Tamil Bible study

இதழ்:2614 எனக்காக யாவற்றையும் செய்ய அவருக்கு எந்தத் தடையும் இல்லை!

1 சாமுவேல் 14:6 யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்துக்குப் போவோம் வா. ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம்பேரைக் கொண்டாகிலும்,கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.

கடவுள் எப்படி என் தேவைகளை அறிந்து எனக்காக யாவையும் செய்ய முடியும்! அவர் என்ன நம் அருகில் இருக்கிறாரா?  என்னைப்போல் எத்தனை கோடி மக்கள் தங்களை அவருடைய பிள்ளைகள் என்கிறார்கள்! அத்தனைபேரின் சத்தமும்  அவர் காதில் விழுமா? என்று என்றாவது நினைத்ததுண்டா?

அப்படியானால்  சவுலின் குமாரன், பட்டத்து இளவரசன், யோனத்தான் வாயினின்று புறப்பட்ட இந்த ஞானமான, நம்பிக்கையான வார்த்தைகளை சற்றுக் கேளுங்கள்!

சவுல்  பெலிஸ்தருக்கு எதிரே தன் வீரத்தைக் காட்டாததால் ஜனங்கள் அவஸ்தைக்குள்ளாகி, பயத்தில் மலைகளிலும், குகைகளிலும் ஓடி ஒளித்துக் கொண்டனர் என்று படித்தோம்.

ஆனால் யோனத்தானோ தன் தகப்பனின் தலைகனமான வழியில் செல்லவில்லை! அதற்குபதிலாக யோனத்தான் தன் சேனை வீரரோடு பெலிஸ்தரின் சேனை இருந்த தாணையத்துக்குப் போக முடிவு செய்தான்.

எத்தனை தைரியம் பாருங்கள்! ஆனால் இது அவன் ஆணவத்தால் எடுத்த முடிவு அல்ல! அவனுடைய இருதயத்தை தான் அவன் வாய் பேசிற்றே! என்ன சொல்கிறான் பாருங்கள்!

அவன், ‘ ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம்பேரைக் கொண்டாகிலும்,கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்’ என்று பார்க்கிறோம்.

பெலிஸ்தரின் சேனை எத்தனைத் திரளாயிருந்தாலும் பரவாயில்லை, கர்த்தர் நம்மை ரட்சிக்க நினைப்பாராயின் அதற்கு எதுவும் தடையாக நிற்க முடியாது என்பது அவனது அசைக்கமுடியாத நம்பிக்கை!

இன்று தேவனாகிய கர்த்தர் உன் வாழ்வில் கொடுக்க நினைக்கும் ஆசீர்வாதங்களை யாரும், எதுவும் தடை செய்ய முடியாது என்று விசுவாசிக்கிறாயா?

இன்று நீ ஒருவேளை ஒரு பலத்த சேனையை எதிர்க்க முடியாத பெலவீனனாக உனக்குத் தெரியலாம். ஐயோ! எனக்கு விரோதமாக இருக்கும் பொய்சாட்சிகள் அநேகம் நான் என்ன செய்வேன் என்று நினைக்கலாம்!

அன்பு சகோதரனே! சகோதரியே!  கர்த்தர் உன்னை ரட்சிக்க நினைத்தால் எல்லாம் அதமாகிவிடும்!

தேவனாகியக் கர்த்தர் உன்னைக் காக்கவும், இரட்சிக்கவும், உனக்கு பதிலளிக்கவும் இந்த உலகில் எந்தத் தடையுமில்லை! 

 அவர் எவ்வளவு உயரத்தில்இருந்தாலும் சரி, எத்தனை சத்தம் அவர் செவிகளில் விழுந்தாலும் சரி,  அவர் உன் சத்தத்தை அறிவார்! உனக்கு வரும் உதவி தடைபடாது! தைரியமாய்  நம்பு!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

கிறிஸ்தவர் மத்தியில் Rapture என்று அதிகமாகப் பேசப்படும், திருச்சபை மேலே எடுத்துக்கொள்ளப்படும் நாளைக்குறித்து வீடியோ வெளியாகியுள்ளது!

இந்த சம்பவம் எப்பொழுது நடக்கும்?, அந்த சமயத்தில் என்ன நடக்கும்? இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள வீடியோவைக் காணுங்கள்! 

அனைவருக்கும் பகிருங்கள்!

https://www.youtube.com/@rajavinmalargal

Leave a comment