Archive | March 1, 2016

மலர் 6 இதழ் 336 எனக்கு வழிகாட்டி என்னை நடத்தும்!

சங்கீ: 31: 3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.

பல நாட்களுக்கு முன்பு மார்டின் லூதெருடைய மனைவி Katherine அம்மையார் எழுதிய சில வரிகளைப் படித்தேன். அவர்கள்  “ஆண்டவரே என்னுடைய எல்லா துயரங்களுக்காகவும் நன்றி, அவைகள் மூலமாய் நான் உம்முடைய மகிமையை காண உதவி செய்தீர், என்னை நீர் ஒரு நாளும் கைவிடவும் இல்லை, மறக்கவும் இல்லை ” என்று எழுதியிருந்தார்கள்.

 எல்லா துயரங்களுக்காகவும் நன்றி!   எல்லா’ என்ற  வார்த்தை உங்கள் வாழ்க்கையில் எதைக் குறிக்கிறது. உங்களில் சிலர் போய்க்கொண்டிருக்கும் கடுமையான பாதை எனக்கு தெரியும். ஆனாலும் அந்தப் பாதையின் முடிவு நமக்கு முதலிலேயே தெரியுமானால், நாம் கர்த்தரின் வழினடத்துதலுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருப்போமா?

நாம் யோசேப்பின் வாழ்க்கையைத் தொடரும் முன்னர், நம்முடைய வாழ்க்கையை பற்றி சற்று சிந்தித்து பார்க்கலாம் என்று யோசித்தேன்.

யோசேப்பின் சரித்திரம் எல்லா தலைமுறையினருக்கும் சவால் அளிக்கும் ஒன்று. யோசேப்பை போல நாம் அனுபவித்த கஷ்டங்கள் உண்டா? ஏன் எனக்கு இந்த இடி மேல் இடி என்றாவது இடிந்து போயிருக்கிறீர்களா?

என்னால் நாலைந்து அனுபவங்களைப் பற்றி கூறமுடியும். என்னுடைய வாழ்க்கை என்னும் படகு புயலில் அலைக்கழிக்கப் பட்டபோது அது கவிழ்ந்து போகவுமில்லை! நான் மூழ்கவுமில்லை! அழிந்து போகவுமில்லை! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

என்னுடைய வாழ்க்கைப் புயல் என்னைத் தாக்கும் முன்னரே, கர்த்தர் எனக்காக வழியை ஆயத்தம் பண்ணிக்கொண்டிருந்தார். நான் அழைக்கும் முன்னரே என் ஜெபத்துக்கு பதிலளிக்க தயாராக இருந்தார். யாவற்றையும் என் நன்மைக்காக நடந்தவைகளாய் மாற்றியமைத்துக் கொண்டிருந்தார்.

ஒருவேளை நீ இன்று சோர்ந்து போன நிலையில் காணப்படலாம்! எதிர்காலம் நம்பிக்கையில்லாமல் இருளடைந்து இருக்கலாம்! அப்படியானால் ‘ராஜாவின் மலர்கள்’ உனக்காகத்தான் எழுதப்படுகிறது. கர்த்தர் என்னை இந்த இடத்தில் யோசேப்பின் சரித்திரத்தை தொடர விடாமல் இந்த வார்த்தைகளை எழுதும்படி கட்டளையிட்டார்! உனக்காகத்தான்!

வேதனைகளாலும், பிரச்சினைகளாலும் சோர்ந்து போகிறாயா? யாக்கோபுக்கு அவைகள் இருந்தன! லேயாளுக்கு இருந்தன! யூதாவுக்கு இருந்தன! யோசேப்புக்கு இருந்தன! கர்த்தர் அவர்களோடு இருந்தார்! கர்த்தர் அவர்களோடு இருந்ததற்கு அடையாளம் மிகக் குறைவாக காணப்பட்ட நேரத்திலும், கர்த்தர் அவர்களுக்காக ‘யாவற்றையும்’ செய்து கொண்டு இருந்தார். சரியான சமயத்தில், சரியான முறையில் அவருடைய உதவி நமக்கும் வரும்.

நாம் கடந்த காலத்தை சற்று திரும்பி பார்ப்போம்! தேவனின் அற்புத செயல்களை நினைவு கூறுவோம்! அவர் நம்மை வழி நடத்திய அற்புதம், நம்முடைய எதிர் காலத்தை தைரியமாய் சந்திக்க நமக்கு பெலன் தரும். 

கர்த்தருடைய வார்த்தை உங்களை இந்த புதிய மாதத்தில் வழிநடத்தட்டும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.