Archive | November 5, 2010

மலர்:1இதழ்: 55 காரிருளில் ஓர் ஒளி!

 

ஆதி:  39:20 “ யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான், அந்த சிறைச்சாலையில் அவன் இருந்தான்.

 

யாக்கோபின் செல்லக் குமாரனுக்கு நடந்தது என்ன? திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான் யோசேப்பு. அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது? திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல் எங்கிருந்து வந்தது?

ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக நடந்த சம்பவங்கள், அவனை இருண்ட சிறைச்சாலைக்கே கொண்டு வந்து விட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையை  கடந்து வருபவர்களின் வேதனை, அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியம். யோசேப்பு மட்டும் அல்ல, சிறுவயதிலிருந்தே தேவனை நேசித்த தாவீது, சவுலினால், ஒரு மிருகத்தைப் போல வேட்டையாடப் பட்டான். தேவனுடைய வல்லமையை இறங்கி வர செய்த எலியா தீர்க்கதரிசி, தன் உயிருக்காக, தப்பித்து ஓட வேண்டியிருந்தது.

அநேக தேவனுடைய பிள்ளைகள் அனுபவித்த இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான அனுபவத்தை, நானும், என் குடும்பமும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அனுபவிக்க கர்த்தர் அனுமதித்திருந்தார். எங்களது நிறுவனத்தில் வேலை செய்த ஒரு பணியாளனின் மாய்மால நாடகத்தினால், நாங்கள் பொய் பழிசுமத்தப் பட்டு, யோசேப்பைப் போல இருண்ட பாதையை கடந்து வந்தோம். இத்தனை வருடங்களாய் தேவனுடைய ஊழியத்தை உண்மையாய் செய்து வந்த நமக்கு ஏன் இந்த துன்பத்தை தேவன் அனுமதித்தார் என்று எங்கள் உள்ளம் ஒருநாளும் சோர்ந்து போகவில்லை, கர்த்தர் ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் கடந்து வந்த அக்கினியில் எங்களோடு இருந்ததை உணர்ந்தோம்!  

 இப்படிப்பட்ட இருளான பாதைக்குள் செல்பவர்கள் கர்த்தர் மேல் மனஸ்தாபப் படுகிறதை கண்டிருக்கிறேன். யோசேப்பு என்ன குற்றம் செய்தான், இப்படிப்பட்ட தண்டனையை அனுபவிப்பதற்கு? தாயை இழந்தவன், சகோதர்களால் வெறுக்கப்பட்டு இஸ்மவேலரிடம் விற்கப்பட்டவன், மாமிச இச்சை கொண்ட ஒரு பெண்ணால் பொய் பழி சுமத்தப் பட்டவன், தேவனிடம், நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் என்னைக் கைவிட்டீர் என்று குறை கூறியிருக்கலாம், ஆனால் யோசேப்பு தேவனைக் குற்றப்படுத்தவில்லை.

 பாதாளத்தைப் போன்ற இருள் சூழ்ந்த வேளையிலும், அவன் கண்கள் தேவனை நோக்கி பார்த்து, ஆண்டவரே நான் உமக்கு சொந்தம், நான் பாவத்தில் விழவில்லை, உம்முடைய பிள்ளை என்ற பெயரைக் காத்துக் கொண்டேன் என்று கூறியன!

II  கொரி  4:8 ல் பவுல், நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை, கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை” என்று கூறுகிறார்.

என்ன அருமையான அனுபவம் நிறைந்த வார்த்தைகள்!

யோசேப்பைப் போல, பவுலைப் போல, நீயும் நானும் ஒருவேளை, செய்யாத குற்றத்துக்காக தண்டனையையோ , வியாதி என்ற சிறைச்சாலையையோ, அல்லது குடும்பத்தில் பிரச்சனைகள் என்ற இருளையோ, பணத்தேவைகள் என்ற புயலையோ, கடந்து கொண்டிருக்கலாம்! ஒருவேளை கர்த்தர் மேல் சந்தேகம் என்கிற கலக்கம் கூட வந்திருக்கலாம்!

 திகையாதே!  ஆதி:39:21 கூறுகிறது, “கர்த்தரோ யோசெப்போடே இருந்து அவன்மேல் கிருபை வைத்து சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்கு கிடைக்கும்படி செய்தார்.”

 துயரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? தேவன் மீது சந்தேகமா? அவரைப் பார்க்க முடியாதபடி காரிருள் சூழ்ந்திருக்கிறதா? சீக்கிரத்தில், ஊடுருவும் ஒரு ஒளியில்,  உன்னை ஏந்தி, சுமக்கிற,  இரு அன்பின் கரங்களை காண்பாய்!

 வனாந்திரத்துக்கு அப்பக்கம் கானான் தேசம் காத்திருக்கிறது! கலங்காதே!

 ஜெபம்: ஆண்டவரே! தேவனே! இருள் நிறைந்த வாழ்க்கையில், துன்பங்கள் நெருக்கும்போது, உம்முடைய ஒளியை ஏன் கண்கள் காண உதவி தாரும்! ஆமென்.