நியாதிபதிகள்: 14:15 ” ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து; உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு…”
இன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ்அப் போல, இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும் பெண்ணையும் அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரே பார்வையில் தன் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க முடிவு செய்தான்.
திம்னாத்தில் கண்ட பெண்தோழி அவன் கண்களுக்கு பிரியமானவளாய் இருந்ததால், அவளை தனக்கு கொள்ள வேண்டும் என்று அவன் பெற்றொரை சிம்சோன் வற்புறுத்தினான். அந்தப்பெண், அவன் அடைய ஆசைப்பட்ட ஒரு பொருளாகிவிட்டாள். என்ன விலை கொடுத்தாவது அவளை அடையவேண்டும் என்ற வெறி அவனை உந்தியது. இந்த சம்பந்தத்தில் தேவனாகிய கர்த்தரை அறவே மறந்துவிட்டான்.
அவனுக்கு திம்னாத்தில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை முறைப்படி கொடுக்கும் விருந்தும் ஆரம்பமாகிவிட்டது. திருமணத்தன்று தான் செய்த முடிவுதான் மிகசிறந்த முடிவு என்று நினைத்திருப்பான்.உற்சாகத்தில் காற்றில் மிதந்த அவன் ஒரு விடுகதையை எடுத்து விடுகிறான். மாப்பிள்ளை கொடுக்கும் ஏழு நாள் விருந்து முடியுமுன் அந்த விடுகதைக்கு அர்த்தம் கண்டு பிடித்துவிட்டால் முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன் என்றான்.
திருமணமாகி ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து, உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு என்றனர்.
ஒரு நிமிஷம்! நயம் பண்ணு என்றால் என்ன? ஏவாள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? ஆதாமிலிருந்து சிம்சோன் வரை வஞ்சனை என்ற கொடிய சொல் மறுபடியும் மறுபடியும் தலை தூக்கி ஆடுகின்றது அல்லவா?
திடீரென்று ஒரே ராத்திரியில் சிம்சோனின் வாழ்க்கை மாறி விட்டது. வெளிப்புறமாய் கண்களுக்கு அழகாய், இச்சிக்கும் வண்ணமாய்த் தோன்றிய அவனுடைய அழகு மனைவி ஒரே நாளில் ஒரு அரிப்பு பெட்டகமாய் மாறிவிட்டாள். தன்னிடம் கைவசமுள்ள அத்தனை வஞ்சனையான வார்த்தைகளையும் அள்ளி அவன்மீது வீசினாள், ஏழு நாட்களும் அழுது புரண்டும் சாதிக்கிறாள்.அவளைப்பற்றி நான் யோசித்தபோது நீதிமொழிகளில் உள்ள ஒரு வசனம் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
” அடைமழை நாளில் ஓயாத ஒழுக்கும், சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி. அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான். (நீதிமொழிகள்: 27:15,16)
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி! இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!