ரூத் : 1 : 15 அப்பொழுது அவள்: இதோ உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாளே;
நகோமி தன் மருமக்களைத் திரும்பிப்போங்கள் என்றவுடன் ஏற்பட்ட அழுகை நின்றுவிட்டது!ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் செய்தாயிற்று!
ஒர்பாள் மெதுவாகத் திரும்பி மோவாபை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்!
தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாள் என்ற வார்த்தையை நான் ஆழ்ந்து படிக்க ஆவலாகி எபிரேய அகராதிக்கு சென்றேன். அதில் அந்த வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த அர்த்தம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இங்கே திரும்பிப் போய்விட்டாள் என்பதற்கு , ஆரம்பித்த இடத்துக்கே திரும்பிப் போகுதல் என்ற அர்த்தம் இல்லை, அதற்கு மாறாக ” திரும்பி அனுப்பப்பட்டாள்” என்ற அர்த்தம் உள்ள வார்த்தையைப் பார்த்தேன். ஏதோ ஒன்றைக் கொடுக்க அனுப்பப்பட்டதைப் போல, ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு சென்றதைப் போல அர்த்தமுள்ள வார்த்தை அது!
மோவாபுக்கும், பெத்லெகேமுக்கும் நடுவில் உள்ள ஏதோ ஒரு முட்கள் நிறைந்த காட்டில், ஒர்பாள் தான் பேசி, பழகி , புரிந்து கொள்ளக்கூடிய ஒரு ஜனத்தண்டைக்கு நகோமியால் திரும்ப அனுப்பப்பட்டாள் என்று நான் நிச்சயமாக விசுவாசிக்கிறேன். அவளுடைய தகப்பனாகிய தேவனாகிய கர்த்தரின் செய்தியை அவள் தன் ஜனத்தண்டைக்கு திரும்ப எடுத்துச் செல்லவே அனுப்பப்பட்டாள்.
ஒர்பாள் , தான் பிறந்த நாட்டுக்கும், குடும்பத்துக்கும் திரும்பி சென்ற போது அவள் ஆரம்பித்த இடத்துக்கு அந்நிய தேவர்களை வணங்கும் பெண்ணாக செல்லவில்லை! மாறாக அவள் நகோமியின் மருமகளாக, தேவனாகிய கர்த்தரை அறிந்தவளாக செல்லுகிறாள். அந்த ஜனத்தண்டை கர்த்தருடைய நற்செய்தியை கொண்டு செல்ல அவளை விட சிறந்தவர் யார் இருக்க முடியும்?
ஒர்பாளை ஏன் தேவன் தன்னுடைய கருவியாக அந்நிய நாட்டில் உபயோகப்படுத்தியிருக்கக்கூடாது என்ற எண்ணம் வந்ததின் காரணம், கர்த்தர் இப்படிப்பட்ட ஒரு பெண்ணை உபயோகப்படுத்தியது இதுதான் முதல்தடவை அல்ல என்பதால் தான்!
ராகாப் கானான் தேசத்தில் வேசித்தனம் என்றத் தொழிலை செய்து வாழ்ந்து வந்தவள். எரிகோவின் மதில் மேல் வாழ்ந்த இந்தப் பெண், இஸ்ரவேலின் வேவுக்காரர் அவள் வீட்டுக்குள் அடைக்கலமாய் வருமுன்னரே இஸ்ரவேலின் தேவன் அந்த ஜனங்களை வழிநடத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். அவர்களைத் தன் வீட்டில் கண்டவுடன் உங்கள் தேவன் வானத்துக்கும், பூமிக்கும் தேவன் என்று அறிவேன் என்றாள். ராகாபை தேவனாகியக் கர்த்தர் தன்னுடைய பணிக்காக ஆயத்தம் பண்ணி வைத்திருந்தார், அவளைத் தன் சித்தம் நிறைவேற உபயோகப்படுத்தினார். ராகாபின் மூலமாக அவளுடைய உற்றார் உறவினர் மட்டுமல்ல, அவளுடைய வீட்டுக்குள் வந்த அனைவரும் இரட்சிக்கப்பட்டனர் என்று பார்க்கிறோம்.(யோசுவா:2)
கர்த்தருக்கு ஒரு ராகாப் எரிகோவில் தேவைப்பட்டாள்! ஒரு ஒர்பாள் மோவாபிலே தேவைப்பட்டாள்!
அப்படி ஒர்பாள் மோவாபுக்குத் திரும்பிய பின்னர் கர்த்தருக்கு சாட்சியாக இருந்திருப்பாளானால் அது வேதத்தில் எழுதப்பட்டிருக்குமே என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்!
உங்களை நான் தீரு சீதோன் என்ற பட்டணங்களுக்கு சிறு பயணம் அழைத்துச் செல்கிறேன்.
கர்த்தராகிய இயேசு அந்தப் பட்டணங்களுக்கு சென்றார் என்று மத்தேயு 15: 21 – 28 வரைப் படிக்கிறோம். அங்கே ஒரு கானானியத் தாயின் மகளைப் பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கிறார். கர்த்தர் அந்தப் பட்டணங்களுக்கு செல்ல மூன்று நாட்கள் நடைப் பயணம் செய்திருக்க வேண்டும். அந்தக் கானானியத் தாயின் கண்ணீரைத் துடைக்கவே அவ்வளவுதூரம் சென்றார் போலும்!
பின்னர் நாம் அப்போஸ்தலர் 2:3 – 5 ல் பவுல் தீருப் பட்டணத்துறைமுகத்தில் இறங்குவதைப் பார்க்கிறோம். அவ்விடத்திலுள்ள சீஷரைக்கண்டுபிடித்து அவர்களுடன் ஏழு நாட்கள் தங்கினோம் என்று பவுல் சொல்கிறார். அந்த ஏழு நாட்களுக்கு பின்னர் அவர்கள் மனைவி பிள்ளைகளோடு, பட்டணத்துக்கு புறம்பே வந்து முழங்கால் படியிட்டு ஜெபித்து பவுலை வழியனுப்பியதைப் பார்க்கிறோம்.
இந்த புறஜாதியினரின் பட்டணத்தில் யார் மூலம் நற்செய்தி பரவியது? எப்படி கிறிஸ்து இயேசுக்கு அந்த ஊரில் சீஷர்கள் இருந்தனர்? இந்த ஊரைப் ப்ற்றி நினைத்தவுடன் என் மனதுக்கு வருவதெல்லாம் கர்த்தராகிய இயேசுவால் தொடப்பட்ட அந்தக் கானானியத் தாயும் அவளுடைய மகளும் தான். கர்த்தர் இயேசுவால் தொடப்பட்ட இந்த இரு பெண்களும் நிச்சயமாக அவரைக் குறித்த சாட்சிகளாக அங்கு வாழ்ந்திருப்பார்கள் அல்லவா?
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை எரிகோவிலோ அல்லது மோவாபிலோ அல்லது தீருவிலோ வைத்து தம் சித்தத்தை நிறைவேற்றுவார். கர்த்தரை ருசி பார்த்திருந்த இந்தப் பெண்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தில் ஒரு சாட்சியாக ஒளிவீசி இருப்பார்கள்!
மிகுந்த இருளான இடத்தில் எரியும் சிறிய விளக்கும் கூட பளிச்சென்று பிரகாசிக்கும் அல்லவா?
நீயும் ராகாபைப் போல, ஒர்பாளைப் போல, கானானிய ஸ்திரீ போல நீ வாழும் இடத்தில் ஒளி வீசு!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்