நியா: 4:21 “பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்”
ஒருநாள் அதிகாலையில் நானும் என் கணவரும் காலை உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் மோட்டார் பைக்கில் பின்னால் வந்து இடித்ததால் கீழே விழுந்த என் கணவருக்கு ஒரு கையின் எலும்பு உடைந்து சற்று வெளியே வந்து விட்டது. அந்த வழியில் வந்த கால் டாக்ஸியில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓடினோம். அவசர சிகிச்சையில் சேர்த்து விட்டு, டாக்டருடன் பேச அமர்ந்திருந்த போது, ஒரு ஆம்புலன்ஸ் வந்தது, அதில் நான் பார்த்த ஒரு காட்சி என்னை உரைய வைத்தது. யூனிபாரம் போட்ட சிலர் இரத்தக்களமான ஒரு மனிதனை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கினார்கள். அவர்கள் வேலை செய்யும் கம்பெனியில் ஏதோ ஒரு இயந்திரத்தில் சிக்கியதால் சரீரம் முழுவதும் சிதைந்து, சதைக் குவியல் போல அள்ளிக்கொண்டு வந்தார்கள். இரத்தத்தைப் பார்க்க பெலனில்லாத என் மனதை விட்டு அந்தக் கோர காட்சி நீங்கவேயில்லை.
இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு ஒரு கோரமான காட்சியை விளக்குகிறது.
நான் ராஜாவின் மலர்களை எழுத ஆரம்பித்தபோது அழகிய எஸ்தர் ராணி, சுயநலமற்ற ரூத் இவர்களை பற்றி படிப்பது மட்டுமல்ல, வேதத்தில் இடம் பெற்றிருக்கிற வேசியான ராகாப், தாமார், தீனாள் இவர்களைப் பற்றியும் படிக்க வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால் யாகேலைப் போன்றப் பெண்கள் மூலமும் தேவனுடைய செய்தியை என்னால் எழுத முடியும் என்று நான் நினைக்கவேயில்லை. இது கர்த்தருடைய சுத்தக் கிருபைதான் என்று நினைக்கிறேன்.
ஆம்! யாகேல் ஒரு வரையாடு என்ற அர்த்தமுள்ள ஒரு பெண்! முரட்டுப் பின்னணியில் பாலஸ்தீனத்தின் நாடோடிகளான கூடாரவாசியாக வளர்ந்தவள். அவள் கானானிய ராஜாவாகிய யாபீனுக்கும், அவனுடைய சேனாதிபதியான சிசெராவுடனும், தொழில் சம்பந்தமான சம்பந்தம் கலந்த ஏபேரைத் திருமணம் செய்திருந்தாள். 20 வருடங்கள் கர்த்தருடைய பிள்ளைகளான இஸ்ரவேல் மக்களை அடக்கி ஆண்ட இந்த இருவருடனும் அவளுடைய கணவன் நட்பு கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அவளுடைய வாழ்க்கையில் இடம் இல்லை!
ஒருநாள் எதிர்பாராத வேளையில் சிசெரா அவளுடைய கூடாரத்துக்குள் நுழைந்ததுமட்டுமல்ல, அவள் கொடுத்த பாலையும் குடித்து விட்டு பத்திரமான இடத்துக்கு வந்து விட்டோம் என்ற எண்ணத்தில் சமுக்காளத்தை மூடி ஆயாசமாகத் தூங்கவும் ஆரம்பித்தான். அவன் உள்ளே இருப்பதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைக்கவும் கட்டளையிட்டான்.
இந்த சமயத்தில் நம் யாகேல் என்ன செய்கிறாள் பாருங்கள்! கையில் ஒரு கூடார ஆணியையும் (அந்தக் கால கட்டத்தில் கூடார ஆணி கூர்மையான கட்டையால் செய்யப்பட்டது) சுத்தியையும் எடுத்துக் கொண்டு வந்து மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான். கோரமானக் கொலை!
யாகேலால் எப்படி இதை செய்ய முடிந்தது? ஒன்று மட்டும் உறுதி! அவள் எதிரியை நன்கு அறிந்திருந்தாள்!
முதலாவதாக , யாகேல் சிசெராவை அசட்டை பண்ணவில்லை! அவன் 900 ரதங்களுன் இஸ்ரவேலை ஆட்டிப் படைத்த பெலசாலி, புத்திசாலியும் கூட! நம்முடைய வாழ்க்கையில் உள்ள சிசெராவும் மிகுந்த பெலசாலி. நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக வாழ்வதையும் அவருடைய சித்தத்தை செய்வதையும் விரும்பாதவன்!
இரண்டாவதாக யாகேல், சிசெரா என்பவன் என்றென்றும் அழிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்தாள். அவனுடைய முடிவு அவளுக்குத் தெரியும்! சிசெராவுக்குத் தன் கூடாரத்தில் இடம் இல்லை என்பதை தெளிவாக்கினாள்.
மூன்றாவதாக சிசெரா அவளுடைய கூடாரத்துக்குள் வந்த போது அவனை இஸ்ரவேலரின் எதிரியாக அல்ல , தன்னுடைய எதிரியாகப் பார்த்தாள். பல நேரங்களில் நாம் மற்றவர்களை சிசெராவிடமிருந்து விடுவிக்க கையில் ஆணியும் சுத்தியுமாக அலைகிறோம், ஆனால் நம் வாழ்க்கையில் அவன் புசித்துக் குடித்து தூங்கிக் கொண்டிருக்கிறான்.
நாம் ஒவ்வொருவரும் யாகேலைப் போல, நம் வாழ்க்கை என்னும் கூடாரத்துக்குள் நுழைந்திருக்கும் சிசெராவை அசட்டை பண்ணாமல், அவனை ஒழித்துவிட கர்த்தர் தாமே நமக்கு பெலன் தருமாறு ஜெபிக்கிறேன்.
சிசெரா என்னும் எதிரி உன் வாழ்க்கையில் இளைப்பாற அனுமதிக்காதே!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்