கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 603 அப்பப்பா! என்ன போலியான முகபாவம்!

1 சாமுவேல் 15: 13,14  சாமுவேல் சவுலினிடத்தில் போனான்.சவுல் அவனை நோக்கி நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர். கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.

செய்த தவறை மறைக்கும் ஒருவர் நாவில் தேன்ஒழுகும் வார்த்தைகளை பேசுவதைப்பார்த்து இப்படியும் ஒருவர் போலியாக இருக்கமுடியுமா என்று வியந்த அனுபவம் உங்களுக்கு உண்டா?

இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் இங்கு அப்படித்தான் நடந்து கொள்கிறான். அமலேக்கியருடன் செய்த யுத்தத்தில் கர்த்தர் சாமுவேல் மூலமாய்க்கூறியபடி எல்லாவற்றையும் அழிக்காமல் தனக்குப்பிடித்தமானவற்றை பாதுகாத்ததுமன்றி, சாமுவேல் வரும்வரைக் காத்திராமல் தகனபலிகளை செலுத்தியும் விட்டான் என்று பார்த்தோம்.

இவ்வளவு தவறுகளை செய்த அவன், சாமுவேலைக்கண்டதும் சற்றும் மனம் கூசாமல்,  ‘ நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்பதைப் பார்க்கிறோம். இந்த வார்த்தைகள் நடந்த சம்பவத்தோடு எப்படி பொருந்தும்? அதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? நம்ம ஊரில் யாரையாவது சோப்பு போடுவது, ஐஸ் வைக்கிறது,  வெண்ணையைத் தடவுகிறது என்ற வார்த்தைகளைக்  கேட்டிருக்கிறீர்களா? அதைப்போலத்தான் இது!

சவுல் இப்படி கீழ்ப்படியாமல் தன் சொந்த இஷ்டப்படி நடப்பது இதுதான் முதல்தடவை அல்ல, கடைசிதடவையும் அல்ல!

இதை வாசிக்கும்பொழுது நானும் பலதடவைகள் சவுலைப்போல நடந்து கொண்டதை உணர்ந்தேன். கர்த்தர் என்னையும் பார்த்து பலமுறை என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்று கேட்டிருக்கிறார். அது நான் கீழ்ப்படியாத ஒரு காரியமாயிருக்கலாம், அல்லது நான் கர்த்தரிடம் மறைக்க நினைத்த ஒரு காரியமாயிருக்கலாம். இதை போலியான முகபாவத்தோடு நான் செய்யும் எந்த ஸ்தோத்திரபலிகளும் மறைக்க முடியாது.

சாலொமோன் தானுடைய உன்னதப்பாட்டு 2:15 ல், திராட்சைத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள் என்று கூறியது போல சிறு பாவங்கள், சிறு பொய்கள், சிறு பித்தலாட்டம், சின்னஞ்சிறு ஆசைகள் இவைகள் தான் சிறுநரிகளாய் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை அழித்துவிடும். ஜாக்கிரதை!

நாம் கர்த்தரை சந்திக்கும் நாளில் அவர் நீ எதையெல்லாம் எனக்காக செய்தாய் என்று கேட்கமாட்டார். நீ எனக்கு உண்மையாக இருந்தாயா என்றுதான் கேட்பார்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

Leave a comment