Archive | November 28, 2019

இதழ்: 802 வானத்தில் தோன்றும் அடையாளம்!

சங்: 51: 9 – 11  என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை  என்னிடத்திலிருந்து  எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்ற தலைப்பில் இன்று பத்தாவது நாளாகப் படிக்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்னால் நானும் என் மகனும் பிஸினஸ் விஷயமாக வெளியூர் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது , ஒன்று பின் ஒன்றாக பல திடுக்கிடும் செய்திகளைக் கேட்க வேண்டியதாயிருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து நாங்கள் மீளும் முன்னர், நாங்கள் வந்து கொண்டிருந்த கார் டயர் ஒன்றில் காற்று ஏறவேயில்லை. பின்னர்தான் தெரிந்தது அந்த டயர் வெடித்து இருந்தது என்று. பின்பு புது டயரை வாங்கி மாட்டி விட்டு எங்களுடைய பிரயாணத்தை தொடர்ந்த போது ஒரு டாக்ஸி காரன் வந்து பின்னால் எங்களுடைய காரைத் தட்டி விட்டான். அதற்காக போலீஸ் ஸ்டேஷனில் நின்று விபத்து என்ற சான்றிதழை வாங்கிக் கொண்டிருந்த போது நான் கால் தவறி கீழே விழுந்து அடிபட்டு விட்டது.

அப்பொழுது நான் கண்களில் கண்ணீர் ததும்ப காரில் உட்கார்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தே. திடீரென்று ஒரு வானவில் என் கண்களுக்குத் தென்பட்டது. அது மழை காலமும் இல்லை! மழை பெய்யும் அறிகுறியும் இல்லை! அடித்த வெயிலின் மத்தியில் சில நிமிடங்களே எங்களுடைய கண்களில் தென்பட்ட வானவில், பயப்படாதே! உன்னோடு நான் இருக்கிறேன், நான் உன்னைக் கைவிடுவதில்லை என்று கர்த்தர் என்னோடு பேசியவிதமாக இருந்தது. ஒரு நொடியில் என்னுடைய உள்ளத்தில் இருந்த கலக்கம், பயம் எல்லாமே மறைந்து விட்டது.

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அன்று வந்த வானவில் ஒரு அற்புதமே! அவர் தம்முடைய பிள்ளைகளோடு செய்த உடன்படிக்கையின் அடையாளம் அல்லவா அது!

அடையாளம்? எதற்கு அடையாளம்? நான் சிறுமியாக இருந்தபோது, அம்மா என்னிடம் வானவில்லைக் காட்டி, இனி பூமியானது மழையால் அல்லது பெரு வெள்ளத்தால் அழியாது என்பதற்கு கர்த்தர் ஏற்படுத்திய வானவில்லே அடையாளம் என்று சொன்னார்கள்! ஆனால் நான் கிறிஸ்துவில் வளர வளர எனக்கு அதன் அர்த்தம் இன்னும் துல்லியமாக விளங்கியது.  அது நம்முடைய பரமபிதாவானவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறை வேற்றுவார் என்பதின் அடையாளம்! நான் நினத்த மாதிரி எல்லாமே என்னை சுற்றி நடக்காமல் போனாலும், நான் உறுதியாக சொல்லமுடியும் என் தேவன் தம்முடைய வாக்கை காப்பாற்றுவார் என்று! இந்த சத்தியத்தை  வானில் தோன்றி மறையும் ஒவ்வொரு வானவில்லும் நமக்கு நினைவு படுத்துகிறது.

இந்த சத்தியம் நம்மை சங் 51 ல் தாவீது தன்னுடைய பரம தகப்பனுக்கு எழுதிய அன்பின் மடலில் வெளிப்படுகிறது.

வேதம் சொல்கிறது எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள் என்று. ஆண்டவரே நாங்கள் உம்மை நேசிப்போம், உமக்காக ஜீவிப்போம் என்றெல்லாம் நாம் எல்லோருமே கர்த்தருக்கு வாக்கு கொடுக்கிறோம். ஆனால் ஒருநாள் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் போகும்போது, நம்முடைய இச்சைகளின் படி நடக்கும் போது நம்முடைய அந்த வாக்கு சுக்கு நூறாஆகிவிடுகிறது. சில வேளைகளில் நாம்  திரும்பி கர்த்தரிடம் சேர முடியாது என்ற எண்ணத்துக்குக் கூட தள்ளப்படுகிறோம்.

ஆனால் தாவீது எதை அறிந்து கொண்டான் என்றால் நாம் வாக்குத் தவறிப் போனாலும், அவருடைய வாக்குத்தத்தம் ஒருபோதும்  மாறாது!  அதனால் தான் கர்த்தர் அவனை அதிகமாய் நேசித்தாரோ? இந்தவழி தவறிய மைந்தன், மறுபடியும் தன்னுடைய தகப்பனை கிட்டி சேரும் ஆவலுடன், தான் தன்னுடைய வாக்கில் தவறிப்போனாலும், கர்த்தர் தம்முடைய வாக்கில் மாறாதவர் என்று அவரிடம் செல்கிறான்.

கர்த்தருடைய வாக்குத்தத்தம் நம்முடைய குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டது! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அவர் மாறாதவர்! தாவீதின் பரம தகப்பன் வாக்கு மாறவில்லை! அவனை நேசித்தார்! இன்று அதே பரம் தகப்பன் உனக்கும் எனக்கும் உண்டு! நீ இன்று உன்னுடைய வாக்குத் தவறி அவரை விட்டு பின்வாங்கியிருந்தாலும், அவருடைய வாக்குத்தத்தத்தை நம்பி வா! உன்னையும் தாவீதை அரவணைத்தது போல அன்பின் கரம் நீட்டி ஏற்றுக் கொள்வார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்