Archive | August 11, 2016

மலர் 7 இதழ்: 452 பனித் துளிகள் பனிக்கட்டியாவது போல!

நியாதிபதிகள் : 4 : 8   “அதற்கு பாராக்; நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.

இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை வரும் என்பது தமிழ் பழமொழி.

என்னுடைய  35 வருட குடும்ப வாழ்க்கையிலும், ஊழியத்திலும், தொழில் சம்பந்தமான காரியங்களிலும்,  நானும் என் கணவரும் சேர்ந்து,  இருவருடைய தாலந்துகளையும் ஒன்று படுத்தி செய்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகவே முடிந்திருக்கின்றன.

நம்முடைய நாட்டில் எல்லோருக்கும் கிரிக்கெட் பைத்தியம் உண்டு.  நம்முடைய அணியின் வெற்றிக்கு சச்சின் மாதிரி ஒரே ஒரு நல்ல விளையாட்டு வீரன் இருப்பதைவிட, பல  நல்ல வீரர்கள் இருக்கும் ஒரு கூட்டணியாக இருப்பது தான் மிகவும் அவசியம் என்பது நமக்கு தெரிந்த உண்மையே. எந்த ஒரு காரியமும், அது விளையாட்டோ, வீடோ, வேலையோ எதுவாயினும் ஒரு கூட்டணியாக செய்யும்போது தான் நாம் வெற்றி சிறக்க முடியும்.

நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில், பாராக் தெபோராளைப் பார்த்து, சிசெராவைக் கொல்ல தன்னோடு வரும்படி அழைப்பதைப் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல அவள் தன்னோடு வராவிட்டால் தானும் போகப்போவதில்லை என்றான். இதை வாசிக்கிற சிலர் பாராக்கை கோழையாகப் பார்க்கிறார்கள். ஒரு கோழையாகப் பார்க்கிறார்கள். ஒரு பெண் கூட வராவிட்டால் யுத்தத்துக்கு போகமாட்டேன் என்ற கோழைத்தனம்!

நீங்கள் இதை வாசிக்கும்போது நான் உங்களோடு தெபோராளைப்பற்றியும், பாராக்கைப் பற்றியும் சில வித்தியாசமான கருத்துக்ளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

கானானிய  ராஜாவாகிய யாபீனின் சேனாதிபதியாகிய சிசெரா, 20 வருடங்களாக , 900 இரும்பு இரதங்களோடு அடக்கி ஆண்டான். ஜனங்கள் பயத்தினால் தொடை நடுங்கிப் போயிருந்த சமயம் அது! இஸ்ரவேல் மக்களின் கூக்குரலைக் கேட்ட தேவனாகிய கர்த்தர் அவர்களை சிசெராவின் கைகளுக்கு தப்புவிப்பேன் என்று வாக்குக் கொடுத்தார். இது பாராக்கும் அறிந்த விஷயமே. அவனுடைய உள் மனதுக்கு வெற்றி  யார்  பக்கம் என்று தெரியும்.

என்னதான் நம் உள் மனது இந்தக் காரியம் நம் பக்கமாகத்தான் முடியும் என்று சொன்னாலும், சில நேரங்களில் நாம் உடனே அதில் ஈடு பட சற்று சிந்திக்கிறோம் அல்லவா! அப்படித்தான் பாராக்கும்  தயங்கினான். தங்கள் கப்பலின் மாலுமி தேவன் என்பது அவனுக்குத் தெரியும்! கர்த்தர் வாக்கு மாறாதவர் தங்களைக் கைவிட மாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும், அதே சமயத்தில் எதிரியாகிய சிசெரா வலிமையுள்ளவன், அவனை வலிமையோடு எதிர்த்து போராட வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். இந்த இடத்தில் நான் பாராக்கின் சிந்தனையில்  நியாயம் உள்ளது என்று நம்புகிறேன்.

பாராக் தன்னுடைய சேனை மாத்திரம் சிசெராவை எதிர்த்தால் போதாது, கர்த்தருடைய பிள்ளைகள் அனைவரும், பெண்களோ அல்லது ஆண்களோ, எல்லோரும் சேர்ந்து அவனை எதிர்க்க வேண்டும் என்று எண்ணினான். ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து போராடினால் வெற்றி கிடைக்கும் என்று நம்பினான்.

நாம் பனிப் பொழிவைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்.  ராஜாவின் மலர்களின் வாசகர்களில் பலர் கனடா தேசத்தில் இருக்கிறீர்கள்! பனியைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. பனி கட்டியாகவா வானத்திலிருந்து பொழிகிறது? சிறு சிறு துளிகளிகளாக பூமிக்கு வரும் பனி, ஒன்று சேர்ந்தவுடன் உடைத்து எடுக்க வேண்டிய அளவுக்கு கடினமாகி விடுகின்றன அல்லவா!

நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்று பாராக் சொன்ன விதமாக, கர்த்தருடைய பிள்ளைகளான பாராக்கும், தெபோராளும் சேர்ந்து ஒற்றுமையாக, தேவனுடைய அணியாக, சிசெராவை எதிர்த்து வீழ்த்தும் காரியமாக ஒரு மனதோடு போவதை காண்கிறோம்.

இதைதான் இன்று கர்த்தர் தம்முடைய பிள்ளைகளாகிய நம்முடைய வாழ்க்கையிலும் எதிர்பார்க்கிறார்.

நாம் தனியாக நின்று வாயினால் விசில் அடித்தால் கேட்க இனிமையான இசையாகாது! கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இசைக்குழுவாக இசைத்தால் கேட்கிறவர்கள் அத்தனை பேரையும் இனிமையில் ஆழ்த்தலாம் அல்லவா!

சிந்தியுங்கள்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்