Archive | October 5, 2010

மலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்! விளைவு?

 

ஆதி:  27:13 அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு , நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.”

 

யாக்கோபு தன் தாயின் நேசத்தை பெற்றான். ஈசாக்கு வயதான போது குடும்பத்தின் ஆசிர்வாதத்தை மூத்த குமாரனுக்கு வழங்கும் நேரம் வந்த போது, ரெபெக்காள் தன் இளைய குமாரனுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகிறாள்.

 ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணிய பிள்ளையை பெற்றுக்கொள்ள சாராள் அவசரப்பட்டு ஆகாரை ஆபிரகாமுக்கு மறுமனையாட்டியாக்கியது போல அவள் மருமகள் ரெபெக்காளும் , ஆண்டவர் மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்று அவன் சந்ததியைப் பற்றி சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதாக எண்ணி, ஏமாற்று வேலையில் இறங்குகிறாள்.

பட்சபாதம், ஏமாற்று, பொய் , புரட்டு இவைதான் ரெபெக்காள் என்ற தாயிடம் இருந்த பண்பாடுகள். ஒரு நிமிஷம்! பிள்ளைகளுக்காக எத்தனை முறை கணவரிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள்? பிள்ளைகள்  செய்த தவறை எத்தனை முறை யாருக்கும் தெரியாமல் மறைத்திருக்கிறீர்கள்? ரெபெக்காள் மாத்திரம் இந்த தவறை செய்யவில்லை. நாமும் செய்து கொண்டிருக்கிறோம் அல்லவா?

இங்கு ஈசாக்கு ஒரு நல்ல தகப்பனாக நடந்து கொண்டானா? என்று சற்று பார்ப்போம். ஈசாக்கு தியானிப்பதை வழக்கமாய் கொண்டிருந்தவன், தன் மனைவி மலடியாயிருந்த போது, தனக்கென்று வேறொரு பெண்ணைத் தேடாமல், தன் மனைவிக்காக தேவனிடம் முறையிட்டு, 20 வருடங்கள் காத்திருந்து பெற்றுக் கொண்டான் என்று ஈசாக்கைப் பற்றி பார்த்திருக்கிறோம்.

ஆனால் பிள்ளைகளை வளர்த்தது எப்படி? ரெபெக்காள் யாக்கோபை நேசித்தாள் என்றால், இவனும், ஒருதலை பட்சமாக ஏசாவை நேசித்தான். ஏசா வேட்டையாடி வந்த மாமிசம் அவன் உள்ளத்தை கொள்ளை கொண்டதால், ஈசாக்கு , புற ஜாதியான இரண்டு பெண்களை மணந்து தேவனுடைய ஆசிர்வாதத்தை பெரும் தகுதியை இழந்து,  உலகப் பிரகாரமாய், அவிசுவாசியாய் அலைந்து கொண்டிருந்த ஏசாவுக்கு ஆசிர்வாதத்தை கொடுக்க நாடினான்.

கணவன் மனைவிக்குள்  ஒற்றுமை இல்லாமல் அவரவர்கள் சொந்தமாய் முடிவெடுத்து ஒருவரையொருவர் ஏமாற்றி வாழும் குடும்பத்தை தேவன் ஆசிர்வதிக்க முடியுமா? குடும்பத்தின் தலைவனான ஈசாக்கு தன் இரு பிள்ளைகளையும் வைத்து, தேவனுடைய சமுகத்தை தேடியிருக்க வேண்டும். பிள்ளைகள் வயிற்றில் இருக்கும்போதே கர்த்தர் மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்று ரெபெக்காளிடம் கூறியது அவனுக்கும் தெரியும். இதன் அர்த்தத்தை கர்த்தரிடம் தானே கேட்டு அறிந்திருக்கவேண்டும். அப்படியல்லாமல் அவன் ஏசா சமைத்து கொடுத்த உணவில் மயங்கியவனாய் ஏசாவை ஆசிர்வதிக்க வாஞ்சித்தான்.

நடந்தது என்ன? பிறப்புரிமைக்கே மரியாதை  கொடுக்காத  ஏசாவுக்கு திடீரென்று அப்பாவின் ஆசிர்வாதத்தின் மேல் அக்கறை. ஏன்? அம்மா யாக்கோபை தான் நேசிக்கிறாள் என்று தெரியும், இனி அப்பாவின் ஆசிர்வாதத்தின் மூலம் சொத்தும், அதிகாரமும் தனக்கு கிடைத்துவிடும். அப்புறம் பார்க்கலாம் அம்மா யாரை நேசிக்கிறாள் என்று… என்ற எண்ணம் போலும்! வேட்டையாட ஓடுகிறான், அவன் வருமுன் ரெபெக்காள் யாக்கோபை விட்டு ஏமாற்றி ஆசிர்வாதத்தை அடைய செய்கிறாள்.

வேட்டையிலிருந்து திரும்பிய ஏசா, தன் தாயும்  தம்பியும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை உணர்ந்து கொலை செய்ய எழும்பினான். இதை அறிந்த ரெபெக்காள் யாக்கோபை ஆரானுக்கு அனுப்புகிறாள். யாக்கோபு  மறுபடியும் தன் தாயின் முகத்தை பார்த்ததாக வேதம் கூறவில்லை. ஏசாவும் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரெபேக்காள் மரிக்கும்போது எந்த பிள்ளையும் அருகில் இல்லை.

என்ன பரிதாபம்! பட்சபாதம், பொய், புரட்டு, ஏமாற்று, ரெபெக்காளுக்கு என்ன சந்தோஷத்தைக் கொடுத்தது? பிள்ளகளுக்குள்ளே அடிதடி, கொலைவெறி, என்று வீடே இரண்டு பட்டு போயிற்று. கடைசியில் அவள் மரிக்கும்போது கண்ணீர் விட ஒரு பிள்ளையும் அருகில் இல்லை. அவள் விதைத்த பட்சபாதம் என்ற விதை, நம்பிக்கையின்மை, கசப்பு, பழிவாங்குதல் என்று கனி கொடுத்தது விட்டது.

தேவனை அறிந்த, ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு தாய் ஏமாற்றியதால் வந்த விளைவுகள் நமக்கு எச்சரிக்கையாகட்டும்!

ஜெபம்:

ஆண்டவரே, ரெபெக்காளின் வாழ்க்கை எனக்கு ஒரு பாடமாக அமையட்டும். என் குடும்பத்தின் அமைதியையும்,  சந்தோஷத்தையும் காக்க தேவையான அனுதின கிருபையைத் தாரும்.  ஆமென்!