Archive | January 30, 2012

மலர் 2 இதழ் 180 யார் என் காரியமாய் செல்வார்?

நியாதிபதிகள் : 4: 9  “அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாக வருவேன்….. என்று  சொல்லி , தெபோராள் எழும்பி, பாராக்கோடேக் காதேசுக்குப் போனாள்.

நாம் இஸ்ரவேலின் தீர்க்கசரியான தெபோராளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம்.

கானானானிய ராஜாவாகிய யாபீனின் சேனாதிபதி சிசெராவை எதிர்த்து போராட செல்லும்படியாக பாராக்கிடம் தெபோராள் கூறியபோது, அவன் நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தெபோராள் அவனுக்கு பிரதியுத்தரமாக நிச்சயமாக வருவேன் என்கிறாள்.

நம்பிக்கையில்லாத, இருள் சூழ்ந்த சமயத்தில் இஸ்ரவேலின் நியாதிபதியாக, மக்களை நியாயம் தீர்த்து சரியான வழியில் நடத்த கர்த்தராள் தெரிந்துகொள்ளப்பட்டவள் தெபோராள். பேரீச்சமரத்தடியில் அமர்ந்து மக்களுக்கு ஆலோசனை கொடுக்கும் ஊழியத்துக்கு அழைக்கப்பட்ட வள். அவள் செய்து கொண்டிருந்த ஊழியத்தை விட்டு விட்டு ,பாராக்கிடம் சிசெராவை எதிர்த்து போராட வருவதாக சொல்வதைப் பார்க்கிறோம்.

ஒரு பெண்ணான அவள் ” என்னை ஏன்  கூட கூப்பிடுகிறாய்? யுத்தத்துக்கு பெண்ணான நான் என்ன முடியும்? கர்த்தர் தான் உனக்கு வெற்றியைக் கொடுப்பேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறாரே, தைரியமாகப் போய் வா என்று சொல்லவில்லை. மாறாக ,நான் உன்னோடேகூட நிச்சயமாக வருவேன் என்பதைப் பார்க்கிறோம்.

இரண்டு காரியங்களை இந்த வேதாமகப் பகுதியிலிருந்து சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முதலாவது தெபோராள் ” நிச்சயமாக வருவேன்” என்ற வார்த்தையை கவனியுங்கள்! உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம், நான் நிச்சயமாக வருவேன் என்று தன் முழு மனதோடு கூறுகிறாள். கர்த்தருடைய அழைப்பை முழுமனதோடு ஏற்றுக் கொண்டாள்.

இரண்டாவதாக ‘அவள் எழும்பி ‘ என்ற வார்த்தையை கவனியுங்கள்!  சிறு துளி தயக்கமும் இல்லை. கர்த்தருடைய அழைப்புக்கு உடனே கீழ்ப்படிந்து பாராக்கோடே சென்றாள்.

தெபோராளும், பாராக்கும் இணைந்து கர்த்தருடைய காரியமாய்ப் புறப்பட்டு போனதை என் மனக்கண்ணால் எண்ணிப் பார்த்தேன். இந்த இரண்டு தலைவர்களும் கேதேசுக்கு புறப்பட்டுப் போனதை இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கண்டனர்.

நியா:4:10 ல், பாராக் செபுலோன் நப்தலி மனிதரையும் கேதேசுக்கு வரவழைத்து பதினாயிரம் பேரோடு சென்றான், தெபோராளும் அவர்களோடு சென்றாள் என்று பார்க்கிறோம்.போருக்கு சென்ற பதினாயிரம் ஆண்களோடு இணைந்து செல்வது  ஒரு பெண்ணுக்கு சாத்தியமா!

எப்படிப்பட்ட இன்னல் வந்தாலும், எவ்வளவு கடினமாக வேலையாக இருந்தாலும் கர்த்தருடைய காரியமாக முழு மனதோடு, கீழ்ப்படிதலோடு சென்ற ஒரு பெண்ணாக தெபோராளைப் பார்க்கிறோம்.

இன்று கர்த்தர் உன்னை தம்முடைய காரியமாக செல்லும்படி அழைத்தால் தெபோராளைப் போல நிச்சயமாக செல்வேன் என்பாயா? கர்த்தருடைய அழைப்புக்கு உடனே கீழ்ப்படிந்து எழுந்து அவருடைய வழி நடத்துதலில் நடப்பாயா? கர்த்தர் உனக்காக ஆயத்தம் பண்ணியிருக்கிற பணியில் அவருடைய வாக்குத்தத்தமும், ஆசீர்வாதமும் உண்டு!

கர்த்தருடைய அழைப்பின் சத்தத்தைக் கேட்டும் கேட்காதவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? என்னுடைய வேலையை நான் எப்படி விட்டு விட்டு கர்த்தருடைய ஊழியத்துக்கு போவேன்? என்னால் கடினமான பணியை செய்ய முடியாதே? என் வேலை என்ன ஆகும்? என் சம்பளம் என்ன ஆகும்? என் பிள்ளைகளின் படிப்பு என்ன ஆகும்? எப்படி செல்வேன்? என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறாயா?

தெபோராளைப் போல  ‘நிச்சயமாக உம் காரியமாக செல்வேன் ஆண்டவரே! ” என்று அவருடைய அழைப்புக்கு இன்றே கீழ்ப்படி!

இயேசு அழைக்கிறார்!

அமைதியில்லா புயல் நிறைந்த வாழ்க்கையின் மத்தியில்

இயேசு அழைக்கிறார்!

தம்  அன்பின் குரலால் என்னை பின்பற்று என்று

இயேசு அழைக்கிறார்!

யார் என் காரியமாக செல்வார் என்று

இயேசு அழைக்கிறார்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்