நியாதிபதிகள்: 15: 4 – 6 ” ( சிம்சோன்) புறப்பட்டுப்போய், முன்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்கள எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி, பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும், திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புக்களையும் சுட்டெரித்துப் போட்டான். இப்படிச்செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன் தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படி செய்தான் என்றார்கள்.
பதினான்கு வருடங்களுக்கு முன்பு எங்களிடம் வேலை செய்த ஒருவனால் நாங்கள் சொல்ல முடியாத கஷ்டத்துக்குள்ளானோம். அவன்மேல் மானநஷ்ட வழக்கு போடும்படியாக எங்களிடம் சரியான நியாயமான காரணங்கள் பல இருந்ததன. அவன் மீது வழக்கு போடும்படியாய் அநேகர் எங்களை வலியுருத்தினர். ஆனால் அவனைப் பழிவாங்கும்படியாக கர்த்தர் என்னை அனுமதிக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. அவனைப் பழிவாங்கும் பொறுப்பைக் கர்த்தரிடமே விட்டு விட்டேன். அதன் பின்னர் பல ஆண்டுகள் அவனைப் பற்றி யோசிக்கும்போது இவன் எனக்கு செய்த கொடுமைக்கு கர்த்தர் ஏன் இவனைப் பழிவாங்கவில்லை என்ற எண்ணம் என்னில் எழும்பியதுண்டு! ஆனால் இன்று எல்லாவற்றையும் மன்னிக்கும் கிருபையை கர்த்தர் எனக்கு கொடுத்திருக்கிறார்.
சிம்சோனின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவன் தன் மனைவி மீதும், பெலிஸ்தர் மீதும் உள்ள கோபத்தில் திருமண விருந்தை விட்டு எழும்பி போய்விட்டான். சில மாதங்கள் கழித்து தன் மனைவியுடன் சேர வந்தபோது அவள் இன்னொருவனுக்கு மனைவியாக கொடுக்கப்பட்டது தெரியவந்தது. தன் மாமனார் செய்த தனக்கு இழைத்த தீங்குக்கு பழிவாங்க நரிகளின் வாலில் தீப்பந்தங்களைக் கட்டி பெலிஸ்தரின் பயிர்களை அழித்தான் என்று பார்க்கிறோம்.
சிம்சோனின் பழிவாங்குதல் அவனை எங்கு கொண்டு சென்றது? சிம்சோன் செய்த காரியத்துக்கு பழிக்கு பழிவாங்க பெலிஸ்தர் அவன் மனைவியையும், அவள் தகப்பனையும் பிடித்து எரித்துப் போட்டனர். ஒன்றுமறியாத ஒரு குடும்பமே அவனால் அழிந்தது.
பழிவாங்குதல்!!!! பழிவாங்குதல் என்பது ஒரு இழிவான மனதில் ஏற்படும் இழிவான இன்பம் என்று எங்கோ வாசித்தது நினைவுக்கு வருகிறது. இந்த இழிவான செயல் சிம்சோனுக்கு என்ன கொடுத்தது? தேவனாகிய கர்த்தர் எந்த ஜனத்தை முறியடிக்கவும், வெற்றி பெறவும் வேண்டி சிம்சோனை அழைத்தாரோ அதே ஜனத்தின் முன்பு அவன் அவமரியாதைக்குள்ளானான்.
நீ யாரையாவது பழிவாங்க நினைக்கிறாயா? பழிவாங்க வேண்டும் என்ற பசியில் அநேகர் தங்களையே அழித்திருக்கிறார்கள், அவமானப்பட்டிருக்கிறார்கள். தங்கள் குடும்பத்தை பழிவாங்குதல் என்னும் தீக்கு இரையாக்கியிருக்கிறார்கள்.
பழிவாங்க வேண்டும் என்ற சிறுதுளி எண்ணம் கூட உன் ஆத்துமாவை அழிக்க வல்லது!
உனக்கு தீங்கு செய்தவர்களை உயர்தரமாக பழிவாங்குதல் என்பது என்ன தெரியுமா? அவர்களை மனதார மன்னித்துவிடுவதுதான்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி! இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!