெறும் இடத்தில் இருந்தாள். விதவைகளை ஆதரிக்கும்படி தேவன் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டிருந்தார். நான் இதைப்பற்றி சற்று ஆழமாக படிக்க ஆரம்பித்தபோது யோபுவின் புத்தகம் 24 ம் அதிகாரத்தில் விதவைக்கு நன்மை செய்யாதவனை அக்கிரமக்காரன் என்று எழுதியிருக்கிறது என் கண்களில் பட்டது. அதுமட்டுமல்ல சங்கீதம் 94:6 ல் விதவையையும் பரதேசியையும் கொன்று போடுபவர்களை துன்மார்க்கர் என்றும் , ஏசாயா 1:23 ல் விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை என்றும் எழுதியிருக்கிறது. இந்த வார்த்தைகள் இந்த காலகட்டத்திற்கும் மிகவும் பொருந்தும் என்று நான் நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?
இப்படியாக விதவைகள் ஒடுக்கப்பட்ட காலகட்டத்தில், வறட்சியும் பஞ்சமும் மிகுதியாக இருந்த வேளையில், தேவனாகியக் கர்த்தர் எலியாவை அவளிடம் அனுப்புகிறார். மிகவும் தேவையில் இருந்த இந்தப் பெண்ணிடம் தேவன் எலியாவுக்கு உதவி செய்ய கட்டளையிடுகிறார்.
ஒரு இரகசியம்! ஒரு காகம், ஒரு அந்நிய நாட்டு ஏழை விதவை, ஒரு மலைவாழ் மனிதன் இவர்கள் தான் கர்த்தருடைய கரத்தின் கருவிகள்! எலியா தேவனின் கட்டளைக்கு இணங்கி தன்னுடைய சுகமான மறைவிடத்தை விட்டு 100 மைல் தூரம் நடந்து சென்றதும், இந்த எழை விதவை தனக்கே ஒன்றுமில்லாதபோது எலியாவைப் பராமரிக்கும் கட்டளையை ஏற்றுக் கொண்டதும், அவர்கள் இருவருக்கும் தேவன் தடையில்லாமல் உணவு வழங்கிய அற்புதம் நடக்க வழிவகுத்தது.
இதனால் என்ன நடந்தது? அவளுடைய கடைசி உணவு என்று எதை நினைத்தாளோ அது அவளுக்கு நீடித்த நாட்களின் உணவாயிற்று. அவள் உலகமே தலைகீழாயிற்று! இதுவே தேவனாகியக் கர்த்தர் நம்முடைய வாழ்விலும் செய்து கொண்டிருக்கிறார். நம்முடைய உள்ளம் தேவனுடைய சத்தத்துக்கு செவி கொடுக்குமானால், ஒருநாள் நம் வாழ்வும் தலைகீழாக மாறும், நாமும் தேவ தூதர்களின் முன்னால் கர்த்தரோடு பந்தியிலிருப்போம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
