Archive | October 20, 2010

மலர்:1 இதழ்: 43 நம்பவைத்து ஏமாற்றுவது என்றால்?

ஆதி: 34:13 அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாக தீனாளை சீகேம் என்பவன் தீட்டு படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பன் ஏமோருக்கும்  வஞ்சகமான மறுமொழியாக:

 

யாராவது உங்களை வஞ்சகமாக ஏமாற்றிய கசப்பான அனுபவம் உங்களுக்கு உண்டா?  பொய்யை உண்மையைப்போல சித்தரித்து கூறி நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட அனுபவம் உண்டா? இவர்கள் பேசுவது உண்மையா அல்லது பொய்யா என்று நம்மை திணற வைக்கக் கூடிய அளவு பேசுகிறவர்கள் பலரை நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கண்டிருப்போம்!

யாக்கோபின் வாழ்க்கையில், ஏமாற்றுதல், பொய், வஞ்சனை இவை மறுபடியும், மறுபடியும் இடம் பெறுகின்றன. ரெபெக்காளும், யாக்கோபும் சேர்ந்து ஈசாக்கை ஏமாற்றினர். பின்னர் லாபான் யாக்கோபை ஏமாற்றினான். யாக்கோபுடைய வாழ்க்கை முடியுமுன்னே அவன் குமாரர்,  சிமியோன் லேவியின் வாழ்க்கையின் மூலம் வஞ்சனையும் , பொய்யும் அவன் குடும்ப இரத்தத்தில் விளையாடுவதை கண் கூடாக பார்த்தான்.

இந்த சம்பவத்தை படிக்கு முன், ஒரு காரியத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். சிமியோனும், லேவியும் யாக்கோபின் மனைவி லேயாளுக்கு பிறந்தவர்கள். யாக்கோபு தன் மனைவியாகிய ராகேலை அதிகமாக நேசித்ததும், லேயாளை இரண்டாம் இடத்தில் வைத்து பட்சபாதம் காட்டியதும், சிமியோனும் லேவியும் நன்கு அறிந்த உண்மை.

 யாக்கோபு அவன் சகோதரன் ஏசா 400 பேர் கொண்ட படையோடு வருகிறான் என்று அறிந்தவுடன், தன் குடும்பத்தை வரிசைப் படுத்தியபோது, தன்னுடைய பணிவிடைக்காரிகளையும், அவளால் அவன் பெற்ற பிள்ளைகளையும், முன் வரிசையிலும், லேயாளையும் அவள் பெற்ற பிள்ளைகளையும் அடுத்த வரிசையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடைசி வரிசையிலும் நிற்க வைத்தான். ஏனெனில் ஏசாவின் படை தாக்குமானால் முதலில் அடிபடுவது வேலைக்காரிகள் பெற்ற பிள்ளைகள், பின்னர் லேயாள் பெற்ற பிள்ளைகள், கடைசியில் தானே ராகேலும் யோசேப்பும் தாக்கப்படுவர் என்ற எண்ணம் அவனுக்கு.  தன் தகப்பனாகிய யாக்கோபு காட்டிய பட்சபாதத்தையும், இரண்டாம் தர அன்பையும் அறியாத பருவம் அல்ல சிமியோனும், லேவியும்.

இது நமக்கு லேவியும், சிமியோனும்  எப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்தனர் என்பதைக் காட்டுகிறது. இன்று ஒரு வாலிபன் சமுதாயத்தில் தவறுகள் செய்கிறான் என்றால் அவன் வளர்ந்த சூழ்நிலை, அவனை அவன் பெற்றோர் வளர்த்த விதம் இவையே முக்கிய காரணம் ஆகும். யாக்கோபின் குடும்பம் தேவனை அறிந்த குடும்பம், ஆனால் பிள்ளைகளுக்கு முன்னால் அவர்கள் சாட்சியாக இருக்காததால் இந்தக் குடும்பத்தில் பெரிய தவறு நடந்தது.

இப்பொழுது என்ன நடக்கிறது பார்க்கலாம்! லேவியும், சிமியோனும் வெளியிலிருந்து திரும்பியவுடன், தம் சகோதரி தீனாளுக்கு நடந்ததைப் பற்றி கேழ்விப்பட்டு, மிகவும் கோபம் கொண்டனர் என்று வேதம் கூறுகிறது. அந்த சமயத்தில் ஏமோர் தன் குமாரன் சீகேமின் ஆசையை நிறைவேற்ற, தீனாளைப் பெண் கேட்டு  அங்கு வருகிறான். பின்னால் சீகேமும் வருகிறான்.

சீகேம் அவர்களிடம் தயவுக்காக வேண்டுகிறான் என்று வேதம் சொல்கிறது (ஆதி: 34:11) அந்த சமயத்தை உபயோகப்படுத்தி லேவியும், சிமியோனும் அவர்களிடம் வஞ்சனையோடு பேசி. அவர்களை கொலை செய்ய பெரிய திட்டம் தீட்டுகிறார்கள்.

சீகேமும் தீனாளும் நடந்தது தேவ சித்தத்திற்கு அப்பாற்பட்டது. அவர்கள் செய்தது சரி என்று நான் கூறவில்லை. ஆனால் அப்படி ஒரு சூழ்நிலையை கிறிஸ்தவர்களாகிய நாம் சந்திக்கும்போது , எப்படி நடந்து கொள்வோம் என்று சிந்தித்து  பாருங்கள்!

சீகேம் தவறு செய்ததால், கர்த்தருடைய பிள்ளைகளான யாக்கோபின் பிள்ளைகள் , பொய் சொல்லி, ஏமாற்றி, கொலை செய்வதா சரி? சீகேம் உலகத்தின் மனிதன், ஆனால் லேவியும், சிமியோனும் கர்த்தருடைய பிள்ளைகள் அல்லவா?

தங்களுடைய அழைப்பின் படி கர்த்தருடைய பிள்ளைகளாய் வாழாமல், வஞ்சனை, பழிவாங்குதல், தந்திரமாய் ஏமாற்றுதல், போன்ற ஆயுதங்களை கையில் ஏந்தினர் யாக்கோபின் புத்திரர்.! விளைவு?………..நாளை பார்க்கலாம்!

ஜெபம்:

ஆண்டவரே! வீட்டில் பிள்ளைகள் தேவ பயத்தில் வளர்க்கப்படா விட்டால், சமுதாயத்தில் தவறு செய்பவர்களாக வளருவார்கள் என்று பார்த்தோம். பிள்ளைகளை சரிவர வளர்க்க எங்களுக்கு ஞானம் தாரும்!   ஆமென்!