Archive | March 9, 2016

மலர் 6 இதழ் 342 சிசு கொலை செய்யாததால் பெற்ற ஆசீர்வாதம்!

யாத்தி:1: 20, 21 இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள்.

மருத்துவச்சிகள் தேவனுக்கு பயந்ததினால் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.

சிப்பிராள், பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகள் பார்வோனுக்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்ததினாலே, அவர்கள் எபிரேயாருக்கு பிறந்த ஆண்பிள்ளைகளை பார்வோனின் கட்டளைப்படி கொலைசெய்யாமல் காப்பாற்றினர் என்று பார்த்தோம். கர்த்தருக்கு பயந்த பயம், ஞானமுள்ள வார்த்தைகள் இவையே அவர்கள் பார்வோனுக்கு முன்னால் உபயோப்படுத்திய ஆயுதம் என்று பார்த்தோம்.

இந்த இரு பெண்களைப் பற்றி யோசிக்கும்போது இவர்கள் பார்வோனைப் பிரியப்படுத்துவதைவிட கர்த்தரால் படைக்கப்பட்ட ஜீவனைக் காப்பதையே தெரிந்து கொண்டனர் என்று காண்கிறோம்.

எத்தனை எபிரேய தாய்மார்கள் தங்கள் ஆண்பிள்ளைகளைப்பார்த்து மனம் நிறைந்து சொல்லியிருப்பார்கள் ‘ மகனே நீ உயிரோடிருப்பது சிப்பிராள், பூவாள், தேவனுக்கு பயந்து, பார்வோன் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் உன்னைக் காப்பாற்றியதால்தான்’ என்று. எத்தனை தாயின் மனம் அவர்களை வாழ்த்தியிருக்கும்!  

இந்த மருத்துவச்சிகள்,எகிப்தில் வளரும் ஆண்பிள்ளைகள் படும் கஷ்டங்களைப் பார்த்து, இவர்கள் இந்தப் பாடு படுவதற்கு இவர்கள் பிறக்கும் போது கொன்றுபோடுவதே நலமாயிருக்கும் என்று எண்ணியிருக்கலாம். பார்வோனின் ஆட்சியில், எபிரேயர் சரீரப்பிரகாரமாய் அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, கடின உழைப்புக்குள்ளாயினர். இப்படிப்பட்ட கேவலமான வாழ்க்கை நம் பிள்ளைகளுக்கு வேண்டுமா? என்று  இவற்றை ஒரு சாக்காய் காண்பித்து குழந்தைகளை அழித்து பார்வோனிடம் நல்ல பெயர் வாங்கியிருந்திருக்கலாம் அல்லவா?

நம்முடைய சமுதாயத்தில் எத்தனை பேர் கருச்சிதைவு என்ற சிசு கொலை செய்வதற்கு இப்படி சாக்கு சொல்கிறார்கள்! தேவன் பரிசாக அளிக்கிற ஜீவனை ஏதோ சரீரத்தில் உள்ள கட்டியை எடுப்பது போல எடுத்து எறிந்துவிடுகிறார்கள்.

நாங்கள் தருமபுரி மாவட்டத்தில், ஒரு குழந்தைகள் காப்பகம் வைத்திருக்கிறோம். அந்த மாவட்டத்தில் பெண் சிசுவை கொலை செய்வது அநேக கிராமங்களில் நடக்கிற சம்பவம் என்று நமக்கு தெரியும். அங்கு சேவை செய்யும் எங்கள் பணியாளர்கள் கொடுத்த ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முன் காலத்தில் மருத்துவச்சிகள் மூலமாய் பிறந்த சிசுவுக்கு கள்ளிப்பால்கொடுத்து மரிக்கும்படி செய்த மக்கள், இன்று பிறந்த சிசுவை வேகமாக சுற்றும் காற்றாடியின் (fan) கீழ் படுக்கவைத்து மூச்சு திணற செய்கிறார்களாம்.

இப்படிப்பட தவறை நம் சமுதாயம் இன்று செய்வதற்கு என்ன காரணம்? பெண் பிள்ளைகள் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? வீட்டுக்கு பாரம் தானே! இவர்கள் பிறந்து பார சுமையாய் வாழ்வதைவிட இவர்களை அழித்துவிடுவதே மேல் என்ற எண்ணம்!

சங்கீ:139: 13-16: “ நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைகொண்டிருக்கிரீர்; என் தாயின் வயிற்றில் என்னைக் காப்பாற்றினீர்

.நான் பிரம்மிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன். உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய் தெரியும்.

நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு,பூமியின் தாழ்விடங்கலிலே  விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.

என் கருவை உம்முடைய கண்கள் கண்டது. என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோது, அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.

இந்த வேத வசனங்களுக்கு ஒப்பாய், எபிரேய மருத்துவச்சிகள் பிறந்த ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் சிருஷ்டி கர்த்தரின் அழகைக் கண்டனர்! தேவன் அந்த குழந்தையின் வாழ்வில் வைத்திருந்த மகா பெரிய நோக்கத்தைக் கண்டனர்! அவர்களை தேவனுடைய பிள்ளைகளாகக் கண்டனர்!

எபிரேய மருத்துவச்சிகளைப் போல குழந்தைகளின் மேல் உங்களுக்கும் கரிசனை இருக்குமானால், இன்று சமுதாயத்தில் கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்ட குழந்தைகள் வறுமையால் வாடுவதைக் கண்டும் காணமல் போவதில் கர்த்தர் பிரியப்படுவாரா? கர்த்தருடைய சிருஷ்டியை நாம் மதிப்பவர்களானால் வறுமையால் வாடும் ஏழை குழந்தைகளை ஜாதி மத பேதமின்றி, ஆதரிப்பதும் நம் கடமையல்லவா? ஏனெனில் அவர்கள் நம்மைப் போல நம்முடைய சிருஷ்டி கர்த்தரால் பிரம்மிக்கத்தக்கபடி உருவாக்கப் பட்டவர்கள் தானே!

ஒவ்வொரு ஜீவனும் நாம் சம்பாதித்த சொத்து அல்ல! அது தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஈவு! அதை அழிக்க நமக்கு உரிமையில்லை!

சிப்பிராள், பூவாள் என்ற இரு மருத்துவச்சிகளுக்கும் தேவன் நன்மை செய்தார் என்று வாசிக்கிறோம், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை கர்த்தர் ஆசிர்வதித்தார் ! அதுமட்டுமல்ல தேவன் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். அவர்கள் மூலமாய் இஸ்ரவேல் மக்களும் ஆசீர்வதிக்கப்பட்டனர். எத்தனை அற்புதம்? சிசு கொலை செய்ய மறுத்ததால் எத்தனை ஆசீர்வாதம்?
இந்த ஆசீர்வாதம் உங்களுக்கும் உண்டு!
 
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், அவருக்கு பயந்து, தேவன் அருளிய ஞானத்தோடும் தைரியத்தோடும் வாழ்க்கையை எதிர்த்து போராடி, கர்த்தர் விரும்பிய காரியங்களை நம் வாழ்வில் செய்வோமானால் இந்த இரு மருத்துவச்சிகளை ஆசீர்வதித்த விதமாய் நம்மையும், தேவனாகிய கர்த்தர் நம் குடும்பத்தையும், நம்முடைய சமுதாயத்தையும் ஆசீர்வதிப்பார்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்