Archive | October 21, 2010

மலர்:1 இதழ்: 44 கோபமும், மூர்க்கமும் பட்ட காயத்தை ஆற்றுமா?

ஆதி: 34:30,31 அப்பொழுது யாக்கோபு,  சிமியோனையும், லேவியையும் பார்த்து: இந்த தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும், பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப் பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன், அவர்கள் எனக்கு எதிராக கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.

அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள்  ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.

 

நேற்று நாம், தீனாளை பெண் கேட்டு சீகேமின் தகப்பன் ஏமோரும், பின்னர் சீகேமும் யாக்கோபின் வீட்டுக்கு வந்ததாகப் பார்த்தோம்.

ஆனால் யாக்கோபின் குமாரர் அவர்களை வஞ்சித்து, ஏமோரின் ஆளுகைக்கு கீழே உள்ள எல்லா ஆண்மகனும் விருத்தசேதனம் பண்ணப்பட்டாலோழிய தீனாளை திருமணத்தில் கொடுக்க முடியாது என்று கூறினர்.

 இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சீகேம் தீனாளை மணக்க வேண்டுமானால் அவன் விருத்தசேதனம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தால் அதில் அர்த்தம் இருக்கிறது. அப்படியல்லாமல் அந்த பட்டணத்தில் உள்ள எல்லா ஆண்களும் விருத்தசேதனம் பண்ண வேண்டும் என்று தந்திரமாய் இந்த இரட்டை சகோதரர்கள் விதித்த நிபந்தனைக்கு, அவர்கள் மேல் இருந்த விசுவாசத்தில் பணிந்தனர் அந்த ஊரார்.

ஆதி: 34:19 கூறுகிறது சீகேம், தீனாள் மேல் பிரியம் வைத்திருந்தபடியால் அந்தக் காரியத்தை செய்ய தாமதிக்கவில்லை என்று. அதன் பின்னால் வரும் வார்த்தைகளை கவனியுங்கள்! அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான். அதனால் தான், அவன்  தவறி விட்டாலும், அவளை உடனே மணக்க வேண்டும் என்று ஏங்கினான். சீகேம் தீனாளோடு நடந்து கொண்டது தவறுதான், ஆனாலும், அவன் யாக்கோபின் புத்திரரை விட குணத்தில்  எவ்வளவோ மேன்மையானவன் என்று தெரிகிறது!

ஆதி:34:24  கூறுகிறது, அந்த ஊரின் எல்லா ஆண்களும் விருத்தசேதனம் பண்ணப்பட்டபின்னர், யாக்கோபின் குமாரராகிய லேவியும், சிமியோனும், ஏமோரையும், அவன் குமாரன் சீகேமையும், அந்த ஊரில் இருந்த எல்லா ஆண்களையும் பட்டயக் கருக்கால் வெட்டி கொன்று, பெண்களையும், சிறுவர்களையும் சிறைப்பிடித்து, வீட்டிலிருந்த யாவற்றையும் கொள்ளையிட்டார்கள் என்று.

இந்தப் பழி வாங்குதல் சம்பவத்தை வாசிக்கும்போது, உன்னத தேவனை அறிந்த இந்த இரண்டு சகோதரர், இப்படி கொலைவெறி பிடித்து மூர்க்கமாய் அலைவதை விட்டுவிட்டு, எங்கள் தேவன் மிகுந்த கிருபையும், நீடிய சாந்தமும் உள்ளவர், ஆதலால் உங்களை மன்னிக்கிறோம் என்று சொல்லிருப்பார்களானால், அவர்கள் வார்த்தையை குருட்டுதனமாய் விசுவாசித்து விருத்தசேதனம் பண்ணிய அந்த ஊர் முழுவதும் கர்த்தரை தெய்வமாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள் அல்லவா?

தேவனை அந்த ஊராருக்கு காட்டுவதற்கு பதிலாய் யாக்கோபின் குமாரர், தங்கள் தந்திர புத்தியையும், வஞ்சிக்கிற குணத்தையும், கோபத்தையும்  அல்லவா காட்டி விட்டார்கள்! இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற அநேகர் தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்து இயேசுவை காட்ட தவறி, குடியும் கொண்டாட்டமுமாய் வாழ்வதால், அநேகர் நம் தேவனிடம் வர முடியாமல் தடையாகி விடுகிறது.

யாக்கோபை , இந்த செயலால் வந்த ஆபத்திலிருந்து விடுவிக்க கர்த்தர் அவர்களை புறப்பட்டு பெத்தேலுக்கு போக சொல்கிறார். ஆனால், பல வருடங்களுக்கு பின்னால் யாக்கோபும்  அவர்களுடைய வஞ்சனைக்கு ஆளாகி, அவர்கள் யோசேப்பை விலைக்கு விற்று போட்டதினால் ,  அவன் வாழ்நாள் முழவதும் கண்ணீர் வடித்தான்  என்று பார்க்கிறோம்.

கோபமும் , பழி வாங்குதலும், எந்தப் புண்ணையும் ஆற்றாது!  அது எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் ஆகும்!

எனக்கு துரோகம் செய்த யார் மேலாவது நான் கோபப்பட்டு பழி வாங்க நினைத்ததுண்டா? என்று சற்று எண்ணிப்பார்ப்போம்!

 

ஜெபம்:

 

ஆண்டவரே! நான் எனக்கு துரோகம் செய்தவர்கள் மேல் கோபப்படும்போது, என்னை நானே நியாயப்படுத்துகிறேன் என்று உணர்கிறேன். தவறான கோபத்துக்கும், மூர்க்கத்துக்கும் நான் ஆளாகாமல் இருக்க எனக்கு பெலன் தாரும்.  ஆமென்.

 

 

 

Advertisements