Archive | November 1, 2019

இதழ்:783 பெலவீனத்தில் பெலன்!

2 சாமுவேல் 17: 1-4  பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி, நான் பன்னீராயிரம் பேரைத் தெரிந்து கொண்டு, எழுந்து இன்று இராத்திரி தாவீதைப் பின் தொடர்ந்து போகட்டும். அவன் விடாய்த்தவனும் கைதளர்ந்தவனுமாயிருக்கையில் நான் அவனிடத்தில் போய் அவனைத் திடுக்கிடப் பண்ணுவேன். அப்போது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால் நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டி, ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாக திரும்பப்பண்ணுவேன். இப்படி செய்ய நீர் வகைதேடினால் எல்லாரும் திரும்பின பின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான். இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும் இஸ்ரவேலுடைய சகல மூப்பரின் பார்வைக்கும் நலமாய்த் தோன்றியது.

தேவனாகிய கர்த்தர் தம்முடைய வற்றாத கிருபை என்ற ஊற்றிலிருந்து நமக்கு நன்மையான வாழ்க்கையைத் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். கர்த்தருடைய வாக்குத்தத்தம் அதோடு நிறக்காமல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறியது போல நம்முடைய பெலவீனத்தில் பெலன் கொடுப்பதாகவும் உள்ளது!

இன்றைய வேதாகமப்பகுதி எனக்கு தேவன் அளிக்கும் பெலனைத்தான் ஞாபகப்படுத்தியது!

ஏனெனில் தாவீது பெலமற்றுப் போனதாக சங்: 22: 14 – 15 ல் கூறுகிறான்.

தண்ணீரைப்போல ஊற்றுண்டேன், என் எலும்புகளெல்லாம் கட்டு விட்டது, என் இருதயம் மெழுகு போலாகி என் குடல்களின் நடுவே உருகிற்று. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது, என் நாவு மேல் நாவோடே ஒட்டிக்கொண்டது,என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

இங்கு தாவீது தன்னுடைய பெலனை காய்ந்து நொறுங்கிப்போன ஓடுகளுக்கு ஒப்பிடுகிறான். நீங்கள் என்றாவது இப்படி உணர்ந்ததுண்டா? பெலவீனமாய், நொறுண்ட பாத்திரமாய்,  ஒரு துளி பெலன் கூட இல்லாத சரீரமுடையவராய், அழக்கூட பெலன் இல்லாத ஒருவராய் இருந்ததுண்டா?

அப்படிதான் அன்று தாவீது இருந்தான். ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அவன் அப்படியே இருந்துவிடவில்லை! தாவீது அன்று தம்முடைய பெலவீனத்தின் மத்தியில் ஒருவர் தன்னை நிரப்ப முடியும் என்பதை உணர்ந்தான்! ஆதலால் தாவீது கன்மலையான கர்த்தரைத் தேடினான். அங்கு அவனுக்கு வேண்டிய பெலன் குறைவில்லாமல் வற்றாத நீரூற்றாய் இருந்தது!

இன்றைக்கு நாம் பார்க்கிற அகித்தோப்பேல் வேறு யாருமல்ல! அவன் தாவீதின் மனைவியாகிய பத்சேபாளுடைய தாத்தா தான்! அவன் தாவீதின் முதுகைக் குத்த வகைதேடிக் கொண்டிருந்த அவனுடைய குமாரன் அப்சலோமுக்கு அறிவுரை கொடுக்கிறான்.

இந்த அகித்தோப்பேலின் பெயருக்கு அர்த்தத்தைப் பார்த்தால் சிரிப்புதான் வந்தது! முட்டாளின் சகோதரன் என்பதே அதன் அர்த்தம்! இந்தப் பெயரைக் கொண்ட ஒருவரின்  அறிவுரையை ஏற்குமுன் அப்சலோம் சற்று சிந்தித்திருக்க வேண்டும் என்றே தோன்றிற்று! ஆனால் அப்சலோம் மட்டுமல்ல இஸ்ரவேலின் மூப்பரும்  இந்த அகித்தோப்பேலின் அறிவுரையை ந்லமானதாக எண்ணினர்.  தாவீதைக் கொலை செய்யும்படி கொடுக்கப்பட்ட அறிவுரை முட்டாள்த்தனமாய்த் தோன்றவில்லை! அதில் ஒரே ஒரு குறை மட்டும் இருந்தது. அதில் தேவனாகிய கர்த்தருக்கு  இடமே கொடுக்கப்படவில்லை! கொடுத்திருந்தால் ஒருவேளை தாவீதுக்கு கர்த்தர் கொடுத்திருந்த பெலத்தை அறிந்திருப்பார்கள்.

இன்று தாவீதைப்போல விடாய்த்து காணப்படுகிறீர்களா? பெலனற்று சோர்ந்து காணப்படுகிறீர்களா? வாழ்க்கையின் முனைக்கே வந்துவிட்டேன் என்று நொறுங்கிக் காணப்படுகிறீர்களா? தாவீதைப்போல கன்மலையாகிய கிறிஸ்துவிடம் வாருங்கள்! அவர் உங்களுடைய பெலவீனத்தில் அளிக்கும் பெலன் உங்களுக்கே ஆச்சரியத்தைத் தரும்!

யுத்தத்துக்கு தேவையான பெலத்தை கர்த்தர் தாவீதுக்கு அருளினார்! உங்களுக்கும் அருளுவார்!

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். (சங்:46:1)

இந்த மாதத்துக்குத் தேவையான பெலனைக் கர்த்தர் நமக்கு அளிப்பாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்