Archive | January 5, 2012

மலர் 2 இதழ் 168 மலைகளைத் தாண்ட பெலன்!

யோசுவா: 14: 12  மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்கு போக்கும் வரத்துமஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களைத் துரத்தி விடுவேன் என்றான்.

நாம் இஸ்ரவேல் மக்கள் கானானுக்குள் பிரவேசித்த பின்னர் காலேப் அவர்களை நோக்கி நாற்பது வருடங்களுக்கு முன்னால் தான் இஸ்ரவேலை வேவு பார்க்க சென்ற சம்பவத்தை நினைவுபார்க்க கூறியதைப் பற்றிப் பார்த்தோம். காலேப் என்னும் உலகத் தகப்பன் மூலமாய் நம்முடைய பரலோகத் தகப்பனுடைய அடையாளங்களைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம்.

இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம்.

இன்று மறுபடியும் என்னோடு இஸ்ரவேலுக்குள் வாருங்கள்! காலேப், யோசுவா என்ற வயது மிக்க இரு சேனை வீரர்களை சந்திக்கலாம். இவர்கள் இருவரும் தான் மற்ற பத்து பேரோடும் சேர்ந்து இஸ்ரவேலை வேவு பார்க்க சென்றவர்கள். மற்ற பத்து பேரும் அழுது புலம்பி திரும்பிய போது, இவர்கள் இருவரும் கர்த்தரால் எல்லாம் கூடும் புறப்படுவோம் என்று கூறியவர்கள். தேவனாகிய கர்த்தரின் சாபத்துக்குள்ளாகி நாற்பது வருட வணந்திர வாழ்க்கையில் ஒருவரும் மிஞ்சாமல் மரித்துப் போன தலைமுறையினர் மத்தியில், உயிரோடே இருந்தவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே.

கர்த்தரால் இஸ்ரவேலின் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட யோசுவா,இஸ்ரவேலின் கோத்திரங்களுக்கு , கானான் தேசத்தை பகிர்ந்து கொடுப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். தூரத்தில்  ஒரு தெரிந்த முகம் தெரிகிறது! அவருடைய பழைய நண்பன் காலேப் தான்!

85 வயதாகும்போது நானாயிருந்தால் யோசுவாவிடம், எனக்கு ஒரு சமவெளியில் சின்ன நிலத்தை தாரும், என் கை கால் இருக்கிற நிலமையில் என்னால் ஏறி, இறங்க முடியாது என்றிருப்பேன். ஆனால் காலேப் அதற்கு எதிர்மாறாக செய்கிறான். முதலில் அவன் யோசுவாவிடம் தன் பெலன் குன்றிப்போகவில்லை என்று கூறுவதைப் பார்க்கிறோம். இது ஒன்றும் அவன் தன்னைப் பற்றி பெருமை பாராட்டின வார்த்தைகள் அல்ல. நாற்பது வருடங்களுக்கு முன்பு பரலோக தேவன் அளித்த அதே பெலன் தொடர்ந்து அவனுக்கு கிருபையாக அருளப்பட்டது.

காலேப் யோசுவாவின் கண்களைப் பார்த்து, நான் பெலசாலியாக இருக்கிறேன் என்று சொன்னது மட்டுமல்லாமல், ஒருபடி மேலே சென்று, ஏனாக்கியரும், அரணான பட்டணங்களும் உள்ள அந்த மலைநாட்டை எனக்குத் தாரும் , எனக்கு எதைக் குறித்தும் பயமில்லை, நாற்பது வருடத்துக்கு முந்தியிருந்த பெலன் அப்படியே இருக்கிறது, நான் மலைநாட்டில் உள்ள இராட்சதரை விரட்டி விட்டு வெற்றி பெறுவேன் , எனக்கு மலைநாட்டைத் தாரும் என்றான்.

மலைநாட்டைத் தாரும்!!  என்றாவது உங்கள் வாழ்க்கையில் பெரிய மலைகள் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக நினைத்தீர்களா? எப்படி நான் தாண்டுவேன்? எப்படி முறியடிப்பேன்? இதை என்னால் தாண்ட முடியுமா? என்றெல்லாம் எண்ணவில்லையா?

காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக இன்று நாம் பார்ப்பது, குறையாத பெலன்.  நம்முடைய கரங்களை இறுகப் பிடித்து வழிநடத்தும் பெலன்! மலையானாலும் குன்றானாலும், மேடானாலும், பள்ளமானாலும், இராட்சதர் போன்ற எதிரிகள் வந்தாலும் நம்மை விடாது வழிநடத்தும் வல்லமை!

இந்த வல்லமையுள்ள பரம பிதாவுடன் நாம் ஒவ்வொரு நாளும் நம்மை இணைத்துக் கொள்ளும்போது அவருடைய வல்லமை, பெலன் நமக்கு குறைவில்லாமல் கிடைக்கும்.

காலேபைப் போல நாம் மலைநாட்டைக் கண்டு பயப்பட வேண்டாம்! இராட்சதரைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்