Tamil Bible study

இதழ்: 2616 நம்மை நேசிக்கும் தேவன் மிகப்பெரியவர்!

1 சாமுவேல் 15: 10,11  அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:

நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது.

இன்றைய வேத பகுதியை வாசிக்கும்போது  நாம் என்றைக்காவது நம்முடையப் பிள்ளைகளைப் பார்த்து இவனை அல்லது இவளை ஏன் பெற்றோமோ என்று மனஸ்தாபப் பட்டதுண்டோ என்று சிந்தித்தேன்!

அவர்கள் தவறு பண்ணியபோதுகூட ஒருநாளும் அந்த எண்ணம் தலைதூக்கியதேயில்லை. பிள்ளைகள் தவறு பண்ணும்போது மனவேதனை உண்டு ஆனால் மனஸ்தாபம் இல்லை என்றுதானே நீங்களும் நினைக்கிறீர்கள்!

இந்த மனவேதனை என்ற அர்த்தத்தைத்தான் மனஸ்தாபம் என்ற வார்த்தை எபிரேய மொழியில் கொடுக்கிறது. பிள்ளைகள் தவறான நண்பர்களைத் தெரிந்து கொள்ளும்போது, அல்லது தவறான முடிவைத் தங்கள் திருமண வாழ்வில் எடுக்கும்போது நம் உள்ளம் எவ்வாறு வேதனைப்படுகிறது என்று உங்களில் பலருக்குத் தெரியும்.

இஸ்ரவேலின் முதல் ராஜாவாக தெரிந்துகொள்ளப்பட்ட சவுல் தவறு செய்தபோது கர்த்தர் அவனைக் குறித்து மனவேதனைப்பட்டார் என்றுதான் இங்கு பார்க்கிறோம். அவனுடைய நடவடிக்கை, செயல்கள் யாவும் அவரை வேதனைப்படுத்தின. அவனைப் பார்க்கும்போது அவனை ஏன்  உருவாக்கினேன் என்று வருந்தவில்லை, ஐயோ இவன் இப்படி நடந்து கொள்கிறானே என்று வருத்தப்பட்டார்.

தேவனாகிய கர்த்தர் தம் பிள்ளைகளாகிய நம்மோடு கொண்ட உறவைப்பற்றி நாம் படிக்கும்போது இந்த முக்கியமான ஒரு காரியத்தை நாம் மறந்துவிடக்கூடாது. கர்த்தர் ஒருநாளும் நம்மை உருவாக்கினதைக்குறித்து வருந்துகிறவர் அல்ல. நாம் அவர் வழியை விட்டு விலகும்போது மிகுந்த மன வேதனைப்படுகிறவர்.

மூன்றுமுறை மறுதலித்த பேதுரு, பரலோக தேவனின் அன்பை உணர்ந்தவராய் ,

அவர் நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் என்று கூறுகிறார் (2 பேதுரு 3:9).

கர்த்தர் இன்று எதைக்குறித்து மனஸ்தாபப்படுகிறார்? ஐயோ நான் இன்று அவரிடம் பேசவில்லையே அதனாலா???

நான் அவருடைய வார்த்தைகளைக் கேட்க வில்லையே அதனாலா????

ஐயோ இன்று என்னுடைய ஆபீஸில் என்னால் அவருக்குக் கீழ்ப்படிய முடியவில்லை, அவரை நான் துக்கப்படுத்திவிட்டேன்!  இப்படி ஒருநாளில் எத்தனைமுறை அவரை நாம் துக்கப்படுத்துகிறோம்????

சவுலைப் போல நம் தேவனாகிய கர்த்தரை நாம் துக்கப்படுத்தவேண்டாம்.

நாம் அவரை நோக்கி ஒரு அடி நகர்ந்தால் போதும் அவர் நம்மை நோக்கி ஓடி வந்து நம்மைக் கட்டித் தழுவிக்கொள்வார்.

நாம் பெரியவர்களாய் இருப்பதால் அவர் நம்மை நேசிக்கவில்லை! அவர் மகா பெரியவராய் இருப்பதால்தான் நம்மை நேசிக்கிறார்! அவரை துக்கப்படுத்தி உதாசீனப்படுத்தாதே!

உங்கள் சகோதரி,

Dr பிரேமா சுந்தர் ராஜ்

கிறிஸ்தவர் மத்தியில் Rapture என்று அதிகமாகப் பேசப்படும், திருச்சபை மேலே எடுத்துக்கொள்ளப்படும் நாளைக்குறித்து வீடியோ வெளியாகியுள்ளது!

இந்த சம்பவம் எப்பொழுது நடக்கும்?, அந்த சமயத்தில் என்ன நடக்கும்? இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள வீடியோவைக் காணுங்கள்! 

அனைவருக்கும் பகிருங்கள்!

https://www.youtube.com/@rajavinmalargal

Leave a comment