Archive | January 3, 2012

மலர் 2 இதழ் 166 உள்ளும் புறமும் நோக்கும் கண்கள்!

யோசுவா: 14:7 தேசத்தை வேவு பார்க்க கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பனெயாவிலிருந்து அனுப்புகிறபோது எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன்.

யோசுவாவின் புத்தகத்திலிருந்து காலேபைப் பற்றி நாம் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். காலேப் என்கிற ஒரு நல்ல தகப்பனிடமிருந்து நம்முடைய பரம தகப்பனுடைய அடையாளங்களை நாம் அறிந்து கொள்ளுகிறோம்.

அடையாளம் என்று சொல்லும்போது நமக்கு சரீர அடையாளங்கள் மனதுக்கு வரும். சில நாட்களுக்கு முன்பு  மரித்துப் போன என்னுடைய அப்பாவின் அங்க அடையாளங்களை என்னால் சரியாக சொல்ல முடியும். அவர்களுடைய உயரம், நிறம், வாட்ட சாட்டமான உடற்கட்டு , எதற்கும் கவலைப்படாத கண்கள், இவற்றை குடும்பத்தை சேர்ந்த யாரும் மறக்க மாட்டார்கள்.

சரீர அடையாளங்கள் ஒரு மனிதனின் ஒரு பகுதி என்றால், அவனுடைய ஆவிக்குரிய அடையாளமும், உணர்ச்சிகளின் அடையாளமும் மற்றொரு பகுதியாகும். இவை அனைத்தும் சேர்ந்துதான் மனிதராகிய உங்களையும், என்னையும்  முழுமையாக்குகின்றன.

அதனால் தான் நாம் நம்முடைய பரம தகப்பனுடைய நான்கு அடையாளங்களை, நம்முடைய உலகத் தகப்பனாகிய காலேபின் அடையாளங்களிலிருந்து தெரிந்து கொள்ளப்போகிறோம்.

நாம் காலேபைப் பற்றி முதன்முதலில் எண்ணாகமம் 13 ம் அதிகாரத்தில் வாசிக்கும்போது அவனுக்கு 40 வயது. மோசேயால் கானானுக்குள் வேவு பார்க்க அனுப்பப்பட்டவர்களில்

ஒருவனாக தேர்ந்தெடுக்கப் பட்டான். இளம் பிராயம், நல்ல பெலசாலி, எதையும் செய்யத் துணியும் தைரியம் , இவை இருந்ததால் தான் அவன் மோசேயின் கண்களில் பட்டிருப்பான்.

இன்று நாம் வாசிக்கிற வேதாகம பகுதியில் காலேப் கானானை வேவு பார்க்க சென்ற போது, அந்த தேசத்தை தன் கண்களால் கண்டு, ஆராய்ந்து பார்த்து, மோசேயிடம் வந்து

தன்னுடைய கண்களால் கண்டதையும், இருதயம் கூறியதையும் மறுசெய்தியாகக் கொடுப்பதைப் பார்க்கிறோம். எபிரேய மொழியில் நாம் படிப்பதைப் போல , கானானைப் பற்றிய காலேபுடைய சாட்சி அவனுடைய கண்கள் கண்டதும், இருதயத்தில் தோன்றியதுமே அன்றி வேறு யாராலும் கண்டு, கூறப்பட்டவை அல்ல.

இதுவே காலேப் என்னும் தகப்பனுடைய முதலாவதான அடையாளம்.அவன் எவற்றையும் தன் கண்களால் பார்த்து ஆராய்ந்து சிறந்தவைகளை தெரிந்து கொள்பவன்.

அவன் மற்ற பத்து பேரோடு சேர்ந்து ஆமாம் சாமி போடவில்லை. மற்றவர்கள் கானானில் இராட்சதர்களையும் , உயர்ந்த மதிலையும் கண்டபோது, காலேப் வாக்குத்தத்தம் கொடுத்த தேவாதி தேவனைப் பார்த்தான், அவரால் எல்லாம் கூடும் என்று விசுவாசித்தான்.

இந்த சிறந்த குணம் நம்முடைய பரம பிதாவிடமும் உள்ளது. அவர் உன்னையும் என்னையும் பார்க்கிறார். காலேப் கானானைக் ,கண்டு ஆராய்ந்து, சிறந்தவைகளை நோக்கியதுபோலவே, நம் பரம பிதாவும் நம்மை ஆராய்ந்து அறிந்து, நம்மில் உள்ள சிறந்தவைகளைக் காண்கிறார். நாம் கந்தையை வஸ்திரமாக கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது அவர் நம்மை ராஜ வஸ்திரத்தினால் மூடுகிறார். நம்முடைய வாழ்க்கையிலே அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை! அவரால் காணக்கூடாததும் ஒன்றுமேயில்லை.

கானானுக்குள் நுழைந்தவுடன், மற்ற பத்து வேவுகாரரும் காணாதவற்றை காலேபின் கண்கள் கண்டன, கர்த்தரால் எல்லாம் ஆகும் என விசுவாசித்தன. நம்முடைய இருதயத்தில் நுழைந்தவுடன் நம்முடைய பரம பிதாவும் இதையே தான் செய்கிறார். நம்முடைய வாழ்வில் அவர் நமக்காக வைத்திருக்கிற வாக்குத்தத்தத்தையும், நமக்குள் புதைந்து கிடக்கும் சிறந்தவைகளையும் கண்டு, நான் இங்கேயே தரித்திருந்து உன்னில் வல்லமையாய் கிரியை செய்யட்டும் என்கிறார்.

பரம பிதாவானவர் உன்னை உள்ளும், புறமும் அறிவார்! உன்னை ஆராய்ந்து, ஊடுருவிக் காண்கிறார். உனக்குள் இருக்கும் மதிலும், இராட்சதரும் அவர் கண்களுக்கு மறைக்கப் பட முடியாது. ஆனாலும் அவர் உன்னை நேசிக்கிறார். உன்னைத் தம்முடைய வாக்குத்தத்தத்தின் பிள்ளையாய்க் காண்கிறார்.

நாம் பாவியாக இருக்கும்போதே அவர் நம்மை நேசித்ததால் தான் இன்று நாம் அவரை நேசிக்கிறோம், ஆராதிக்கிறோம். 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்