Archive | November 15, 2019

இதழ்: 793 தாவீதை நேசித்த தேவன்!

சங்கீதம் 51:1  தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

இன்றுமுதல் நாம் சில வாரங்கள் தேவனாகிய கர்த்தர் தாவீது ராஜாவை ஏன் நேசித்தார் என்று அலசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நாம் இதை செய்யாவிட்டால் நாம் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி படித்து முடித்ததற்கு அர்த்தமே இல்லாமல் போகும்!

தேவனாகிய கர்த்தர் ஏன் ஏன் ஏன் தாவீதை நேசித்தார்? உங்களுக்கு ஏதாவது பதில் தெரியுமானால் என்னோடு தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்களேன்!

தாவீதின் வாழ்க்கையில் அவன் பெண்களை நடத்தியவிதம் கர்த்தரைப் பிரியப்படுத்தும் விதத்தில் இல்லவே இல்லை! அவன் சவுலின் குமாரத்தியாகிய மீகாளை எப்படி நடத்தினான் ஞாபகம் உள்ளதா?  அவளால் ஜன்னல் வழியாக இறக்கிவிட்டபின்னர் அவளைத் தேடவே இல்லை. பின்னர் அவள் இன்னொருவனுக்கு மனைவி என்று அறிந்தபின்னரும் அவள் கணவனை விட்டு விட்டு வரும்படி செய்தான். அபிகாயிலிடம் இனிப்பான வார்த்தைகளை பேசி திருமணம் செய்த அன்று இன்னொருத்தியையையும் விவாகம் பண்ணின செய்தியை அவளிடம் சொன்னான் என்றும் பார்த்தோம். அதுமட்டுமல்ல அவனுடைய பாதையில் அவன் அநேகப் பெண்களை விவாகம் செய்து மனைவி என்ற பட்டியலை விரிவாக்கியிருந்தான்.

கடைசியில் நமக்கு மறக்கவே முடியாத காரியம் அவன் அரண்மனையின் உப்பரிகையிலிருந்து உல்லாசமாக பார்த்த போது அவன் கண்களில் பட்ட அழகி பத்சேபாளை அடைய, அவளுடைய உத்தம புருஷனும், சேனை வீரனுமான உரியாவைக் கொலை செய்ததுதான்!

இப்படிப்பட்ட தவறான ஓட்டத்தை ஓடிக்கொண்டிருந்த தாவீது எங்கோ ஒருநாள் தேவனாகிய கர்த்தரைத் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நோக்கி கதறியிருந்திருக்க வேண்டும்.

தாவீதை நியாயம் தீர்க்க நான் யார்? கர்த்தர் தாமே தம்முடைய அளவிடப்பட முடியாத ஞானத்தால் நம்முடைய எண்ணங்களையும் எண்ணங்களின் தோற்றங்களையும் அறிந்திருக்கிறார்!

தாவீது தன்னுடைய வார்த்தைகளால் அவரை

கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்.அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது  ( சங்: 145;3)

என்று கூறுகிறான்.

சகலத்தையும் காணும் இந்த சர்வ வல்ல, மகத்துவமுள்ள தேவனிடம் தகுதியே இல்லாத இந்த பூமியில் வாழும் மனிதரை நேசிக்கும் உள்ளம் இருந்தது!  இந்த மகத்துவமான தேவனைப்பற்றி நான் அறிய அறிய, எனக்கு கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார் என்று புரிகிறது!

அதுமட்டுமல்ல! இன்னொன்றும் புரிகிறது!  தவறான பாதையில் புள்ளி மான் போல ஓடிக்கொண்டிருந்த இந்தத் தாவீதை நேசித்த மிகவும் பெரிய மகத்துவமுள்ள கர்த்தரால் என்னையும் நேசிக்க முடியும் என்ற மகா பெரிய உண்மையும் கூட!

தாவீதை கர்த்தர் ஏன் நேசித்தார் என்று நான் ஆராய்ந்து படிக்க ஆரம்பித்தபோது முதலில் என் நினைவுக்கு வந்தது இன்றைய வேதாகமப் பகுதி அடங்கிய சங்கீதம் 51 தான்! வேதாகமத்தில் நம் ஒவ்வொருவரையும் மிகவும் தொடும் சங்கீதம் இதுதான். இந்த சங்கீதத்தில் தான் நாம் தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் அதிகமாக நேசித்தார் என்று புரிந்து கொள்ள முடிகிறது!  அதுமட்டுமல்ல! இங்குதான் நாம் ஒவ்வொருவரும் கர்த்தர் ஏன் நம்மை அதிகமாக நேசிக்கிறார் என்று புரிந்து கொள்ள உதவும் என்றும் நம்புகிறேன்.

தகுதியே இல்லாத என்னையும் தேவன் நேசிக்கிறார் என்ற எண்ணம் என்னை என்னுடைய வாழ்க்கைப்பாதையில் ஒவ்வொருநாளும் வழிநடத்துகிறது! நான் ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதும் இந்த தேவன் என்னை நேசிக்கிறார் என்ற ஆணித்தரமான உண்மை!

இந்த மகாப்பெரிய தேவன் உன்னையும் என்னையும் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை இந்த வேதாகம தியானம் நமக்கு தெளிவாக்கி காட்ட வேண்டுமென்று ஜெபிக்கிறேன்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்