Archive | October 1, 2010

மலர்:1 இதழ்:30 ஒரு தாய் பிள்ளைகளுக்குள்ளே காட்டும் பட்சபாதம்!

                           

ஆதி:   25:23   அதற்கு கர்த்தர்; இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது ; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும்: அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப் பார்க்கிலும் பலத்திருப்பார்கள்; மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்றார்.

 

வீட்டில் அநேக பிள்ளைகளோடு வளர்ந்த சிலர், முதல் பிள்ளைக்குத்தான் அம்மாவிடம் பாசம் கிடைக்கும் கடைசி பிள்ளைக்கும் அதில் பங்குண்டு, ஆனால் நடுவில் உள்ள பிள்ளைகளுக்கு எதுவும் கிடைக்காது என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சொத்து விஷயங்களில் கூட சில பெற்றோர் பிள்ளைகளுக்கு சமமாக பங்கிட்டு கொடுக்காமல் பட்சபாதம் பார்க்கிறதினால், சகோதரருக்குள் அடிதடி நேருவதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பெற்றோரிடமிருந்து அன்பு கிடைக்காததால் படித்து முன்னுக்கு வராமல் பல தவறான காரியங்களுக்கு அடிமையான  வாலிபரைப் பார்த்திருக்கிறேன்.

பெற்றோர்கள் ஏன் இப்படி பிள்ளைகளிடம் பட்சபாதம் காட்டுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

கர்த்தர் ரெபெக்காளின் பிள்ளைகள் பிறக்குமுன்னரே அவளுக்கு அவள் பிள்ளைகளில் ஒருவன் மற்றொருவனை சேவிப்பான் என்று கூறுகிறார். ஆனால்  ஒரு நிமிடம் ! கர்த்தர் ரெபெக்காளிடம் ஒருவனை நேசி, மற்றொருவனை பகை என்று உத்தரவு கொடுத்தாரா ? இல்லவே இல்லை! கர்த்தர் அவளுக்கு அவள் பிள்ளைகள் வாழ்க்கையில் அவர்  வைத்திருந்த அநாதி  தீர்மானத்தை  வெளிப்படுத்தினார். அவளுடைய இளைய குமாரனின் தலைமுறை ஆளுகை செய்யும், மூத்தவனின் குமாரர் அவர்களை சேவிப்பார்கள் என்பதே அவர் கொடுத்த செய்தி.  இந்த செய்தி ரெபெக்காளுக்கு அவள் பிள்ளைகள் வளரும்போது சீரான வழியில் வளர்க்க உதவி செய்திருக்க வேண்டுமே தவிர பட்சபாதம் காட்ட அல்ல.

அதற்கு மாறாக அநேக குடும்பங்களில் இன்றும் நடக்கிற வருத்தத்துக்குரிய காரியம் இந்த குடும்பத்தில் நடந்தது. ஆதி: 25:27 ல் வேதம் கூருகிறது, “ ஏசா வேட்டையில் வல்லவனும், வனசஞ்சாரியுமாய் இருந்தான், யாக்கோபு குணசாலியும், கூடாரவாசியுமாய் இருந்தான்” என்று.

ஏசாவை நான் பார்த்ததில்லை , ஆனால் வேதத்தின் கண்ணோட்டத்தில், இந்த இருவரும் உருவத்திலும் குணத்திலும் வேறுபட்டிருந்தனர் என்று அறிகிறோம். ஏசா மலைவாசியை போல தென்படுகிறான், வெளியில் தங்கி வேட்டையாடுவதில் வல்லவன். அப்படிப் பட்டவர்கள் எந்த வேலையிலும் கொஞ்சம் வேகமாக, கடுமையாகத்தான் இருப்பார்கள். மென்மையாக எதையுமே செய்யத்தெரியாது.

யாக்கோபு வீட்டை நேசித்தவன், நிச்சயமாக ரெபெக்காளுக்கு வீட்டுக்குறிய எல்லா வேலைகளிலும் உதவியாக இருந்திருப்பான். அதனால் அம்மாவின் மனதில் தனி இடத்தை பிடித்துவிட்டான் யாக்கோபு.

என்ன வருத்தத்துக்குரிய காரியம் இது! பிள்ளைகளை நாம் பிள்ளைகளாக நேசிக்க வேண்டுமே தவிர, அவர்கள் நமக்கு என்ன செய்கிறார்கள் என்பதற்காக அல்ல. அவர்களில் ஒருத்தன் நன்றாக படிக்கலாம், நன்கு சம்பாத்தியம் பண்ணி அம்மாவுக்கு செலவுக்கு அதிகம் பணம் கொடுக்கலாம். அதனால் அந்த பிள்ளையை அதிகமாக நேசித்து, சரியாக வாழ்க்கையில் முன்னேற முடியாமல் திணறிக்கொண்டிருக்கிற ஒருவனை வெறுக்க கூடாது. இது பட்சபாதம் அல்லவா!

 

குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்! இயேசு கிறிஸ்துவின் சிந்தையை, அன்பை, அழகை , நம் பிள்ளைகள் , நம்மிடம் கற்றுக்கொள்ளும் ஒரு இடம்தான் நம் இல்லம்.

நம் பிள்ளைகளுக்கு திறமையும், வசதியும் அவர்கள் படிப்பின் மூலம் வரலாம், ஆனால் அவர்கள் குணத்தின் அழகு நம் இல்லத்தில்தான் பிறக்கும்!

பிள்ளைகளை வேறுபடுத்திப் பட்சபாதம் காட்டி குடும்பத்தை இரண்டாக்கி விடாதே!

ஜெபம்:

தேவனே! என் பிள்ளைகளை ஒரேமாதிரி நேசிக்க எனக்கு உதவி தாரும். பட்சபாதம் இல்லாமல், உம்முடைய அன்பை என் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் காட்ட எனக்கு பெலன் தாரும். ஆமென்!