Archive | November 3, 2010

மலர்:1 இதழ்: 53ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா???

ஆதி:  39:7 சிலநாள் சென்றபின், அவன் எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்

 

யோசேப்பை ஏற்றிக்கொண்டு இஸ்மவேலரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றன. யாக்கோபு, ராகேலுக்கு பிறந்த செல்ல குமாரன், 17 வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான்!  அவன் என்றுமே கண்டிராத புதிய நாட்டில், புதிய மக்கள் மத்தியில் வாழப்போகிற  இந்த இளைய குமாரனின் உள்ளத்தில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும்? தன்னை நேசித்த தகப்பன் யாக்கோபை பற்றி எண்ணி வருந்தியிருப்பானா? அல்லது அன்பு தம்பி பென்யமீனை விட்டு செல்கிறோமே  என்று ஏங்கி இருப்பானா? அவன்  செல்லப்பிள்ளையாய் வளர்ந்த  வீட்டை விட்டு தூரமாய்… தூரமாய் சென்றன இஸ்மவேலரின் வண்டியின் சக்கரங்கள்.

எகிப்துக்கு வந்தவுடனே, அவனை இஸ்மவேலர் , பார்வோனின் பிரதிநிதியாகிய போத்திபாரிடம் விலைக்கு விற்றனர். வேதம் கூறுகிறது (ஆதி:39:5) கர்த்தர் அவன் செய்த யாவையும் வாய்க்க பண்ணினார். அதனால் போத்திபாரின் குடும்பமே ஆசிர்வாதத்தைப் பெற்றது. கர்த்தர் யோசேப்போடே இருந்தததை உணர்ந்து கொள்ள போத்திபாருக்கு அதிகம் நாட்கள் ஆகவில்லை.

என்ன அற்புதம்! யோசேப்பின் நல்லொழுக்கமும், மனசாட்சியுடன் வேலை செய்யும் குணமும், அவனோடு கர்த்தர் இருந்தார் என்பதை  பறைசாற்றிற்று. நம்முடைய செயலும் நடத்தையும், நம்முடைய வார்த்தைகளை விட உரத்த  சத்தமாய் பேசும் என்பது எவ்வளவு உண்மை!

 

ஆதி:39:6 கூறுகிறது, போத்திபார், தன்னுடைய ஆகாரத்தை தவிர , தனக்கு சொந்தமான எல்லாவற்றையும் யோசேப்பின் அதிகாரத்துக்கு உட்படுத்தினான். யோசேப்பின் கை பட்டதெல்லாம் பொன்னாயிற்று போத்திபாருக்கு. இதனால் தான் ஒருவேளை போத்திபாரின் மனைவி, யோசேப்பின் மீது கண்களைத் திருப்பினாள் போலும். அழகிய ரூபமுள்ளவன்! சௌந்தர்ய முகம்! இளம் வயது! கை தொட்டதெல்லாம் பொன்!  இதற்கு மேல் என்ன காரணம் வேண்டும் அவள் யோசேப்பை அடைய விரும்பியதற்கு.

நாம் இந்த தேவனை அறியாத பெண்ணை நியாயந்தீர்ப்பதற்கு முன் நம்மையும் சற்று பார்ப்போம்!

நாம் எத்தனை முறை நம் காரியத்தை சாதித்துக் கொள்ள அழுது, அடம் பிடித்து, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ,கண்ணீர் விட்டு, மற்றவர்களுடைய கவனத்தை நம் மேல் திருப்பி, நமக்கு வேண்டியதை பெற்றுக்கொள்கிறோம். ஒருவேளை போத்திபாரின் மனைவியுடைய நோக்கம் நம் நோக்கமாக இராதிருக்கலாம். ஆனால் வழிமுறைகள் ஒன்றுதானே! ஒருவேளை நாம் எந்த யோசேப்பையும் மயக்க முயற்சி செய்யாமலிருக்கலாம்! ஆனால் மற்றவர்களை நாம் அடக்கி ஆள முயற்சி செய்தாலும், இவளுக்கு சமம் தானே!

ஒருநாள் இவள் திட்டமிட்டு, மற்ற வேலையாட்களை ஒதுக்கி விட்டு,  புலி தன் இறையின் மீது பாய்வது போல  யோசேப்பின் மீது பாய்ந்து, ஒளிவு மறைவு இல்லாமல், நேரடியாக, என்னோடு சயனி என்று அழைப்பதைப் பார்க்கிறோம்.

யோசேப்பு இதுவரை தன் எஜமானியின் எல்லா கட்டளைகளையும் பொறுப்புடன் செய்திருக்கிறான். அவள் கட்டளையை மீறி, அவளுக்கு முடியாது என்று பதில் சொன்னால்  அவன் வேலையே போய்விடும்!

என்ன சூழ்நிலை இது பாருங்கள்! என்றாவது நம் வாழ்க்கையில் தவறான ஒரு காரியத்தை நாம் செய்ய மாட்டேன் என்றால் வேலையே போய்விடும் என்ற நிலையில் வந்திருக்கிறோமா? எத்தனை பேர் கள்ளக்கணக்கு காட்டினால்  தான் இந்த இடத்தில் வேலை செய்ய முடியும் என்ற நிலையில் உள்ளீர்கள்? என்னுடைய ‘பாஸ்’ ஐ  கொஞ்சம் அனுசரித்தால் தான், நான் இந்த சம்பளம் வாங்க முடியும் என்று எத்தனை பேர் கூறுகிறீர்கள்? யோசேப்பு இந்த இடத்தில் சற்று ‘அனுசரித்து’ போயிருந்தால் உத்தியோகத்தை இழந்திருக்க மாட்டான் அல்லவா?

ஆனால் யோசேப்பு என்ன கூறுகிறான் பாருங்கள்! (ஆதி:39:9)’ நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி என்றான்  யோசேப்பு இந்த பாவத்துக்கு உடன் படாததற்கு ஒரே காரணம் என்ன தெரியுமா? அவன் எந்த சூழ்நிலையிலேயும் தான் யாருக்கு சொந்தமானவன் என்ற உண்மையை மறந்து போகவில்லை. தேவனுடைய பிள்ளையாய் வாழ்ந்த அவன், தன்  வேலைக்கே ஆபத்து, ஒருவேளை உயிருக்கே ஆபத்து ஏற்ற நிலையிலும், தேவனை துக்கப் படுத்த விரும்பவில்லை. தான் இந்த பாவத்துக்கு உடன்பட்டால், வேறு யாருக்கும் அது தெரியாவிட்டாலும், கர்த்தருக்கு தெரியும்என்று அறிந்து நடந்தான்

அவள் கேட்டதோ ஒரே ஒரு கணம் அவனோடு சிற்றின்பம்! ஆனால் யோசேப்புக்கோ அது தேவனுக்கு விரோதமான பொல்லாங்கான பாவமாய் காணப்பட்டது.

ஜெபம்: ஆண்டவரே! ஒரு நிமிடமும் உம்முடைய அன்புக்கு மாறாக என் செயலிலோ , எண்ணத்திலோ பாவம் செய்யாதபடி என்னைக் காத்துக் கொள்ளும்.  ஆமென்!

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.