Archive | January 2, 2012

மலர் 2 இதழ் 165 ‘அப்பா என்பது’ ……. எத்தனை ஆசீர்வாதமான சொல்!!

யோசுவா:14:6 கேனாசியனான எப்புனேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி; காதேஸ்பர்னேயாவிலே

கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன

வார்த்தையை நீர் அறிவீர்.

இன்றைக்கு இந்த தியானத்தை எழுதும்போது, என்னுடைய அப்பா இறந்து 26 நாட்களே ஆகியுள்ளன.

அப்பா  மரிப்பதற்க்கு முன்பே நான் இந்த தியானத்தை எழுத ஆரம்பித்திருந்தேன். தகப்பன் மகள் உறவைப் பற்றிய

இந்த தியானத்தை அப்பா இறந்த பின்னால் என்னால் எழுதவே முடியவில்லை.

அப்பாவை இழந்த வேதனையுடன்தான் எழுதுகிறேன்.

எப்பொழுதோ வாசித்த  வாசகம் ஒன்று ” பெண் தன் கணவனுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ,ஆனால் தன் தகப்பனுக்கு அவள் எப்பொழுதும்

ஒரு ராஜகுமாரத்திதான் ”  என்றது நினைவுக்கு வந்தது.

அப்பாவுடைய கண்களுக்கு தன் மகள்தான் உலகத்திலேயே அழகு மிக்கவளாகத் தெரிவாள்.   என்னுடைய அப்பாவின் கண்களுக்கு

நான் எப்பொழுதுமே ராஜ குமாரத்தியாகத்தான் இருந்தேன். அப்பாவை இழந்த நினைவுகள் என் மனதில் பசுமையாய் தங்கும் இந்த வேளையில்

ஒரு அருமையான தகப்பனைப் பற்றி இந்த தியானத் தொடரில் எழுத ஆரம்பிக்கிறேன்.

அப்பா என்ற வார்த்தை எனக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கு சந்தோஷத்தைக்கொடுக்கும் வார்த்தையல்லவா. அந்த வார்த்தையைக்

கேட்கும்போது நம்முடைய அப்பாவுக்கும் நமக்கும் உள்ள தொடர்புதான் நம் மனக்கண் முன்னால் வரும்.

என்னுடைய இள வயதிலேயே நான் இயேசுவை தகப்பனாக அறிந்தவள். அப்பாவிடம் பேசுவதுபோல அவரிடம் பேசியும், அவர் வேதத்தின்

மூலமாகபேசுவதைக் கேட்டும் மகிழ்ந்திருக்கிறேன்.

இந்த யோசுவாவின் புத்தகத்தில் அடுத்தபடியாக நாம் காலேபுக்கும் அவன் மகள் அக்சாளுக்கும் இடையில் இருந்த ஒரு அருமையான

உறவைப் பற்றிப்பார்க்கப்போகிறோம். யோசுவா 14 ம், 15 ம் அதிகாரங்களில், மோசேயால் இஸ்ரவேலுக்குள் வேவுகாரனாய்

அனுப்பப்பட்ட காலேபைப் பற்றியும் அவன் குமாரத்தி அக்சாளைப் பற்றியும் படிக்கிறோம்.

ஆச்சரியப்படும் விதமாக, இதே கதை நியாதிபதிகள் 1 ம் அதிகாரத்திலும் எழுதப்பட்டுள்ளது. அதனால் தான் அது என் கவனத்தை

அதிகமாக கவர்ந்தது. எந்த ஒரு சம்பவத்தையும் வேதம் இரு முறை கூறுமானால் அதில் ஏதோ ஒரு முக்கிய பாடம் உள்ளது என்பது என் யூகம்.

அதனால் இந்த பகுதியை நாம் சில நாட்கள் தொடர்ந்து படிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த அருமையான தகப்பன் மகள் உறவுக்கு பின்னால்,

நம் பரம தகப்பனுக்கும் நமக்கும் உள்ள உறவு புதைந்து கிடக்கிறது.

ஒருவேளை நம்மில் பலருக்கு ஒரு நல்ல உலகத் தகப்பன் அமையாமலிருந்திருக்கலாம். நம் உலகத் தகப்பன் நமக்கு ஒரு மாதிரியாக

வாழாமல் கூட இருந்திருக்கலாம். அல்லது சிலர் சிறுவயதிலேயே தகப்பனை இழந்ததால் உலகத்தகப்பனின் அன்பு இல்லாமல் போயிருக்கலாம்.

இந்த கதையின் மூலமாக நம் பரலோகத்தகப்பன் நம்மேல் காட்ட விரும்பும் அன்பையும், பாசத்தையும் நாம் அறியலாம்.

காலேப் தன்னுடைய குடும்பத்தோடு வைத்திருந்த உறவை நாம் அறிந்து கொள்ள எண்ணாகமம் 13: 30 க்கு செல்வோம். காலேப் எப்படிப்பட்ட

மனிதன் என்று முதன்முதலில் நாம் அறிந்து கொண்ட இடம் இதுவே.

மோசேயால் கானானுக்குள் அனுப்பப்பட்ட காலேப், யோசுவாவோடும், மற்ற பத்து வேவுகாரரோடும் சேர்ந்து கானானை வேவு பார்த்து

திரும்பி வருகிறான். மற்ற பத்து பேரும் மோசேயிடமும், இஸ்ரவேல் ஜனங்களிடமும், கானானில் தாங்கள் பார்த்த இராட்சதர்களைப் பற்றியும்,

கானானுக்குள் போகும் வழியில் இருந்த யோர்தானைப் பற்றியும் புலம்பித் தீர்த்தபோது, ‘காலேப் மோசேக்கு முன்பாக ஜனக்களை

அமர்த்தி, நாம் உடனே போய் அதை சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான்.”

தங்களுக்கு முன்பாக இருந்த பிரச்சனையை பெரியதாகவும், தங்களை வழிநடத்திய தேவனை சிறியவராகவும் நினைத்து கலங்கிய மக்களை

அமைதிப்படுத்தினான் என்று பார்க்கிறோம். இந்த பெலசாலியான மனிதன் தன்னை  கர்த்தருடைய மனிதன் என்று நமக்கு வெளிப்படுத்தினான்.

பரலோக தேவனை அறிந்த அவன் வாழ்க்கை நமக்கு நம்முடைய பரலோக தேவனின் அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அவனுடைய மகள் காலேபிடம் உரிமையோடு வந்து ஆசீர்வாதத்தைக் கேட்பதை நாம் யோசுவா 16: 19 ல் வாசிக்கிறோம். இதைத்தான் நான்

காலேபின் வாழ்க்கையில் மிகவும் விரும்புகிறேன். நம்முடைய அப்பாவைப் பற்றி நாம் எவ்வளவு அதிகம் அறிவோமோ, அவ்வளவு அதிகம் நாம்

அவருடைய சமுகத்தில் தைரியமாக நின்று ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இனி ஒரு சில நாட்கள் நாம் காலேபின் குணாதிசயத்தின்  மூலம் நம் பரம பிதாவின் குணாதிசயத்தை அறிந்து கொள்வோம். நான் என் தகப்பனுக்கு

பிரியமான பிள்ளை என்பதை நாம் ஒவ்வொருவரும் இந்த தியானத்தின் மூலம் உணர்ந்து கொள்ள கர்த்தர் கிருபை செய்யும்படியாக ஜெபிக்கிறேண்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்