நியா: 4 : 20 அப்பொழுது அவன் : நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.
நாம் யாகேலின் கூடாரத்துக்குள் நுழைந்த சிசெராவைப் பற்றிப் பார்த்தோம்!
அந்த கூடாரத்துக்குள் நடந்ததை சற்று கூர்ந்து கவனிப்போம்! சிசெரா, யாகேலின் கணவன் ஏபேர் இல்லாதபோது உள்ளே புகுந்தான். யாகேல் கொடுத்த பாலைப் பருகினான். இப்பொழுது யாகேல் கொடுத்த சமுக்காளத்தை மூடிக்கொண்டு தூங்கப் போகிறான்.
அதற்காக அவளை நோக்கி நீ கூடாரவாசலிலே நின்று யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால் இல்லை என்று சொல் என்று, அவளைப் பொய் சொல்லும்படியாகத் தூண்டுகிறான்.
சாத்தான் என்னும் சிசெரா ஏவாளிடம் இனிமையான வார்த்தைகளால் பேசிய சர்ப்பமாக வந்து அவளை கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாத படி செய்தான்.
சாத்தான் என்னும் சிசெரா ஈசாக்கிடம், அவனுடைய மகன் யாக்கோபின் ரூபத்தில், வெள்ளாட்டுக் குட்டிகளின் ரோமத்தைப் போர்த்தி வந்து, ஏசாவின் ஆசீர்வாதத்தை ஏமாற்றிப் பெற செய்தான்.
நாம் சிறு வயதில் கற்பனைப் பண்ணியவிதமாக சாத்தான் நம்மிடம் இரண்டு கொம்பு வைத்த கொடிய ரூபத்தில் வரமாட்டான்.
சில நேரங்களில் அவன் யாகேலுக்கு ஏற்பட்டது போல, உன்னுடைய கணவனின் நண்பனாக வந்து, உன்னிடம் ஆசை வார்த்தைகள் பேசி உன்னை ஏமாற்றி பாவத்தில் விழச் செய்யலாம்!
சில நேரங்களில் , ஏவாளை அவளுடைய வீடு என்னும் அழகிய ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்ய வைத்தது நம்மையும் நம் வீட்டுக்குள்ளேயே நாம் எதிர்பார்க்காத வேளையில், நாம் எதிர் பார்க்காத சூழ்நிலையில் பாவம் செய்யத் தூண்டலாம்!
சில நேரங்களில் நம்மை ஈசாக்கைப் போல சிலருடைய ஏமாற்று வலைக்குள் அவர்களுடைய லாபத்துக்காக, அவர்களுடைய பொருளாசைக்காக விழ வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறான்.
ஐயோ நான் எப்படி இந்த வலைக்குள் விழுந்தேன்? நான் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தேனே! நான் மோசம் போய் விட்டேனே! நான் ஏமாந்து விட்டேனே! என்றெல்லாம் நாம் சிலநேரங்களில் வேதனைப் படுவதில்லையா?
நல்லது என்று நாம் குருட்டுத்தனமாய் நம்பியவை, பசுந்தோல் போர்த்திய புலி போல நண்பனாய் யாகேலின் கூடாரத்துக்குள் புகுந்த சிசெரா போல நம்மைப் பாவம் என்னும் படும் குழியில் தள்ள வில்லையா?
அப்படியானால் இப்படிப் பட்ட பசுந்தோல் போர்த்திய புலிகளை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? இவர்கள் நம் வாழ்க்கையில் புகுந்து நம்மோடு புசித்துக், குடித்து, இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்?
” தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்! விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்’.
ஜாக்கிரதை! இந்த உலகத்தில் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல அலைந்து நம் ஒவ்வொருவரையும் ஏமாற்றி பாவத்தில் விழப்பண்ண சிசெரா என்னும் தந்திரவாதி சுற்றித் திரிகிறான்! ஆனால் உன்னை பயமுறுத்தும் சிங்கத்தின் ரூபத்தில் அல்ல! பசுந்தோல் போர்த்திய புலியாக உன்னை மயங்க வைக்கும் ரூபத்தில், இனிக்கும் வார்த்தைகளோடு, வஞ்சகமுள்ள இருதயத்தோடு சுற்றி அலைகிறான்.
கணவனின் நண்பனாய் அவள் வாழ்க்கைக்குள்ளே பிரவேசித்த சிசெராவை யாகேல் எப்படி கையாண்டாள் என்று நாம் நாளை பார்க்கும் முன்னர், இன்று உன் வாழ்க்கையில் பிரவேசித்துள்ள சிசெராவை நீ எப்படி கையாளுகிறாய் என்று எண்ணிப்பார்!
இயேசு கிறிஸ்து சாத்தானை முறியடித்தவர்! உன்னைப் பற்றியிருக்கும் பாவ வலையிலிருந்து உனக்கும் வெற்றி தருவார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்