Bible Study

மலர்:1இதழ்: 105 சித்தீமில் நடந்தது என்ன?

 

எண்ணாகமம்:25:1 – 2  “ இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில்,ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே, வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள்.

அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள். ஜனங்கள் போய் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டார்கள்.”

வீட்டில் கேக் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்ஞள் கருவையும் ஏன் பிரிக்கிறோம் என்று நன்கு தெரியும்! வெள்ளைக்கரு கேக்கை மிருதுவாகப் பண்ணும் ஆனால் மஞ்சள் கருவோ கனமாக இருப்பதால், வெள்ளைக் கருவின் தன்மையையே கெடுத்து, அதை மிருதுவாகவோ அல்லது வெண்மையாகவோ செய்ய விடாது. சில நேரங்களில் நாம் இதை பிரிக்க முயற்சிக்கும்போது, சிறிது மஞ்சள் கரு எப்படியாவது வெள்ளையுடன் ஒட்டிவிடும். அதனால் பெரிய விளைவு இல்லை என்றாலும், அதன் கனமான தன்மை வெள்ளைக் கருவை நுரைத்து எழும்ப விடாது.

இது இயற்கை அல்லவா? வேறு வேறு தன்மை கொண்ட இரு பொருட்கள் ஒன்றாக இணையும்போது, அவை ஒன்றை ஒன்று சரிவர வேலை செய்ய விடாது. அப்படி இருக்கும் போது, இருவிதமான வழிகளைக் கொண்ட விசுவாசிகளும், அவிசுவாசிகளும் எவ்விதம் ஒன்றாய் கலந்து வாழ முடியும்?

அதனால் தான் கர்த்தர் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியெ கொண்டு வந்து, அவர்கள் தமக்கு பரிசுத்த ஜனமாக வாழ விரும்பினார் என்று லேவி: 22 ல் வாசித்தோம். அவர்கள் உலகத்தின் மற்ற தேவர்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தம்முடைய சொந்த பிள்ளைகளாக ஜீவிக்க விரும்பினார். அவர்களோடு பேசினார், அவர்களை மன்னாவினால் போஷித்தார், அவர்கள் மத்தியில் தம்முடைய மகிமையில் வாசம் பண்ணினார், அவர்களை வழிநடத்தினார். எல்லாவற்றிர்கும் மேலாக தான் பரிசுத்தர் ஆதலால் அவர்களும் பரிசுத்தராயிருக்க வேண்டும் என்று தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர்கள் தம்மை மாத்திரம் வழிபடவேண்டும், அவர்களுக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டார்.

ஆனால் என்ன பரிதாபம்! அங்கிருந்து கடந்து நாம் எண்ணாகமத்துக்கு வருமுன் இஸ்ரவேல் மக்கள் மோவாபிய பெண்களோடு வேசித்தனம் செய்ததைப் பார்க்கிறோம்.. எண்ணா:25:1-3 வாசிக்கும்போது முதலில் மோவாபிய பெண்கள் மேல் மோகம் கொண்ட இஸ்ரவேல் மக்கள், வெகு சீக்கிரம் விருந்துக்கு போய் அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டர்கள். அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டதால் இஸ்ரவேலர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது என்று வாசிக்கிறோம்.

அந்த அதிகாரத்தை தொடர்ந்து வாசிப்பீர்களானால், கர்த்தர் அவர்களை வாதித்தார், அதனால் இறந்தவர்கள் இருபத்தினாலாயிரம் பேர் என்று பார்க்கிறோம். கர்த்தர் அவர்களிடம் அவருடய உக்கிர கோபம் நீங்கும்படி, தவறு செய்த யாவரையும் தூக்கிலிடும்படி கூறுகிறார்.

என்ன நடந்தது? அவர்கள் அழுதுகொண்டு நிற்கையில், ஒருவன் மீதியான பெண் ஒருத்தியை தன் மார்பில் சாய்த்துக்கொண்டு வருகிறான். அதைக்கண்ட கர்த்தருடைய ஆசாரியனான பினெகாஸ், (ஆரோனின் குமாரனான எலெயாசரின் மகன்) அவர்கள் வேசித்தனம் பண்ணிக்கொண்டிருந்த அறைக்குப் போய் அவர்கள் இருவரையும் ஈட்டியால் குத்துகிறான், அப்பொழுது தேவனுடைய உக்கிரம் தணிந்தது, வாதை நின்று போயிற்று என்று படிக்கிறோம்.

இந்த சம்பவத்தின் மூலம் கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு, அவிசுவாசிகளோடு சம்பந்தம் கொள்வது அவருக்கு வெறுப்பான ஒரு காரியம் என்று விளங்கப்பண்ணினார்.

இதையே பவுல் நமக்கு எழுதும்போது ( 11 கொரி: 6:14)

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? என்றார்.

கொடிய அனுபவத்தின் மூலம் இஸ்ரவேல் மக்கள் பரிசுத்தமான வாழ்க்கைக்கு பிரித்தெடுக்கப்படுதல் என்றால் என்ன எனபதைப் புரிந்து கொண்டார்கள்.

கர்த்தருக்கு பிரியமான பாத்திரமாக நீ வாழ முடியாமல் தடை செய்யும் காரியம் ஏதாவது உன் வாழ்வில் உண்டா? அவிசுவாசியோடு மார்பில் சாய்ந்து கொண்டிருக்கிறாயா? மாறுபாடான வழிகளைக் கொண்ட இருவர் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது!

கர்த்தர் சித்தீமிலே இஸ்ரவேலரை எச்சரித்தது போல், இன்று உன்னையும் எச்சரிக்கிறார்!

”உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” ( 1 பேது:1:15)

 

இது உங்களுக்கு ஒர் எச்சரிக்கை!  சித்தீம் அனுபவம் உனக்கு வேண்டாம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

1 thought on “மலர்:1இதழ்: 105 சித்தீமில் நடந்தது என்ன?”

  1. Excellent thoughts and well defined deep study! May the Good Lord continue to use you to strengthen many people in their faith to walk with our Lord. God bless all your efforts.

Leave a reply to Samuel Sunder Raj Cancel reply