ஆதி 4: 23 – 24 …. லாமேக்கின் மனைவிகளே என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள். எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன். எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன். காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுத்தேழு பழி சுமரும் என்றான்.
லெந்து கால தியானத்துக்காக காயீனின் 6வது தலைமுறையான லாமேக்கைப் பற்றி நேற்று பார்த்தோம்! காயீன் தேவனுடைய சித்தத்தை விட்டு விலகி தன்னுடைய சகோதரனைக் கொன்றவுடனே தேவன் அவனைக் கொன்றிருக்கலாம்! ஆனால் அவருடைய சுத்த கிருபை அவனைத் தப்பிக்கவும் அடைக்கலமாய் வாழவும் உதவி செய்தது.
பின்னர் பல தலைமுறைகளுக்கு பின் வந்த லாமேக்கு, தேவனுக்கு கீழ்ப்படியாமல் இரண்டு பெண்களை மணந்து, தேவன் அமைத்த திருமணம் என்கிற புனித அமைப்பை அவமதித்தான் என்று பார்த்தோம்.
லாமேக்கின் முதல் மனைவி ஆதாள், யாபாலை பெற்றாள். அவன் கூடாரங்களில் வாசம் பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்ப்பவர்களுக்கும் தகப்பனானான். அவன் சகோதரன் யூபால் கின்னரக்காரருக்கும், நாதசுரக்காரருக்கும் தகப்பன் என்று வாசிக்கிறோம்.
லாமேக்கின் இரண்டாம் மனைவி சில்லாள், தூபால் காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை, இரும்பு, தொழிலாளிகளின் ஆசாரியன்.
கடைசியில் அவனுக்கு ஒரு பெண் பிறக்கிறாள், நாமாள் என்பது அவள் பெயர். ஏவாளிலிருந்து, சாராள் வரை இந்த மூன்று பெண்கள் தவிர எந்தப் பெண்ணைப் பற்றியும் எழுதப்படவில்லை. இந்த மூன்று பெண்களில் இரண்டு பேர் பேராசைக்காரன் லாமேக்கின் மனைவிமார், ஒருத்தி அவனுடைய குமாரத்தி.
நாமாள் என்பதற்கு எபிரேய மொழியில் ‘ இன்பமானது’ என்று அர்த்தம்.ஒருவேளை இந்த இன்பமான குழந்தை லாமேக்கின் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம் என்று நாம் எண்ணலாம். ஆனால் இல்லை, இன்றைய வேதாகமப் பகுதியில், லாமேக்கு பெருமையோடு தான் செய்த கொலையைப் பற்றி தன் மனைவிமாரிடம் கூறுவதைப் பார்க்கிறோம்.
தேவ பயம் இல்லாமல், தேவனுக்கு கீழ்ப்படியாமல் இரு மனைவிகளைக் கொண்டிருந்த லாமேக்குக்கு கொலை ஒரு குற்றமாகவே படவில்லை.அவன் செய்த பாவத்தை விட அவனுடைய அகங்காரமானப் பேச்சே மோசமானது என்று நான் நினைக்கிறேன்.கர்த்தர் கிருபையாக காயீனைத் தண்டிக்காமல் விட்டது இவனுடைய அகம்பாவத்துக்கு காரணமாயிற்று. காயீன் மேல் யாரும் கை வைக்க முடியவில்லை, என்மேல் யார் கை வைக்க முடியும் என்ற திமிர்! என்னுடைய பாவத்துக்கும் தேவன் சரிக்கட்ட மாட்டார் என்ற திமிர்!
வேதத்தில் லாமேக்கு வரை யாரும் ஆயுதம் உபயோகப்படுத்தி யுத்தம் செய்ததாக கூறப்படவில்லை. லாமேக்கின் மகன் தூபால் காயீன் இரும்பு பித்தளை தொழிலாளர்களின் ஆசாரியன், அவன் கட்டட வேலை, தோட்ட வேலை செய்யும் கருவிகளோடு, யுத்தம் செய்யும் ஆயுதங்களையும் செய்ய ஆரம்பித்தான். தகப்பனைப் போல பிள்ளைகளும் பாவத்தை சம்பாதித்தனர்.
ஆதி 4: 17 – 22 ல் காயீனுடைய ஆறு தலைமுறையினர் பற்றியும் படிக்கிறோம். காயீன் ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு தன் மகன் ஏனோக்குவின் பெயரை சூட்டுகிறான், அந்த பட்டணத்தில் பாவம் நிறைந்த சந்ததியினர் வாழ்ந்தனர். நாம் இதுவரை படித்த லாமேக்குவோடு காயீனுடைய வரலாறு முடிவடைகிறது.
பழிவாங்குவதில் கவனம் செலுத்திய காயீனின் தலைமுறையினர் தேவனுடைய வழிநடத்துதலில் கவனம் செலுத்தவில்லை.
இன்று நம்மில் அநேகர் கர்த்தர் கண்களை மூடிக் கொண்டிருப்பதாகவும், நம்முடைய பாவத்துக்க தக்கபடி அவர் நம்மை தண்டிக்க மாட்டார் என்றும் நினைத்து நம் இஷ்டப்படி வாழ்ந்து வருகிறோம். தேவனை சோதித்து பார்க்காதே! அவருடைய கிருபையை அசட்டைப் பண்ணாதே! அவர் தண்டிக்க ஆரம்பித்தால் தாங்க மாட்டாய்! இன்றே மனந்திரும்பு!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்