Archive | October 6, 2010

மலர்:1 இதழ்:33 எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்!

  

ஆதி: 28: 1,2   ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசிர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண் கொள்ளாமல்,

எழுந்து புறப்பட்டு பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவெலுடைய வீட்டுக்கு போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்கு கட்டளையிட்டான்.

 

யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கை ஏமாற்றி பொய் சொல்லி ஆசிர்வாதத்தை பெற்றவுடன் , ஏசா அவன் மீது மூர்க்கம் கொண்டிருப்பதை அறிந்து ஈசாக்கும், ரெபெக்காளும் அவனை, ரெபேக்களின் குடும்பம் வசித்து வந்த ஆரானுக்கு அனுப்புகிறார்கள்.

 யாக்கோபு ரெபேக்களின் செல்லப்பிள்ளையல்லவா? எத்தனை முறை அவனிடம் தான் வளர்ந்த ஊரைப் பற்றியும், தான், முன் பின் தெரியாத ஈசாக்கை மணப்பதற்காக, இரண்டே நாளில் புறப்பட்டு வந்ததைப் பற்றியும் கதை கதையாக கூறியிறுப்பாள். ஏசா மணந்த இரண்டு புறஜாதி பெண்களால் மனநோவு அடைந்திருந்த அவள், யாக்கோபுக்கு தன் குடும்பத்தில் பெண் கொள்ள வேண்டும் என்ற ஆவலையும் ஊட்டியிருப்பாள். தாயின் உள்ளத்தின் ஆவலை நன்கு அறிந்த யாக்கோபு , 500  மைல் தூரமான ஆரானை நோக்கி புறப்பட்டு போனான்.

 சில நாட்களில் திரும்பி விடுவோம் என்று தான் யாக்கோபு நினைத்திருப்பான், ஆனால் 20 வருடங்களுக்கு முன்னால் தான் நேசித்த, வளர்ந்த இடத்துக்கு அவனால் திரும்ப முடியாதென்பதை அவன் உணர வில்லை. ரெபெக்காளும், தன் மகன் ஒரு நல்ல மனைவியோடு திரும்பி வருவான் என்று எதிர்பார்த்து தான் அவனை வழியனுப்பினாள். ஆனால் அவள் மறுபடியும் இந்த பூமியில் அவனைக் காணவில்லை.

யாக்கோபு என்கிற கூடாரவாசி, இப்பொழுது தலை சாய்க்க கூடாரமில்லாமல், வனாந்திர வழியாய் பிரயாணம் செய்கிறான். தன் தகப்பனின் ஆசிர்வாதத்தை தவிர, ஒன்றுமில்லாதவனாய் பெத்தேல் என்ற இடம் வருகிறான். அங்கு கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி, (ஆதி:28: 13 – 15 ) நான் உன்னை ஆசிர்வதித்து, உன்னைக் காத்து, இந்த தேசத்துக்கு உன்னை திரும்பப்பண்ணுவேன் என்று வாக்களித்தார்.

என்ன ஆச்சரியம், ஏமாற்றி, பொய் சொல்லி ஆசிர்வாதத்தை பெற்ற இவனையா கர்த்தர் ஆசிர்வதித்தார்? என்று எண்ணலாம். ஆபிரகாமையும், ஈசாக்கையும் அவர்களுடைய பெலவீனங்களுக்கு மத்தியில், மன்னித்து வழிநடத்திய தேவன்  யாக்கோபுடன் தன் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். கர்த்தர் அவனுக்கு இதன் பின்பு ஐந்து முறை தரிசனமாகினார், ஆனாலும், பெத்தேல் அனுபவம் தேவனுக்கு தன்னை அர்ப்பணிக்க உதவிற்று.

யாக்கோபின் வாழ்க்கையை சற்று ஞாபகப்படுத்தி பாருங்கள்! ஏமாற்றியதால் வந்த பலனைக் காணலாம்.

யாக்கோபு ஏசாவை ஏமாற்றினான், பின்னர் லாபான் யாக்கோபை ஏமாற்றி அவன் இரு பெண்களையும் மணக்க பதினான்கு வருடங்கள் அவனை உழைக்க செய்தான்.

யாக்கோபு ஆட்டு ரோமத்தை காட்டி தன் தகப்பனை ஏமாற்றினான். அதே விதமாக அவன் பிள்ளைகள் அவனை ஆட்டு இரத்தத்தினால் தோய்த்த அங்கியை காட்டி அவன் அருமை மகன் யோசேப்பு மரித்து விட்டதாக ஏமாற்றினார்கள்.

அதுமட்டுமல்ல, யாக்கோபு தன் வாழ்க்கையில், ஒரு மேய்ப்பனாக,  நான்கு பெண்களுக்கு கணவனாக, அநேக பிள்ளைகளுக்கு தகப்பனாக பல கஷ்டங்கள் அனுபவித்தான். எல்லாவற்றுக்கும் மேலான துக்கம் அவன் யோசேப்பை பிரிந்து வாழ்ந்ததுதான்.

தேவன் கிருபையுள்ளவரானபடியால் நம்மை மன்னிக்கிறார். அதே தேவன் நீதிபரரும் கூட, அவர் நாம் இந்த பூமியில் எதை விதைத்தோமோ அதை அறுக்கும்படி செய்வார். தேவனுடைய கிருபையை அலட்சியப்படுத்தாதே!

 

இவைகளுக்கு மத்தியிலும் வாக்கு கொடுத்த தேவன் அவனை ஒரு நாளும் கைவிடவில்லை.

சங்கீ: 46:7  சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.”

 ஜெபம்:  தேவனே உம்முடைய கிருபைகளை எந்த நேரத்திலும் அலட்சியப்படுத்தாமல் இருக்க எனக்கு உதவி தரும். ஆமென் .