Tamil Bible study

இதழ்: 2588 இன்று தவறினால் நாளை கண்ணீர் தான்!

1சாமுவேல்: 2: 1   “அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி”

அன்னாளின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும் சில வாரங்கள் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அன்னாளின் வாழ்க்கையை ஆழமாக படிக்க ஆரம்பித்த எனக்கு அவள் ஆசீர்வாதமாக இருந்தது போல் உங்களுக்கும் இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன்.

இன்றிலிருந்து நாம் அன்னாள் என்ற தாயின் குணநலன்களைப் பற்றி படிக்கலாம். அன்னாளின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது ஜெபமே அவளுடைய வாழ்க்கையில் ஒரு ஆயுதமாக இருந்தது.

ஜெபத்துக்கு எவ்வளவு வல்லமை உள்ளது என்று அந்தத் தாய் அறிந்திருந்தாள்.  இன்று நம்முடைய பிள்ளைகளில் அநேகர் சீர்கெட்டுப் போவதற்குக் காரணம் நம்மில் அநேகர் பிள்ளைகளுக்காக ஜெபிக்காமல் இருப்பதுதான். பிள்ளைகளுடைய சிறு பருவத்திலேயே நாம் அவர்களுக்காக ஜெபிப்பதை அவர்கள் உணர்ந்து வளரும்போது, அவர்களும் தேவனுக்கு தங்கள் வாழ்வில் முதலிடம் கொடுக்கக் கற்றுக் கொள்வார்கள்.

நம்முடைய பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் போது அவர்கள் நம்மையே முன்மாதிரியாகக் காண்கிறார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. என்னுடைய பிள்ளைகள் பள்ளிக்கு போகும்போது நாங்கள் அவர்களுக்காக ஜெபித்து அனுப்புவதுண்டு. எந்த ஒரு காரியத்தையும் அனைவரும் சேர்ந்து ஜெபிக்காமல் செய்ததில்லை. அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்னர் எல்லா சிறு காரியங்களுக்கும் ஜெபிப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் சந்தோஷப்பட்டோம்.

அன்னாள் ஜெபம் பண்ணினாள் என்ற வார்த்தையை நாம் அடிக்கடி வேதத்தில் படிப்பதில் ஆச்சரியமேயில்லை. இது ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்காக செய்ய வேண்டிய ஒரு செயல். அன்னாள் தன் வாழ்க்கையில் ஜெபத்துக்கு பதில் மிகவும் தாமதமாக வந்த போதிலும் விடாப்பிடியாக ஜெபத்தில் தரித்திருந்து பெற்றுக்கொண்டவள். அவளுக்கு ஜெபத்தின் அருமை நன்குத் தெரியும்.

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபிப்பது உண்டா? எத்தனை மணி நேரம் கர்த்தருடைய சமுகத்தில் செலவிடுகிறீர்கள்? இன்று இந்தக் காரியத்தை செய்யத் தவறினால் நாளை உங்கள் பிள்ளைகளுக்காக அநேக மணி நேரம் கண்ணீர் விட வேண்டியதிருக்கும்!

ஜெபம் நிறைந்த வாழ்க்கை வல்லமையுள்ளது! அதை ஒருநாளும் புறக்கணிக்காதே!

உங்கள் சகோதரி!

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Kindly follow the link and study the hardest book in the Bible that reveals the mysteries of God! 

TODAY AT 10 AM NEW EPISODE ON PERGAMUM CHURCH WILL BE PUBLISHED

நீன்கள் படிப்பது மட்டுமன்றி வெளிப்படுத்தின விசேஷத்தைப் படிக்க விரும்பும் அனைவருக்கும் இதைப் பகிருங்கள்!

https://www.youtube.com/@rajavinmalargal

Leave a comment