கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 608 தெய்வீகப் பிரசன்னம்!

1 சாமுவேல் 16: 23 அப்படியே தேவனால் அனுப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமணடலத்தை எடுத்து, தன் கையினாலே வாசிப்பான். அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான்.

அழகான வர்ணம் தீட்டும் இருவரிடம் ஒரு அமைதியான சூழலை வரையும்படி கூறினர்.

ஒருவர் அமைதியை சித்தரிக்க, இரு மலைகளின் நடுவே ஓடும் ஒரு அமைதியான நீரோடையைத் தெரிந்துகொண்டார்.

மற்றொருவரோ மிக விரைவாக ஓடிவரும் ஒரு நீர்வீழ்ச்சியையும், அதன் அருகே காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட ஒரு மரத்தின் உச்சியில் நீர்வீழ்ச்சியின் வேகத்தால் தெரித்த நீரில் நனைந்த ஒரு சிறிய பறவை தன்னுடைய கூட்டில் அமைதியாக அமர்ந்திருந்ததையும் சித்தரித்தனர்.

இதை வாசிக்கும்போது நான் தெய்வீக பிரசன்னம் என்பது நாம் தேவனுடைய ஆலயத்தில் தான் உணரமுடியுமா? காற்றினால் அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கையில் நம்முடைய வேதனைகளின் மத்தியில் அவருடைய பிரசன்னத்தை உணருவதில்லையா என்று நினைப்பேன்.

சவுல் தொடர்ந்து தேவனுடைய பிரசன்னத்தைத் தள்ளியதால் இன்னொரு பிரசன்னம் அவனைப்பற்றிக்கொண்டது. இந்த அதிகாரத்தில் 14 -23 வரை வாசிக்கும்போது என் உள்ளம் வேதனைப்பட்டது.

இந்த 10 வசனங்களில் நான்கு முறை ‘தேவனால் அனுப்பபட்ட ஆவி’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அப்படியானால் தேவன் பொல்லாத ஆவியை அனுப்பினாரா? என்று வேதனையோடு சிந்திப்பேன். நாம் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று கர்த்தராகிய இயேசு சொன்னதுதான் நினைவுக்கு வரும். அவனுடைய சொந்த முடிவினாலே கர்த்தருடைய ஆவியானவர் அவனை விட்டு விலகியதால் அசுத்த ஆவி அவனுக்குள் வந்து அவனை அலைக்கழித்தது. அவன் எவ்வளவுதூரம் அந்த ஆவியால் அலைக்கழிக்கப்பட்டான் என்பதை இன்னும் சில அதிகாரங்கள் தள்ளி நாம் படிக்கலாம். ஒருமுறை தாவீதைக் கொலை செய்யும்படி தன்னுடைய கையிலிருந்த ஈட்டியை எரியும் அளவுக்கு அவனைக் கோபத்தினால் அலைக்கழித்தது அந்த ஆவி.

இந்தப் பின்னணியில் சவுலை அசுத்த ஆவி அலைக்கழிக்கும்போதெல்லாம் தாவீது அங்கு அழைக்கப்படுவான். அவன் வாசித்த சுரமண்டல இசையானது சவுலை ஆறுதல் படுத்தி அந்த பொல்லாத ஆவி அவனை விட்டு அகலச் செய்யும்.

இந்த இடத்தில் நாம் தாவீதைப்பற்றிப் படிக்கும் வரை அவன் தன் தகப்பனின் ஆடுகளைத்தான் மேய்த்துக்கொண்டிருந்தான். அவன் வனாந்திர வெளியில் ஆடுகளோடு இருந்தபோதெல்லாம் அவன் கண்கள் பரலோக தேவனை நோக்கிப் பார்க்கும். அந்த சூழல்தான் அவனுக்கு பரலோக தேவனின் பிரசன்னத்தை தன் சுரமண்டலத்தின்மூலம் வேதனையில் இருக்கும் ஆத்துமாக்களுக்கு  கொண்டுவர உதவியது.

1 சாமு: 16: 17 ல் சவுல் தன்னுடைய ஊழியரை நோக்கி, நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத்தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்பதையும், அந்த வேலைக்காரரில் ஒருவன், இதோ பெத்லெகேமியனான ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன், கர்த்தர் அவனோடு இருக்கிறார் என்பதையும் படிக்கிறோம்.

தாவீதைப் பற்றி அந்தப்பகுதியில் வாழ்ந்த எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது.

ஒரு நிமிடம்!  நம் குடும்பத்திலோ அல்லது நம் நண்பர்கள் மத்தியிலோ யாருக்காவது ஆறுதல் தேவைப்பட்டால் தாவீதைப் போல நம்மை அழைப்பார்களா? நம்மால் பரலோக தேவனின் ஆறுதலை வேதனையிலிருக்கும் ஒரு உள்ளத்துக்கு அளிக்க முடியுமா? நம்மோடு கர்த்தர் இருக்கிறார் என்று சாட்சி கூறுவார்களா?

நாம் இன்று தாவீதைப்போல நம்முடைய சுரமண்டலத்தாலும், சாட்சியாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்குக் கொடுத்து சென்ற மெய்சமாதானத்தை வேதனையினால் அலைக்கழியும் மக்களுக்குக் கொடுக்க நமக்கு உதவிசெய்வாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

Leave a comment