Archive | March 2, 2016

மலர் 6 இதழ் 337 உலகத்தார் உன்னில் காண்பது என்ன?

ஆதி:41: 39 பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி; தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் வேறோருவனும் இல்லை

யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றி சற்று அதிகமாகவே எழுதுகிறேன் என்று தோன்றுகிறது!

யோசேப்பு தன் சகோதர்களால் விற்கப்பட்ட பின் எகிப்தை வந்து அடைகிறான். ஒரு பணக்கார வாலிபனாய் வாழ்ந்தவன் போத்திபாரின் வீட்டில் ஒரு அடிமையாக வேலை செய்கிறான். ஆதியாகமம் 39 ம் அதிகாரத்தில் இரண்டே வசனங்கள் வந்தவுடன், கர்த்தர் அவனோடிருந்தார் என்று போத்திபார் அறிந்ததாக வாசிக்கிறோம் யோசேப்பு அங்கிருந்தவர்களை விட அதிகம் படித்ததினாலோ அல்லது அழகுள்ளவன், பணக்காரன் என்பதாலோ அல்ல, அவனுடன் கர்த்தர் இருக்கிறார் என்பதே அவன் எஜமானாகிய போத்திபாரின் கண்களில் பட்டது.

அவன் காரியசித்தியுள்ளவனாய் எல்லா காரியங்களையும் சிறப்பாக செய்தது, கர்த்தர் அவன் செய்கிற யாவையும் வைக்கப் பண்ணுகிறார் என்று போத்திபாரின் வீட்டில் பறைசாற்றியது. நாம் செய்த வேலையை யாராவது பாராட்டினால் உடனே நாம், நம்முடைய கல்லூரி படிப்பிற்கோ அல்லது நம்முடைய கடின உழைப்பிற்கோ மகிமையை கொடுப்போம்!

ஆனால் இங்கு யோசேப்பு அமைதியாக, அடக்கமாக தேவன் தன்னோடிருப்பதை பறை சாற்றினான். எப்படி ஐய்யா இப்படி அருமையாய் செய்தாய்? என்று கேட்டால் பதில் கர்த்தர் என்னோடிருப்பதால் என்றுதான் வரும்!

அதுமட்டுமல்ல, யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டபோது, அங்கும் சிறைச்சாலையின் தலைவன் எல்லாவற்றையும் யோசேப்பிடம் ஒப்புக்கொடுத்ததின் காரணம் கர்த்தர் அவனோடிருந்ததுதான்!

பின்னர் சிறையில் பானபாத்திரக்காரனும், சுயம்பாகிகளின் தலைவனும் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கியபோதும் கர்த்தர் அவனோடிருந்தார்.

ஆதி: 41: 25 ல் பார்வோன் முன்பாக அழைக்கப்பட்டு, அவனுடைய நித்திரையை கெடுத்த சொப்பனத்தின் அர்த்தத்தை தெளிவாக விளக்கியபோது, யோசேப்பு  பார்வோனை நோக்கி, “தேவன் தாம் செய்யப் போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்” என்றான்.

பார்வோன் தன் சொப்பனத்தின் விளக்கத்தை கேட்டபோது, ‘உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் ஒருவனும் இல்லை என்று கூறி, யோசேப்பை பார்வோனுக்கு அடுத்தபடியாக எகிப்தை ஆளும் அதிகாரியாக்கினான்.

ஒரு உலகப்பிரகரமான ராஜாவாகிய பார்வோன் கர்த்தரை அறியாத ஒரு மனிதன், அவன் அப்படி எதை யோசேப்பின் வாழ்வில் கண்டான்? யோசேப்பின் கல்லூரிப் படிப்பையா, அவன் வாங்கியிருந்த பட்டங்களையா? அவனுடைய அழகையா? திறமையையா? குடும்ப பின்னணியையா? அல்லவே அல்ல! சிறிது நேரம் அவனுடன் இருந்த எல்லாரும் உணர்ந்த ஒரே காரியம் கர்த்தர் அவனோடிருந்தார் என்ற உண்மையே!

தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்! படிப்பும், பட்டங்களும், திறமையை வளர்ப்பதும் நிச்சயமாக நமக்கு தேவையே! ஆனால் ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! பெரிய பட்டப் படிப்பு இருக்கலாம், உலகம் போற்றும் அழகு இருக்கலாம், விதவிதமான துணிமணிகள் உடுத்தலாம், ஆனால் பெரிய பதவியில் இருக்கலாம், பெரிய வீடு வாசல் இருக்கலாம், ஆனால் கர்த்தர் உன்னோடு இல்லாவிடில் நீ உலகத்தை ஆதாயப்படுத்தினாலும் உன் ஆத்துமாவை இழந்து போவாய்!

தன்னுடைய பதினேழு வயதில் தன் குடும்பத்தை பிரிந்து துர தேசத்துக்கு அடிமையாக வந்த யோசேப்பு தன் கண்களை ஏறேடுத்துப் பார்த்து தேவனாகிய கர்த்தரை நோக்கி அவர் தன்னோடு இருக்கும்படி அழைத்தான்! கர்த்தர் அவனோடு இருந்தார். அவன் ஒருநாளும் தனிமையை அனுபவிக்கவில்லை. அவனை சுற்றி இருந்தவர்கள் சில நொடிகளில் அவனோடு கர்த்தர் இருந்ததை உணர முடிந்தது!

எத்தனை அற்புதமான சாட்சி? உன்னையும், என்னையும் அறிந்த நம் நண்பர்கள், நம் குடும்பத்தினர், நம்மை சுற்றியுள்ளவர்கள், நாம் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்கள், நம்முடன் கர்த்தர் இருப்பதை எப்பொழுதாவது உணர்கிறார்களா?

கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்