நியா: 4: 18 “யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர் கொண்டு போய்….”
நாம் ஒவ்வொருவரும் நம் பிள்ளைகள் எப்படி, யாரைப்போல வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டு தானே அவர்களுடைய பெயர்களை தெரிந்தெடுக்கிறோம்!
இன்றைக்கு நாம் இஸ்ரவேலை அடக்கி ஆண்ட யாபீன் என்கிற ராஜாவின் சேனாதிபதி சிசெராவை அழித்து சரித்திரத்தில் இடம் பெற்ற யாகேல் என்ற பெண்ணைப் பற்றிப் படிக்கப் போகிறோம்!
யாகேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா? வரையாடு! வரையாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா?
சில வருடங்களுக்கு முன்னால் இந்த வரையாடுகளைப் பார்ப்பதற்காக மூனார் மலைப்பகுதியில் வெகுதூரம் நடந்து சென்றோம். ஆனால் ஒன்று கூட கண்ணில் படவில்லை. சற்று தூரம் வனப்பகுதிக்குள் ஜீப்பில் கூட்டி சென்று இறக்கி விட்டு, உங்களுக்கு லக் இருந்தால் வரையாடுகளைப் பார்க்கலாம் என்றனர். நாங்களும் கால் கடுக்க நடந்த பின்னர் லக் இல்லை என்று கையை விரித்து விட்டு திரும்பி விட்டோம்.
அதன் பின்னர் நான் வால்பாறை செல்லும் வழியில் பலமுறை பெரிய வரையாடுகளைப் பார்த்திருக்கிறேன். ஒருமுறை நானும் என் மகனும் காரில் வந்து கொண்டிருந்தபோது ஒரு பெரிய மந்தையான ஆடுகள் சாலையின் நடுவில் இளைப்பாறிக் கொண்டிருந்தன! மற்றும் ஒருமுறை நாங்கள் அந்தப் பகுதியைக் கடந்தபோது சிறிய கற்கள் மலையிலிருந்து உருண்டு வந்ததைப் பார்த்து மலையின் மேல் நோக்கினோம். ஒரு குடும்பமாக வரையாடுகள் குட்டிகளோடு மலையில் ஏறிக் கொண்டிருந்தன! அந்தக் குட்டிகளின் துள்ளியோடலில் தான் சிறு கற்கள் உருண்டு வந்தன!
இந்த ஆடுகள் மலைப்பிரதேசத்தில் மட்டும்தான் வாழும்! செங்குத்தான மலையின் மேல் கால்கள் சறுக்காமல் ஏறும் திறமையுள்ளவைகள்!
யாகேல் அல்லது வரையாடு என்ற பெயர் கொண்ட இந்த பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ள நாம் அவள் குடும்பப் பிண்ணணியை சற்றுப் பார்ப்போம்.
இவள் தெற்கு பாலஸ்தீனத்தை சேர்ந்தவள். அவளுடைய குடும்பத்தினர் நாடோடிகளாக கூடாரங்களில் வசித்தவர்கள். பாலைவனத்தில் வாழ்ந்த அவர்களுடைய தினசரி வாழ்க்கையே மிகக் கடினமானது. அவளுடைய கணவனாகிய ஏபேர், கேனியன் என்று வேதம் சொல்லுகிறது. கேனியர் இரும்பு, செம்பு போன்ற உலோகங்களில் ஆயுதம், மற்ற கருவிகள் செய்யும் திறமை வாய்ந்தவர்கள். அதனால் அவர்கள் கானானில் உள்ள மக்களுக்கு அவர்கள் மிகவும் வேண்டப்பட்டவர்களாய் இருந்தார்கள்.
நியா: 4: 11 கூறுகிறது, “ கேனியனான ஏபேர் என்பவன்…..கேனியரை விட்டுப் பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்” என்று. ஏன் அவன் இவ்வாறு பிரிந்தான் என்று நமக்குத் தெரியவில்லை! ஒருவேளை குடும்பத்தில் ஏதாவது சண்டை காரணமாயிருந்திருக்கலாம். ஆதலால் அவன் கேதேஸ் அருகே சானாயிம் என்ற இடத்தில் குடியிருந்தான். அங்கே அவன் கானானியருடன் சமாதானத்துடன் வாழ்ந்தான். கானானியரின் ராஜாவாகிய யாபீனுக்கு தொள்ளாயிரம் ரதங்கள் இருந்தன, அவனுக்கு நிச்சயமாக , உலோகத்தில் வேலை செய்யும் ஏபேரின் உதவி தேவைப் பட்டிருக்கும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நம்முடைய வரையாடு என்கிற யாகேல் வாழ்ந்து வந்தாள். அவளுடைய் குடும்பப் பின்னணி அவளை முரட்டுப் பெண்ணாக உருவாக்கியிருந்தது! அவளுடைய கடினமான கூடார வாழ்க்கை, அவளை சொந்தமாக சிந்தித்து முடிவெடுக்கும் பெண்ணாக உருவாக்கியிருந்தது! அவளுடைய கணவனாகிய ஏபேர் கானானியரிடமும், அவர்கள் ராஜாவாகிய யாபீனிடமும், அவனுடைய சேனாதிபதி சிசெராவிடமும் சமாதானம் கொண்டிருந்தாலும், அவள் இஸ்ரவேலின் எதிரிகளை அழிக்க முடிவெடுத்தாள்! அவள் கானானியரின் நிலத்தில் வாழ்ந்த போதிலும், இஸ்ரவேலராகிய கர்த்தருடைய பிள்ளைகளை ஒடுக்கி ஆளுகை செய்த கானானியரிடம் அவள் சமாதானம் பண்ண விரும்பவில்லை!
யாகேல் தேவனுக்கு கீழ்ப்படிந்த ஒரு முரட்டாடு! அவளுடைய குலமோ, கோத்திரமோ, குடும்பமோ, அவளுடைய கணவனோ யாரும் அவள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதைத் தடை செய்ய முடியவில்லை!
கிறிஸ்தவர்களாகிய நாம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற எத்தனை சாக்குபோக்கு சொல்லுகிறோம்?
நாளையும் இந்த மலர்த்தோட்டத்துக்கு வாருங்கள்! யாகேலைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்