கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1623 நல்ல குடும்பம் அமைய ஒரு யோசனை!

ஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான்.

 மேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.

சில வருடங்களுக்கு முன்  மே மாதம் அமெரிக்காவில், எங்களுடைய  நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் மனைவி என்னிடம் வந்து, ‘தாய்’ சமையல் செய்திருக்கிறேன், ஆனால் ஏதோ குறைகிறது, என்ன என்று தெரியவில்லை, என்ன சேர்த்தால் ருசி வரும் என்று பாருங்கள் என்று என்னிடம் கூறினார். நான் ருசி பார்த்துவிட்டு உப்பே சேர்க்கப்படவில்ல என்று உணர்ந்து உப்பை சேர்த்தேன். ருசி அப்படியே மாறிவிட்டது.

(மத்தேயு  5: 13) வேதம் கூறுகிறது, “ நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிரீர்கள் என்று. நீயும் நானும், உப்பைப் போல மற்றவர்கள் வாழ்வில் ருசி கூட்டவும் முடியும், உப்பில்லா பண்டத்தை போல, சாரமில்லாத உப்பைப் போல, யாருக்கும் பிரயோஜனமில்லாமல்  வாழவும் கூடும் என்பதுதான் அர்த்தம்.

எலியாவைப் பற்றித் தொடராமல் ஏன் உப்பைப் பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம்.

நாம் வாசித்த இன்றைய வேத பகுதி, யோசேப்பு, சிறையில் இருந்து வந்து, பார்வோனின் முன்னால் என்று, எகிப்துக்கு அதிகாரியாக பதவி ஏற்ற பொழுது என்ன நடந்தது என்று கூறுகிறது.

யோசேப்புக்கு முப்பது வயது, நல்ல வாலிப வயதில் யோசேப்பு பெண் துணை இல்லாமல் தனித்து இருப்பதை உணர்ந்த பார்வோன், அவனுக்கு ஒரு மனைவியை தேடிக் கொடுக்க முடிவு செய்கிறான். அது வேறு  யாரும் இல்லை! ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான் என்று பார்க்கிறோம்.

என்ன?????? யோசேப்பு மணந்தது ஒரு எகிப்திய ஆசாரியனின் மகளையா????

யோசேப்பு, என்கிற எபிரேயன், கர்த்தராகிய தேவனை வணங்குகிறவன், கர்த்தருக்கு பயந்தவன், கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்ந்தவன்,   எப்படி எகிப்த்தின் ஆசாரியனுடைய மகளை மணக்கலாம்? அப்படியானால் நானும் அவிசுவாசியை மணக்கலாமா? என்று உங்களில் ஒருவர் முணுமுணுப்பது கேட்கிறது.

யோசேப்பை போன்ற கஷ்டங்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்களானால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனை அடியோடு மறந்து விட்டு, அவனை மணந்த ஆஸ்நாத்தின், கடவுள்களை பின் தொடர்ந்து இருப்பீர்கள்!

அவன் எபிரேய பெண்ணை மணக்கக் கூடிய நிலையில் இல்லாமல், எகிப்தில் வாழ்ந்ததால், பார்வோன் விருப்பப்படி மணந்தாலும், அவனுடைய குடும்பத்தை கர்த்தருடைய பாதையில் வழி நடத்தினான். அவனுடைய அன்பினால், கர்த்தருக்கு பயந்த நடக்கையால், கர்த்தருடைய முகத்தை அனுதினமும் தேடிய ஜீவியத்தால் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும் அவன் தன்வழியில் கொண்டு வர முடிந்தது. யோசேப்பின் வாழ்க்கை சாரமுள்ள உப்பை போல அவன் குடும்பத்தில் ஆசிர்வாதத்தை கொண்டு வந்தது.

இதற்கு என்ன ஆதாரம் தெரியுமா?

ஆதி:48:1 அதற்கு பின்பு உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்கு சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு  குமாரராகிய மனாசேயையும், எப்பிராயீமையும், தன்னோடே கூட கொண்டு போனான் என்று வாசிக்கிறோம். யோசேப்பு தன் குமாரருக்கு, பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரின் ஆசீர்வாதத்தை யாக்கோபு கொடுக்க வேண்டும் என்று விரும்பினான்!

யாக்கோபு அவர்களைக் கண்டவுடன் என்ன சொல்கிறான் பாருங்கள்!

ஆதி: 48:5 நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்து தேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்

 யாக்கோபுடைய பிள்ளைகளுக்கு தேவனாகிய கர்த்தரால் கொடுக்கப்பட்ட ஆசிர்வாதம், யோசேப்புக்கு மட்டுமல்ல அவனுக்கு எகிப்து நாட்டு ஆசாரியனின் மகள் ஆஸ்நாத் மூலமாய் பிறந்த இரண்டு குமாரருக்கும் கிடைத்தன. காரணம் சூழ்நிலையினால் எகிப்தில் பெண் கொண்டாலும், அவன் குடும்பத்தில் அவன் உப்பாக இருந்து தன் அன்பினாலும், சாட்சியினாலும், அந்த குடும்பத்தை தேவனுக்குள் வளர வைத்ததினால் தான். தன்னுடைய கணவனின் ஜீவியம் அவன் மனைவியை ஜீவனுள்ள தேவனிடம் வழிநடத்தியிருக்கும்!  யோசேப்பின் குமாரர் கர்த்தரால் ஆசிர்வதிக்கப் பட்டு இஸ்ரவேல் கோத்திரமாகிய எப்பிராயீம், மனாசே கோத்திரங்களுக்கு தகப்பனாகினர்.

யோசேப்பு தன் குடும்பத்தில் உப்பாயிருந்ததால் அவன் குடும்பம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டது! அந்நிய பெண்ணாகிய ஆஸ்நாத்தும் அவள் பிள்ளைகளும் ஆசிர்வதிக்கப் பட்டனர்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்! அப்பொழுது யோசேப்பை போல ‘நல்ல குடும்பம்’ என்ற ஆசீர்வாதம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்.

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment