2 நாளாகமம் 20 :23, 24 எப்படியெனில் அம்மோன் புத்திரரும், மோவாபியரும் , சேயிர் மலைத்தேசக்குடிகளை சங்கரிக்கவும், அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துததீர்ந்தபோது தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்க விதமாய் கைகலந்தார்கள் .
யூதா மனுஷர் வனாந்தரத்தில் உள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டம் இருக்கும் திக்கை நோக்குகிற போது, இதோ அவர்கள் தரையிலே விழுந்து கிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள் ; ஒருவரும் தப்பவில்லை.
அதிகமாக சந்தேகப்படுகிறவர்களை நாம் சந்தேகக் கண்கள் உடையவர்கள் என்று கூறக் கேட்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் பார்க்கும் சம்பவத்திற்கு இதுவே சரியான பெயராக இருக்கும் என்று நினைக்கிறேன். யூதாவைத் தாக்க வனாந்தரத்தில் கூடியிருந்த முப்படையினர் எப்படி வீழ்ந்தனர் என்று இன்றைய வேதாகமப் பகுதியில் பார்க்கிறோம்.
இங்கு நாம் பார்க்கும் பேரழிவுக்கு அடிப்படையான காரணத்தை 23 ஆம் வசனம் நமக்கு சற்று சுட்டிக்காட்டுகிறது. அம்மோனியரும், மோவாபியரும் , சேயீர் மலைத்தேசத்தாரை நம்பவில்லை. நாமும் இந்த அம்மோனியரையும், மோவாபியரையும், சேயீர்மலைத தேசத்தாரையும் போல சந்தேகம் என்னும் கண்ணியில் விழாதபடிக்கு இன்று இதை சற்று நேரம் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.
அவர்கள் மூவருக்குமே யூதா தேசத்தார் எதிரிகள்தான், ஆனாலும் அவர்களுக்கு சேயீர் மலத்தேசத்தாரின் மேலிருந்த அவநம்பிக்கை போகவில்லை.
சற்று வேறு கண்ணோட்டத்தோடு பார்ப்போமானால் ,அந்த தேசத்தார் மூவருமே தேவனை அறியாதவர்கள். அவர்களைப் பொறுத்தவரை ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு யார் பெரியவர் என்று காட்டிக் கொள்ள வேண்டும். பிறரின் நிலத்தையும் பொருட்களையும் அபகரிப்பது அவர்களுக்கு பெருமையை சேர்க்கும். அவர்கள் கடவுளை அல்ல தங்களுடைய சுய பலத்தை நம்பியவர்கள். ஆகையால் கடவுளும் அவர்களுடைய சொந்த சந்தேகக் கண்களுக்கு அவர்களை ஒப்புவித்து விட்டார்.
இந்த சந்தேகப் பிராணிகளுக்கு ஒரு மனோதத்துவ பின்னணி உண்டு! தன்னுடைய வாழ்வில் நம்பத்தகாத தன்மையுடைவன்தான் மற்றவர்களை அதே கண்ணோட்டத்தோடே பார்ப்பான். ராஜாவாகிய யோசபாத்துக்கு விரோதமாக புறப்பட்டு வனாந்தரத்தில் கூடியிருந்த இந்த மூன்று ராஜாக்களுமே நம்பத்தகாதவர்கள்தான்! அவர்கள் ஒன்றுசேர்ந்தபோது அதே கண்களால் ஒருவரையொருவர் பார்த்தனர்.யூதாவுக்கு விரோதமாக வந்தவர்கள் தங்கள் சந்தேகம் நிறைந்த தங்கள் சொந்தக்கண்களால் தங்களையே குத்திக் கொள்ள ஆரம்பித்தனர்.
நம்மில் எத்தனைபேர் சந்தேகம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்? மனைவிமேல் சந்தேகம், கணவன்மேல் சந்தேகம் என்ற நோயால் ஏற்படும் விளைவுகளை நமக்கு தினசரி செய்தி கொடுக்கிறது அல்லவா? தேவனை அறியாதவர்கள் சரி! ஆனால் எத்தனை கிறிஸ்தவ குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன தெரியுமா?
தேவன் உன் சிந்தைகளை அறிவார் என்று வேதம் கூறுகிறது அவை வீணானது என்றும் அறிவார் ( 1 கொரி 3:20)
அருமையான தேவனுடைய பிள்ளையே இன்று உன் உள்ளத்தில் உன் மனைவியைக் குறித்து அல்லது உன் கணவனைக் குறித்து காணப்படும் உன் வீணான சிந்தனைகள் தேவனுக்குத் தெரியும். வேண்டாம்! அந்நியரைப்போல சந்தேகக் கண்களால் உன் குடும்பத்தை அழித்து விடாதே! உன்னுடைய நடத்தையால் உன் பிள்ளைகளின் வாழ்வு சீரழிந்து விடும்.
இதை எழுதும்போது, என் மனதிற்கு வந்தது ஏசாயா 55:7,8
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டுக் கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன், அவர் அவன் மேல் மனதுருகுவார் , நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக் கடவன், அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார் .
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேவனாகிய கர்த்தர் நம்மைப்பற்றி நினைவுகூறும்போது, அது எந்த சந்தேகப்பிராணியின் நினைவுகளைப்போலன்றி, நம்மைத் தம்முடைய பரந்த சிந்தையோடு பார்க்கிறார். நாம் எத்தனைமுறை தவறினாலும் அவர் ஒருபோதும் நம்மை சந்தேகத்துடன் பார்ப்பதில்லை!
வீணான சிந்தைகளை களைந்து எறிந்து விட்டு கர்த்தரிடம் திரும்பு! அவர் தம்முடைய பரிசுத்த சிந்தைகளால் உன்னை நிரப்புவார்! உன் வாழ்க்கை மாறும்! மலரும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்