Tamil Bible study

இதழ்: 2585 உம்மை என்றுமே நேசிப்பேன் கர்த்தரே!

1 சாமுவேல் 1: 11 “…. ஒரு பொருத்தனை பண்ணினாள்”

பொருத்தனை என்ற வார்த்தையைக் கேட்ட வுடன் என் நினைவுக்கு வருவது முரட்டுத்தனமான யெப்தாவின் பொருத்தனைதான்  (நியா:11;30 ). நாம் அவனைப் பற்றியும், அவனுடைய பொருத்தனைக்கு பலியான அவன் குமாரத்தியைப் பற்றியும் பல நாட்கள் படித்தோம்.

பொருத்தனை என்ற வார்த்தை என்னைப் பொருத்தவரையில் சற்று பயமூட்டும் வார்த்தையே. அநேக நேரங்களில் உணர்ச்சிவசமாக நான் இதை செய்ய மாட்டேன், அதை செய்ய மாட்டேன் என்று நாம் கர்த்தரிடம் பொருத்தனை செய்துவிட்டு, ஒருசில மாதங்கள், வருடங்கள் கழிந்தவுடன் எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம்.இப்படி நாம் அலட்சியமாய் செயல் பட்டு விடுவோமோ என்ற பயம் மட்டுமல்ல, பொருத்தனையை சரிவர நிறைவேற்றாவிட்டால் அதற்குத் தண்டனை கிடைத்துவிடுமோ என்ற பயமும் அதிகம் உண்டு!

புதிய ஏற்பாட்டில் அனனியா, சப்பீராள் என்பவர்கள் பெற்ற தண்டனை (அப்போ:5:5) என் மனதில் என்றும் நீங்காத ஒன்று. கர்த்தரிடம் ஏதோ ஒரு பொருத்தனை பண்ணி விட்டு பின்னர் நாம் அதை நிறைவேற்றாமல் போவதைக் கர்த்தர் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை என்பதற்கு இதுவே உதாரணம்.

இங்கே அன்னாளுடைய ஜெபத்தைப் பார்க்கிறோம். அவள் ஆண்டவரே எனக்கு நீர் ஒரு ஆண் பிள்ளையைத் தருவீரானால் அவனை நான் உமக்கே கொடுத்து விடுகிறேன் என்று பொருத்தனை செய்கிறாள். இதை நான் வாசித்தபோது யாரோ ஒருவர் கடவுளே எனக்கு நீர் லாட்டரி சீட்டில் பணம் கிடைக்க செய்தால் அதில் பாதியை உமக்கே கொடுத்து விடுகிறேன் என்று சொல்லியது போலத் தோன்றியது. எனக்கு நீர் இதை செய்தால் உமக்கு நான் இதை செய்கிறேன் என்று பேரம் பேசுவது போல!

ஆனால் அன்னாளின் ஜெபத்தைப் பற்றி ஆழமாக படிக்கும்போது அன்னாள் ஒருபோதும் தேவனாகிய கர்த்தரிடம் பேரம் பேசவில்லை என்பதை உணர்ந்தேன். பொருத்தனை என்ற வார்த்தையின் முழு அர்த்தம் என்னவென்றால்  ‘வார்த்தையினால் கனம் பண்ணுவது’என்பது.

உதாரணமாக 45 வருடங்களுக்கு முன்பதாக நான் இளம் பெண்ணாக தேவனுடைய ஊழியக்காரர் முன்பதாகவும், உறவினர், நண்பர்கள் முன்னதாகவும், என் கணவரைப் பார்த்து உயர்விலும் தாழ்விலும் மரணம் என்னைப் பிரிக்கும் வரை உம்மோடு இணைந்திருப்பேன் என்று வாக்குக் கொடுத்தேன். இந்த நாள் வரை அந்த வார்த்தையை நாங்கள் இருவரும் கனம் பண்ண விரும்புகிறோம்.

நாம் கொடுத்த வார்த்தையை கனம் பண்ணுதல் என்பது நாம் வாக்குக் கொடுத்தவரை கனம் பண்ணுதலாகும். இதைத் தான் அன்னாள் செய்தாள் என்று பார்க்கிறோம். தன்னுடைய வாழ்வின் இருண்ட சூழ்நிலையில், கர்த்தர் அவளுடைய ஜெபத்துக்கு பதிலளியாமல் அமைதியாக இருந்தபோதும், கர்த்தரே அவளுடைய வாழ்வின் மையமாக இருந்தார்.

அவளுடைய ஜெபம் பேரம் பேசுவதாக அல்ல, ஒரு மகள் தன் தகப்பனிடம் , அப்பா என் இருண்ட வாழ்க்கையில் மட்டும் உம்மைத் தேடுகிறேன் என்று எண்ண வேண்டாம், என் வாழ்க்கை ஒளிமயமாகும் வேளையிலும் உம்மை நான் உம்மை கனம் பண்ணுவேன் என்பது போல இருக்கிறது.

என்ன அருமையான பாடம் !  நாம் நம் வாழ்வில் எப்பொழுதும் கனம் பண்ண விரும்புகிற ஒருவருக்கு, நாம் அதிகமாக நேசிக்கும் ஒருவருக்கு  வாக்குக் கொடுப்போமானால் அதில் ஒருபோதும் தவற விரும்ப மாட்டோம்!

அன்னாள் தேவனை வார்த்தையால் கனம் பண்ணினாள்!

உங்கள் சகோதரி,

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Kindly follow the link and study the hardest book in the Bible that reveals the mysteries of God! 

நீன்கள் படிப்பது மட்டுமன்றி வெளிப்படுத்தின விசேஷத்தைப் படிக்க விரும்பும் அனைவருக்கும் இதைப் பகிருங்கள்!

https://www.youtube.com/@rajavinmalargal

Leave a comment