Archive | March 22, 2016

மலர் 6 இதழ் 351 மலருக்காக துதிக்கும் வாய் முள்ளுக்காக முறுமுறுப்பதென்ன?

 

எண்ணா:12: 1, 2  எத்தியோப்பியா  தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து  ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:

கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.

 

சில நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் காரியங்களைப் பார்க்கும் போது ‘என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்; என்ற வாக்கியம் கதைகளுக்கு மாத்திரம் அல்ல நம் வாழ்க்கைக்கும் சொந்தமாயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுவேன்! நல்லவர்களின் வாழ்க்கையில் அநேக சோதனைகள் வருவதுண்டு.

சுனாமி போன்ற பேரலைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் அழித்தாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்க்கையில் சுனாமியை சந்தித்து வருகின்றனர். வருந்தக் கூடிய விஷயம் என்ன என்றால் நம்மில் பலருக்கு வாழ்க்கையில் ‘சந்தோஷமாக வாழ்ந்தார்கள்’ என்ற வரிக்கே இடமில்லை.

துதி ஆராதனை நடத்தி இஸ்ரவேல் மக்களை உற்சாகப்படுத்துகிற ஒரு தீர்க்கதரிசயாக, கர்த்தர் மிரியாமைத் தெரிந்து கொண்டார் என்று பார்த்தோம். அவள் வாழ்க்கையிலும் சந்தோஷம் நிலைக்கவில்லை!

எகிப்தை  விட்டு வெளியேறி, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்தை நோக்கி சென்ற இஸ்ரவேல் மக்களுக்கு துதி ஸ்தோத்திரங்களோடு உற்சாகப்படுத்த மிரியாமைப் போல ஒரு தீர்க்கதரிசி தேவைப்பட்டது. ஏனெனில் இஸ்ரவேல் மக்கள் அடிக்கடி முறுமுறுப்பதைப் பார்க்கிறோம். யாத்திராகமம், உபாகமம், எண்ணாகமம் என்ற மூன்று புத்தகங்களிலும் 23 தடவைகளுக்கு மேல் ‘முறுமுறுப்பு’ அல்லது ‘முறுமுறுத்தார்கள் ’ என்ற வார்த்தைகள் வருகின்றன! மோசேக்கு எதிராக முறுமுறுத்தார்கள்! கர்த்தருக்கு எதிராக முறுமுறுத்தார்கள்! ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி அந்த ஜனங்கள் முகத்தை தூக்கினர்.

அவர்களை உற்சாகப் படுத்த கர்த்தர் மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் உபயோகப்படுத்தினார். ஆனால் ஒருநாள் ஆரோனும், மிரியாமும், மோசேக்கு உறுதுணையாய் நில்லாமல், முறுமுறுக்கும் ஜனங்களைப் போல மோசேயின் மனைவிக்கு எதிரே பேசினார்கள் என்று இன்றைய வேதாகம பகுதியில் வாசிக்கிறோம்.

நாம் ஆவியில் துதி சந்தோஷமாக இருக்கும்போது நம் குடும்பத்தை கலைக்க சாத்தான் இப்படிப்பட்ட முறுமுறுப்பின் ஆவியை நமக்குள்ளும் ஏவுகிறான்! ஏதாவது ஒரு காரியத்தில் முறுமுறுத்து சந்தோஷத்தை இழக்கிறோம் அல்லவா?

மிரியாம் தன் தம்பியின் மனைவிக்கு எதிராக கலகம் பண்ணுகிறாள்! துதி ஆராதனை செய்த தீர்க்கதரிசியின் வாயில் சபித்தலும் காணப்பட்டது.

எண்ணாகமம் 12 வது அதிகாரத்தை தொடர்ந்து வாசிப்பீர்களானால் கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் மிரியாமையும் ஆசாரிப்புக் கூடாரத்துக்கு அழைத்து, ஒவ்வொருவருக்கும் தான் கொடுத்திருக்கிற தனிப்பட்ட பொறுப்பைப் பற்றி பேசி, மோசேக்கு எதிராக பேசியதால் தன் கோபத்தை அவர்கள் மேல் காட்டினார் என்று பார்க்கிறோம்.

மேலும் அவர் ஆசரிப்பு கூடாரத்தை விட்டு விலகியபோது மிரியாம் உறைந்த பனியின் வெண்மை போன்ற குஷ்டரோகியானாள் என்று வேதம் சொல்லுகிறது.

இந்த அதிகாரத்தை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது, கதை போல படங்களோடு வாசிக்க கேட்டபோது,கடவுள் கொடூரமானவர், தவறாக எதையாவது நான் பேசிவிட்டால் குஷ்டரோகம் கொடுத்துவிடுவார் என்று பயந்தேன்! பயப்படுத்தும் சம்பவம்தானே இது!

நம்மில் பலர் நம் வாழ்க்கையில் தேவன் கொடுத்திருக்கிற ரோஜா மலருக்காக தேவனைத் துதிப்பதை விட்டு விட்டு, அதில் காணும் சிறு முள்ளுக்காக முறுமுறுக்கிறோம்!

துதியோடு வாழவேண்டிய நீ உன் வாழ்க்கையை முறுமுறுப்பினால் சபித்தலுக்குள்ளாக்காதே!

கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்