கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி!

நியாதிபதிகள்:  4 :5 ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்.”

நாம் யோசுவா புத்தகத்தை படித்து விட்டு, இப்பொழுது, நியாதிபதிகள் படிக்க ஆரம்பிக்கிறோம். இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் அற்புதமான பெண்மணி தெபோராளைப் பற்றி படிக்கிறோம்.தேவனாகிய கர்த்தரால் , இஸ்ரவேல் மக்களை நியாயம் தீர்க்கும் நியாதிபதியாக நியமிக்கப்பட்டவள்.

தெபோராளின் வாழ்க்கையை நாம் படிக்கும் இந்த நாட்களில்  கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியக்காரரிடம் என்னென்ன தகுதிகளை கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

நாம் சற்று ஆதியாகமத்தை திரும்பி பார்க்கலாம். நோவா கர்த்தரால் அழைக்கப்பட்டு பேழையை கட்டும்படி உத்தரவு பெற்றபோது, 120 வருடங்கள் பேழையை கட்டினான். ஒரு சாதாரண மனிதனாக  தன் கையாலே தச்சு வேலை செய்து பேழையை கட்டினபோது அவனைப் பார்த்து எத்தனைபேர் நகைத்திருப்பார்கள். இத்தனை வருடங்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருந்தானே இந்த  நோவா ஒரு சாதாரண மனிதன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை ஒரு அசாதாரணமானவன்!

யாத்திராகமத்திலிருந்து மோசேயைப் பார்ப்போம். பார்வோனின் அரண்மனையில் 40 வருடங்கள் பயிற்சி எடுத்த அவன் தான் கர்த்தருடைய வேலையை செய்ய சரியான மனிதன் என்றுதான் நானும் நீங்களும் நினைத்திருப்போம். ஆனால் கர்த்தர் அப்படி  நினைக்காமல் அவனை மீதியான் காட்டில் ஆடுகள் மேய்க்கும் பயிற்சியை 40 வருடங்கள் கொடுத்தார். பின்னர் கர்த்தர் கடைசியில் தன்னுடைய மந்தையை மேய்க்க அழைத்தபோது அவன் உடனே சரி என்றானா? கர்த்தரிடம் ஒரு மைல் தூர காரணங்கள் கொடுத்தான். ஏதேதோ காரணம் சொல்லிவிட்டு கடைசியில் என்னால் சரியாக பேசக்கூடத் தெரியாதே என்றானே அந்த மோசே ஒரு சாதாரண மனிதன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை ஒரு அசாதாரணமானவன்!

இப்பொழுது நாம் நியாதிபதிகள் புத்தகத்துக்கு வந்திருக்கிறோம். யோசுவா இறந்து விட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் மேய்ப்பனில்லாத ஆடுகள் போல இருந்த சமயத்தில் கர்த்தர் நியாதிபதிகளை எழுப்பினார். 40 வருடங்கள் காலேபின் மகள் அக்சாள் மணந்த ஒத்னியேல் என்பவன்,  இஸ்ரவேலை அமைதியாய் வழிநடத்தினான். காலேப் சரியான மாப்பிள்ளையைத்தான் தன் மகளுக்கு தேர்ந்தெடுத்திருந்தான்.

நியாதிபதிகள் இரண்டு, மூன்று அதிகாரங்களில் நாம் இஸ்ரவேலின் தோல்வியுள்ள சோர்ந்து போன வாழ்க்கையைப் பார்க்கிறோம் . அப்படிப்பட்ட வேளையில்ஒரு பெண், வேதத்தில் இரண்டாவது முறையாக தீர்க்கதரிசி என்று அழைக்கப் பட்டவள்,   நியாதிபதியாக இருப்பதைப் பார்க்கிறோம். அவள்தான் தெபோராள்.

யார் இந்த அசாதாரணமானப் பெண்?

இவள் லபிதோத்தின் மனைவி என்று வேதம் சொல்கிறது. லபிதோத் என்பதற்கு தீவட்டி என்று கூட அர்த்தம் உண்டு, அதனால் அவள் தீவட்டி பெண் என்றும் அழைக்கப்பட்டாள்.

நியாதிபதிகளைப் பார்க்கும்போது, அவர்களுடைய அசாதாரணமான திறமைகள் அவர்களை நியாதிபதிகளாக உயர்த்தவில்லை. சாதாரணமானவைகளை எடுத்து அசாதாரணமாக்கிய திறமையே அவர்களை நியாதிபதிகளாக்கியது என்று நினைக்கிறேன்.

தீவட்டி என்பது சாதாரணமான வார்த்தைதான், ஆனால் தெபோராள் தீவட்டி போன்று  ஒளிக்கதிர்களை வீசியதால் அசாதாரணமானாள்.

தேவனாகிய கர்த்தரின் வல்லமையால் சாதாரணமான நாம் கூட அசாதாரணமாகலாம்!

நான் மிகவும் சாதாரணமானவன் அல்லது சாதாரணமானவள், நான் எப்படி கர்த்தருடைய ஊழியத்தை செய்வேன் என்று நினைக்கிறாயா! கர்த்தர் நம்மைப் போன்ற சாதாரணமானவர்களைத் தான் தம்முடைய வேலைக்காக உபயோகப்படுத்துவார்.

ஒருவேளை மிக சாதாரணமான உங்களில் ஒருவரை கர்த்தர் தம்முடைய ஊழியத்தில் , உலகத்தின் இருளை நீக்கும் தீவட்டியாக, ஒளியாக உபயோகப்படுத்துவாரோ என்னவோ யாருக்குத் தெரியும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment