Archive | April 2016

மலர் 6 இதழ் 379 – மறந்து விடாதே!

எண்ணா:15: 37 – 38 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி;

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்;

நீங்கள் பின்பற்றி சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும், உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியெ செய்யும்படிக்கு அது உங்களுக்கு தொங்கலாய் இருக்கவேண்டும்.”

 

நானும் என் கணவரும் அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்றோம்.

அவர் தன் மனைவியிடம் என்னை அவர்களோடு கூட்டி சென்று தங்களுடைய ஊழியங்களைக் காட்டும்படி சொன்னார். அவருடைய மனைவி லிண்டா தன் செக் புக்கை எடுத்து வருவதாக ஆபிசுக்குள் சென்றவர் ஒருமணி நேரமாய் வரவில்லை.  என்ன நடக்கிறது என்று பார்க்க உள்ளெ சென்றவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது! ஆபிசே தலை கீழாக மாறி விட்டது. ஆபீஸ் பைல்கள் குப்பை போல் கிடந்தன! அந்த செக் புக்கைத் தேடி அலங்கோலப் படுத்திவிட்டார். பின்னர் தன்னுடைய காரில் தேட ஆரம்பித்தார். அங்கும் அலங்கோலம்! மூன்று மணி நேர தேடலுக்கு பின்னர், அவர்கள் காரில் வைத்திருந்த ஒரு சிறு கைப்பையில் அந்த செக் புக் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் ஒரு நாளே வீணாய் போய் விட்டது எனக்கு.

எத்தனை முறை நாமும் இப்படி முக்கியமான பொருட்களை வைத்த இடம் மறந்து போய் தேடியிருக்கிறோம்! நாம் மறதியுள்ளவர்கள் என்று நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கும் தெரியும்! அதனால் தான் சில காரியங்களை நாம் நினைவுகூற வேண்டி அவர் திரும்ப திரும்ப நினைவூட்டுகிறார்!

அதுமட்டுமல்ல இஸ்ரவேல் புத்திரரை, தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்றும், அதைப் பார்த்து, அவர்கள் கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைவுகூற வேண்டும் என்றும் சொன்னார்.

கர்த்தருடைய கற்பனைகளை நினைவுகூற என்ன அருமையான வழி! இந்தக் காலத்தில் நம்மை நினைவு படுத்த பலமுறைகளை உபயோகிக்கிறோம்! வாலிபருக்கு மொபைல் போன் போன்ற கருவிகள் அதிகமாக உதவுகின்றன! என்னைப் போன்றவர்கள் சமையலறையில் குறிப்பு எழுதிக் கொள்வோம்! ஆனால் அந்தக் காலத்தில் என் பாட்டி ஏதாவது ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமானால், தன்னுடைய ஆறுமுழ புடவையின் நுனியில் ஒரு முடி போட்டுக் கொள்வார்கள்! அந்த முடிச்சை பார்க்கும்போதெல்லாம் முடிக்க வேண்டிய காரியம் ஞாபகத்துக்கு வரும் அல்லவா!

கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் எதை மறக்காமலிருக்க விரும்பினார்?

1. கர்த்தர் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்ததை நினைவுகூற

வேண்டும் என்று விரும்பினார்.  ( உபாகமம்: 5:15)

2. தம்முடைய பலத்த கரத்தினால் அவர்களை எகிப்திலி்ருந்து

புறப்படப் பண்ணினதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். (யாத்தி:13:3)

3  அவர்களை உருவாக்கின தேவனை நினைவுகூற விரும்பினார்.

கர்த்தர் யாத்தி:20 ம் அதிகாரத்தில் பத்து கட்டளைகள் கொடுத்தபோது,

நான்காவது கட்டளையை மாத்திரம் நாம் நினைவு கூறும்படி கூறினார்.

ஒய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக’ (யாத்தி:20:8)

ஏனெனில் ஒய்வுநாள் கர்த்தருடைய ஆறுநாள் கிரியை ஞாபகப்படுத்துகிறது!

அவர் கரம் நம்மை உருவாக்கியதை ஞாபகப்படுத்துகிறது!

4. இந்த உலகம் நமக்கு சொந்தமல்ல என்று நினைவுகூற விரும்பினார்.

லூக்:17:32 ல் லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று

சொல்லப்பட்டுள்ளது. உலகத்தை திரும்பிப் பார்த்து அவள் உப்புத்

தூணானாளே!

5. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ’என்னை நினைவுகூரும்படி இதை

செய்யுங்கள்’ (லூக்:22:19) என்று, திருவிருந்து என்ற  செயலால்

அவருடைய இரத்தம் நமக்காக சிந்தப்பட்டதை நாம் நினைவுகூரும்படி

சொன்னார்!

இன்று கர்த்தர் உனக்கு எதை ஞாபகப்படுத்த விரும்புகிறார்? அவர் உனக்கு கொடுத்த ஆசிர்வாதங்களை மறந்து போனாயோ? அவற்றை ஒவ்வொன்றாய் எண்ணிப்பார்! அவருடைய அன்பு, கிருபை, பாதுகாப்பு, அரவணைப்பு, வழிநடத்துதல் அனைத்தும் நினைவுக்கு வரும்!

 

எண்ணிப்பார்! எண்ணிப்பார்! மறந்து போகாதே!

 

 உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர் 6 இதழ் 378 – எண்ணாகமம் என்கிற நீரோடை!

எண்:1:1,2 “இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டம் வருஷம், இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச் சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணி தொகையேற்றுங்கள்.”

 

நாம் வேதத்தில் நான்காவது புத்தகமான எண்ணாகமம் என்ற புத்தகத்தை படிக்க இன்று ஆரம்பிக்கிறோம். அடுத்த ஒருசில வாரங்கள் நாம் இந்த   எண்ணாகமத்தைப் படிக்கப் போகிறோம்.

இந்த புத்தகம் முழுவதும், கார்த்தருடைய கோபத்துக்கு ஆளாகி, பாலைவனத்தில் நாற்பது வருடங்கள் அலைந்து திரிந்த இஸ்ரவேலரின்,  பெயர்களும், பெயர் வரிசைகளும், தொகைகளும், விதிமுறைகளும், தான் இடம் பெற்றிருக்கின்றன என்பது இதை வாசித்த நமக்கு தெரியும். சாதாரணமாக லேவியராகமம், எண்ணாகமம் புத்தகங்களை நாம் வாசிப்பதை தவிர்த்துவிடுவோம் அல்லவா?

இதை ராஜாவின் மலர்களுக்காக படிக்க ஆரம்பித்தபோது, இந்த ஜனங்களின் பாலைவன அனுபவத்திலிருந்து என்னுடைய ஆத்தும வளர்ச்சிக்கு நான் எதை கண்டடைவேன் ஆண்டவரே என்று பயந்தேன்.

ஆனால் நான் ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த புத்தகம் எனக்கு பாலைவனத்தில் ஓர் நீரோடையாய் கிடைத்தது.

இதில் இடம்பெற்றிருக்கிற சில அருமையான் சம்பவங்கள், கதைகள் நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றன! சில தேவனுடைய பிள்ளைகள் செய்த தவறுகள், நாம் இன்று அப்படிப்பட்ட தவறுகளை செய்யாமல் தடுத்து, நம்மை சீரான வழியில் நடத்துகின்றன! பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த ஜீவியம், முறுமுறுப்பு என்ற பெருந்தவறு, பாலைவன வாழ்க்கையினால் ஏற்ப்படும் மன சோர்புகள் போன்ற பல அருமையான பாடங்கள் நமக்காக காத்திருக்கின்றன!

பாலைவனத்தின் நீரோடையான இந்த எண்ணாகமத்தை நாம் இன்று வாசித்த எண்ணாகமம்: 1: 1,2 வசனங்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.

கர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் மக்களின் தொகையை பேர்பேராக எண்ணச் சொல்லுகிறார். கர்த்தர் இப்படி இஸ்ரவேல் மக்களின் தொகையை எண்ணச் சொன்னது, முதல் தடவையோ அல்லது கடைசி தடவையோ அல்ல! அவர்களை வம்சம் வம்சமாக, குடும்பம் குடும்பமாக, தலை தலையாக எண்ணும்படி கட்டளையிட்டார்.

வனாந்தரத்தில் கால்நடையாக நடந்த மக்களை சீராக வழிநடத்த இந்த குடிமதிப்பு உதவியிருக்கும் என்பது வேதகம வல்லுநர்களின் கணிப்பு.

இதில் ஒரு காரியம் என் உள்ளத்தை கவர்ந்தது! கர்த்தர் மோசேயை நோக்கி, சுமாராக எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று கணக்கு பார் என்று சொல்லியிருந்தால், சுமாராக 2 இலட்சம் பேர் அல்லது சுமாராக எண்பதாயிரம் பேர் இருப்பார்கள் என்று மோசேயும் தோராயமாக சொல்லியிருப்பான். ஆனால் கர்த்தர் கேட்டதோ தோராயமாக அல்ல, அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணி தொகையேற்றுங்கள்.” என்றார்.

உதாரணமாக, யூதா கோத்திரத்தாரின் எண்ணிக்கை, இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானுறு பேர் என்று (எண்:2:9 ) வாசிக்கிறோம்.

சகல தலைகளையும் பேர்பேராக எண்ணும்படி கட்டளையிட்ட தேவனுக்கு, ஒவ்வொரு தனி மனிதனும் முக்கியம். ஒரு சபையில் எத்தனை பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்ற எண்ணிக்கை அவருக்கு தேவையில்லை! ஒரு கன்வென்ஷன் கூட்டத்தில் எத்தனை பேர் கை தூக்கினார்கள் என்ற எண்ணிக்கை அவருக்கு முக்கியமில்லை! நானும் நீயும் அவருக்கு முக்கியம்!

ஏதோ ஒரு திருச்சபையில், ஒரு மூலையில் ஒதுங்கியிருந்து விட்டு செல்கிறாயா? ஒரு கூட்டத்தின் மறைவில் நீ யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? கர்த்தர் உன் தலையை எண்ணியிருக்கிறார்! நீ தேவனுடைய பார்வையில் விசேஷமானவன்!

உன் தலையை மட்டுமல்ல “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால் பயப்படாதிருங்கள்: அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (மத்தேயு:10:30 என்று நம் கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்.

இயேசு கிறிஸ்து உன்னை நேசிப்பதால் நீ அவருக்கு விசேஷமானவன்! யாரோ ஒரு பரிசுத்தவான் எழுதியதைப் போல ”இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாரும் வாழாதது போல அவர் உன்னையே காண்கிறார்! உன்னையே நேசிக்கிறார்!”

நீ அவரை நேசிக்கிறாயா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

 

 

 

மலர் 6 இதழ் 377 தவறான தீர்மானத்தின் விளைவு?


லேவி: 24: 10 -12 ”அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரிக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன், இஸ்ரவேல் புத்திரரோடேக்கூட புறப்பட்டு வந்திருந்தான். இவனும், இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டை பண்ணினார்கள்.

அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.

கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.

இந்தக் கதையின் மூலம் நாம் வாழ்க்கையில் எடுக்கும் தீர்மானங்கள் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன என்று பார்த்தோம். இந்தக் கதையில் வருபவர்கள் எடுத்த தீர்மானங்கள், மற்றும் அந்த தீர்மானங்களால் ஏற்பட்ட நன்மை தீமைகள் இவற்றை இந்த கதையின் மூலம் கண்டோம்.

நாம் இந்தக் கதையில் வந்த பெண் செலோமித் எடுத்த தீர்மானம் சரியா தவறா என்று பார்த்தோம்!  சில நேரங்களில் நாம் தவறாக எடுக்கும் தீர்மானங்கள் நம்மை மட்டும் அல்ல, நீரில் வரும் தொற்று நோய் போல , அது நம்மோடு இருப்பவர்களையும் பாதித்து விடுகிறது. இஸ்ரவேல் குமாரத்தியான  செலோமித் ஒரு எகிப்தியனை மணந்ததால் செய்த தவறு அவள் குமாரனையும்  பாதித்தது என்று படித்தோம்.

அது மட்டுமல்ல, அவளுடைய மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து, தூஷிக்க எடுத்த தீர்மானம் சரியா? தவறா என்று பார்த்தோம்! பாளயத்தில் வாழ்ந்த இந்த இளைஞன் நிச்சயமாகத் தேவனாகிய கர்த்தரின் மகிமையைப் பற்றி அறிந்திருப்பான். ஆனாலும் அவனுடைய வார்த்தையால் அவரை தூஷிக்க, அவருடைய நாமத்தை முள்ளால் குத்தி கிழிக்கத் துணிந்து தீர்மானம் எடுக்கிறான்.

நேற்று நாம், இந்த சம்பவத்தில் இஸ்ரவேல் மக்கள் எடுத்த தீர்மானம் சரியா? தவறா? என்று தியானித்தோம்! இஸ்ரவேல் மக்களும் மோசேயும் தேவனுடைய வாக்குக்காக காத்திருந்தனர். நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும், வேதம் நம்மை வழிநடத்த முடியும். கப்பலில் பொருத்தப்பட்டுள்ள திசை காட்டியைப் போல நம்மை சரியான வழியில் நடத்தும்.

கடைசியாக, தவறான தீர்மானங்கள் எடுப்பதால் வரும் விளைவுகளைப் பற்றி சிந்திக்கலாம்!

கர்த்தர் மோசேயுடன் பேசி, செலோமித்தின் குமாரனை பாளயத்திலிருந்து வெளியெ கொண்டு வந்து கல்லெறிந்து கொல்லும்படியாகக் கட்டளையிட்டார். ஏனெனில் அசுத்தமான யாவும் பாளயத்துக்கு புறம்பாக தள்ளப்பட்டது. ஆதாம், ஏவாள் பாவம் செய்தபோது அவர்கள் ஏதேன் தோட்டத்துக்குப் புறம்பாகத் தள்ளப்பட்டனர் அல்லவா? விசுவாசிகளகிய நாமும் தவறுகள் செய்யும்போது, தேவனுடைய பிரசன்னத்துக்கு புறம்பாகத் தள்ளப்படுகிறோம்!

கர்த்தருடைய பரிசுத்த நாமத்தின் மேல் பயம் உள்ளவன், மரியாதை உள்ளவன், எவனும் கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கமாட்டான்.

இன்று நாம் தேவனுடைய நாமத்தை தூஷிப்பதில்லையா?

பொய்யாணையிடுதல் தேவனுடைய நாமத்தை பரிசுத்தக்குலைச்சலாக்குகிறது (லேவி:19:12)

திருடுதல் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குதல், ( நீதி:30:9)

என்று வேதம் சொல்லுகிறது!

இன்று கர்த்தர் தேவதூஷணம் கூறுகிற ஒவ்வொருவரையும் கல்லெறி்ந்து கொலை செய்யும்படி கட்டளையிட்டால் நம்மில் எத்தனைபேர் வீழ்ந்துபோவோம்?

அதுமட்டுமல்ல, மத்தேயு: 30:31 கூறுகிறது, ”ஆதலால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்,; எந்த பாவமும், எந்த தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்: ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.” என்று.

இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது அவரை மறுதலித்தவர்கள், சிலுவையில் அறைந்தவர்கள் கூட மன்னிக்கப்படலாம், ஆனால் இன்று பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கொடுக்கும் சாட்சியை மறுதலிப்பவனுக்கு மன்னிப்பே கிடையாது என்பதே இதன் அர்த்தம்.

இன்று ஒருவேளை அவர் நம்மை கல்லெறிந்து கொல்லாமல் இருக்கலாம்! ஆனால் நியாயத்தீர்ப்பின் நாள் விரைந்து வருகிறது! அன்று

”தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பதிலளிப்பார்.”  (ரோமர்:2:6)

நீ ஆயத்தமா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர் 6 இதழ் 376 தரிசித்து நடவாமல் விசுவாசித்து நட!


லேவி: 24: 11 -12 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.

கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.

 

நாம் செலோமித் என்ற பெண் தவறான தீர்மானம் எடுத்து ஒரு எகிப்தியனை மணந்தாள் என்று பார்த்தோம். நாம் எடுக்கும் தவறான தீர்மானங்கள் நம்முடைய வாழ்வை சீரழிக்கும் என்று அறிந்தோம்.

நேற்று நாம் அவள் குமாரன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்ததைப் பார்த்தோம்.. இவனும் இஸ்ரவேலன் ஒருவனும் பாளயத்தில் சண்டை போட ஆரம்பித்தார்கள். அவன் மேல் இருந்த கோபத்தை காண்பிக்க, செலோமித்தின் குமாரன் வார்த்தைகளை தவறாக உபயோகிக்கத் தீர்மானித்து தேவனை நிந்தித்தான்.

இன்று இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நிந்தித்தவனைத் தண்டியாமல் ஏன் அவனைக் காவல் படுத்த தீர்மானம் எடுத்தார்கள்? என்று பார்க்கலாம்.

தேவனை நிந்தித்தவன் ஒரு கலப்புத் திருமணத்தின் மூலம் பிறந்தவன் என்று பார்த்தோம். அவன் தாய் ஒரு இஸ்ரவேல் கோத்திரத்தாள், தகப்பன் ஒரு எகிப்தியன். மோசேயின் காலத்திலேயே விசுவாசிகளும், அவிசுவாசிகளும் செய்த கலப்புத் திருமணத்தினால் பிரச்சனைகள் எழுந்திருக்கின்றன போலும்!

ஒரு இஸ்ரவேலன் தேவ தூஷணம் செய்திருப்பானால், மோசேக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று தெரிந்திருக்கும், இவனோ பாதி யூதனும், பாதி எகிப்தியனுமாயிருந்தான். மோசே அவனைக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டு, தேவனுடைய சித்தத்தை அறியக் காத்திருந்தான் என்று பார்க்கிறோம். இது மோசே எடுத்த ஒரு ஞானமுள்ள தீர்மானம்!

மோசே தன்னைத் தாழ்மைப்படுத்தி, தான் முற்றும் அறிந்தவன் அல்ல, தேவனுடைய வார்த்தையின்படி நடப்பவன் என்று இஸ்ரவேல் மக்களுக்கு இதன் மூலம் அறிவித்தான்.

தேவனாகிய கர்த்தர் தம்முடைய வேதத்தின் மூலம் நமக்கு கட்டளைகளையும், நாம் நடக்க வேண்டிய விதி முறைகளையும், வாக்குத்தத்தங்களையும் கொடுத்தது மட்டுமல்லாமல், மோசே போன்ற தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையை நமக்கு மாதிரியாகவும் கொடுத்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும், வேதம் நம்மை வழிநடத்த முடியும். கப்பலில் பொருத்தப்பட்டுள்ள திசை காட்டியைப் போல நம்மை சரியான வழியில் நடத்தும்.

வாழ்வில் முக்கியமான தீர்மானம் எடுக்கும் கட்டத்தில் எப்படித் தீர்மானம் எடுப்பது என்று குழம்பிப் போயிருக்கிறாயா? கர்த்தருக்கு காத்திரு! அவருடைய வார்த்தையின் மூலமாய் உன்னை வழிநடத்துவார்.

தேவனுடைய சித்தத்தை அறிய காத்திருந்த மோசேயும் இஸ்ரவேல் மக்களும் சரியான தீர்மானத்தை எடுத்தனர்.

11 கொரி: 5:6 ”நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்” . தேவனுடைய வார்த்தைகளை விசுவாசி! அது உன்னை வழிநடத்தும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர் 6 இதழ் 375 முள்ளைப் போன்ற வார்த்தைகள்!


லேவி: 24: 11 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான்.
நேற்று நாம் செலோமித் என்ற பெண் தவறான தீர்மானம் எடுத்து ஒரு எகிப்தியனை மணந்தாள் என்று பார்த்தோம். நாம் எடுக்கும் தவறான தீர்மானங்கள் நம்முடைய வாழ்வை சீரழிக்கும் என்று அறிந்தோம்.

இன்று நாம் அவள் குமாரன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்ததைப் பற்றி பார்க்கலாம். இவனும் இஸ்ரவேலன் ஒருவனும் பாளயத்தில் சண்டை போட ஆரம்பித்தார்கள். அவன் மேல் இருந்த கோபத்தை காண்பிக்க, செலோமித்தின் குமாரன் தேவனை நிந்தித்தான்.

எபிரேய மொழியில், இந்த இடத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள தூஷித்தான் என்ற வார்த்தைக்கு அர்த்தம், ’குத்தி ஓட்டை போடுவது’ அல்லது முள்ளால் குத்தி கிழிப்பது, என்பது. செலோமித்தின் மகனின் செயல் எனக்கு பலூன் ஊதுவதை ஞாபகப்படுத்துகிறது. பலூனை ஊதி , நுனியில் நூலை வைத்து கட்டி விடுவோம் அல்லவா? அப்படி நன்கு ஊதிய பலூனை ஒரு ஊசியை எடுத்து குத்தினால் என்ன ஆகும்? அது வெடித்து ரப்பர் துண்டுகள் காற்றில் பறக்கும்!

இதையே தான் செலோமித்தின் மகன் தேவனுடைய நாமத்துக்கு செய்தான். 400 வருடங்களாக பார்வோன் தேவனுடைய நாமத்தை தூஷித்து வந்தான் கர்த்தருடைய ஜனங்கள் அவனுக்கு அடிமையாயிருந்ததால் அவன் ஆபிரகாமின் தேவனை அவமதித்து வந்தான். ஆனால் செங்கடல் இரண்டாய் பிளந்து, இஸ்ரவேல் மக்கள் வெட்டாந்தரையில் நடந்து போனபோது, பார்வோனின் சேனையை அலைகள் மூடிப்போட்டபோது, பார்வோனுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் மகிமை புரிந்தது.

கர்த்தர் தம்முடைய மகிமையை பார்வோனுக்கு மட்டுமல்ல, இஸ்ரவேல் மக்களுக்கும் வெளிப்படுத்தினார். சீனாய் மலையடியில் அவர்கள் நின்றபோது அவருடைய மகிமையைக் கண்டு பயந்தார்கள்.

பாளயத்தில் வாழ்ந்த இந்த இளைஞன் நிச்சயமாகத் தேவனாகிய கர்த்தரின் மகிமையைப் பற்றி அறிந்திருப்பான். ஆனாலும் அவனுடைய வார்த்தையால் அவரை தூஷிக்க, அவருடைய நாமத்தை முள்ளால் குத்தி கிழிக்கத் துணிந்து தீர்மானம் எடுக்கிறான்.

என்னைப் பொறுத்தவரை குத்தின ஊசியின் வலி சிறிது நேரத்தில் மறைந்துவிடும் ஆனால் குத்தின வார்த்தையின் வலி நெஞ்ஞைவிட்டு நீங்காது!

ஆதலால், யாத்தி: 20: 7 ல் கர்த்தர், “ உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக, கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்” என்றார்.

நம்முடைய நாவால் தேவனாகிய கர்த்தரின் நாமம் மகிமைப்படுகிறதா/ அல்லது தூஷிக்கப்படுகிறதா? சிந்தியுங்கள்!

சங்கீதம்:34:13 ”உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கி காத்துக்கொள்”

 

நம்முடைய வார்த்தைகளை தீர்மானிக்கும் உரிமை நமக்கு உண்டு! அவற்றை மிகவும் ஜாக்கிரதையாக நாம் கையாட வேண்டும். ஏனெனில் அவை முட்டையை போல ஒருதடவை உடைந்தால், மறுபடியும் ஒன்று சேர்க்கவே முடியாது.

 

ஆண்டவரே என்னை கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் காத்துக் கொள்ளும் ( யாக்:1:19) என்பதே இயேசு கிறிஸ்துவின் சீஷனான யாக்கோபின் ஜெபத்தைப் போல நம் ஜெபமாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர் 6 இதழ் 374 நீரில் வரும் தொற்று நோய் போன்ற தீர்மானம்!


லேவி: 24: 10 -12 ”அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரிக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன், இஸ்ரவேல் புத்திரரோடேக்கூட புறப்பட்டு வந்திருந்தான். இவனும், இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டை பண்ணினார்கள்.

அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.

கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.

நாம் நேற்று இந்த கதையை வாசித்தோம்! இந்தக் கதையின் மூலம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் தீர்மானங்களைப் பற்றி நாம் படிக்கப்போவதாக நான் கூறினேன்.

இன்று இந்தக் கதையில் வரும் தாய் எடுத்த தீர்மான சரியா தவறா என்று படிக்கலாம். இஸ்ரவேல் குமாரத்தியாகிய அவள் ஒரு எகிப்தியனை மணந்தது

சரியா? தவறா?

லேவியராகமத்தில் புதைந்து கிடக்கிறது இந்த பெண் செலோமித்தின் கதை! அவளுடைய பெயர் வேதாகமத்தில் இடம் பெற்றிருப்பதே ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்! வேதத்தில் பெண்களின் பெயர் அதிகமாக இல்லை. அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி என்றும் எழுதப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான தகவல், ஏனெனில், பெண்கள் திருமணத்துக்குப் பின்னால் இன்னாருடைய மனைவி என்று கூறப்படுவார்களே தவிர இன்னாருடைய குமாரத்தி என்று இல்லை!

இந்தக் கதையில் இன்னும் என்ன அவளைப் பற்றி வாசிக்கிறோம்? அவளுக்கும், எகிப்தியன் ஒருவனுக்கும் பிறந்த ஒரு குமாரன் இருந்தான்! இந்த பிள்ளை எப்படி பிறந்திருக்கக்கூடும்?

ஒருவேளை இந்த எகிப்தியன் அவளை பலவந்தமாய் கர்ப்பமாக்கியிருக்கலாம், அல்லது அவள் அடிமையாய் வேலை செய்த இடத்தில் இந்த எகிப்தியன் மேல் அவள் காதல் கொண்டு அவனுடைய இச்சைக்கிணங்கி குழந்தை பெற்றிருக்கலாம்!

அல்லது 400 வருடங்கள் அடிமைத்தனத்தில் வாழ்ந்ததால் தேவனுடைய வழியை விட்டு விலகி இந்த குடும்பம் தன் மகளை ஒரு எகிப்தியனுக்கு மணமுடித்துக் கொடுத்திருக்கலாம்! அவள் இன்னாருடைய குமாரத்தி என்று வேதம் சொல்லுவதால், அவளுடைய திருமணம் எகிப்தியரால் அங்கீகரிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து புறப்பட்டபோது, இவள் கணவன் எகிப்தில் தங்கி விட்டு, செலோமித்தையும் அவள் குமாரனையும், தன் தகப்பன் குடும்பத்தோடு அங்கிருந்து புறப்பட அனுமதித்திருக்கலாம்!

இது எப்படி நடந்ததோ தெரியவில்லை! ஒன்று மாத்திரம் தெரிகிற்து! இந்தப் பெண் தன்னுடைய வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தில் ஒரு அந்நியனோடு, இஸ்ரவேலின் நம்பிக்கைக்கும், விசுவாசத்துக்கும் நேர்மாறான ஒருவனோடு தன்னை இணைத்துக் கொண்டாள்!  ஒருவேளை ஒரு எகிப்தியனை மணந்தால், அவள் குழந்தை அந்த தேசத்தில் தன்னைப்போல அடிமையாக வாழ வேண்டியதிருக்காது என்ற சின்ன ஆசை கூட இருந்திருக்கலாம்! அல்லது ஒரு சின்ன சுதந்திரம், சிறு சந்தோஷம், அடிமைத்தன வேதனையிலிருந்து ஒரு சிறு விடுதலையை இந்த ஈடுபாடு அவளுக்கு கொடுத்திருக்கலாம்! அப்பொழுது அவளுக்கு இஸ்ரவேலின் தேவனகிய கர்த்தர் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!

என் அன்பு கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்களும், நானும் எத்தனைமுறை செலோமித்தைப் போல நடந்து கொள்கிறோம்? ஒரு சிறு ஆசையை, சிற்றின்பத்தை, திருப்தியை நம் மனமும் சரீரமும் நாடித் தேடும்போது, சாத்தான் அழகையும், பணத்தையும், புன்னகையையும் அள்ளி அள்ளி வீசும் வாலிபர்களை நம் முன் அனுப்புகிறான். நாம் அடித்தது யோகம் என்று ஏறிய வாழ்க்கைக் கப்பல், டைடானிக் என்று அறியுமுன்னதாகவே அது பனிப்பாறையில் மோதி நொறுங்கிப்போகிறது.

வாழ்க்கையில் எடுக்கும் தவறான தீர்மானங்களால் தான், நம் மத்தியில் அநேக செலோமித்துகள் தனியாக பிள்ளைகளை வளர்க்கும் நிலையில் உள்ளனர்.

நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் சுதந்திரம் நமக்கு நிச்சயமாக உண்டு! ஆனால் சில நேரங்களில் நாம் தவறாக எடுக்கும் தீர்மானங்கள் நம்மை மட்டும் அல்ல, நீரில் வரும் தொற்று நோய் போல , அது நம்மோடு இருப்பவர்களையும் பாதித்து விடுகிறது. செலோமித் செய்த தவறு அவள் குமாரனை எவ்வாறு பாதித்தது என்று திங்கள் அன்று பார்ப்போம்!

உபாகமம்: 30:19 “ நான் ஜீவனையும், மரணத்தையும், ஆசிர்வாதத்தையும், சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்: ஆகையால்  நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு நீ ஜீவனை தெரிந்துகொண்டு..”

 

கர்த்தராகிய ஆண்டவர் நம் முன்னால் ஜீவனையும், மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைப்பது மட்டுமல்ல, அதை தீர்மானிக்கும் சுதந்திரத்தையும், பொறுப்பையும் நமக்கே கொடுக்கிறார். நம் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பாளியாகிறோம்.

உன் வாழ்வை சீரழித்த தீர்மானத்தை நீ சற்று திரும்பிப்பார்! அது முன்குறிக்கப்பட்ட தீர்மானம் அல்ல, உன்னால் தெரிந்துக்கொள்ளப் பட்ட தீர்மானம்தான் என்பது உனக்கு தெரியும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர் 6 இதழ் 373 தீர்மானங்கள் சரியா தவறா?


லேவி: 24: 10 -12 ”அக்காலத்திலே இஸவேல் ஜாதியான ஸ்திரிக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன், இஸ்ரவேல் புத்திரரோடேக்கூட புறப்பட்டு வந்திருந்தான். இவனும், இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டை பண்ணினார்கள்.

அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.

கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.

சில வாரங்கள் நாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படித்தோம். அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள நாம் வாசிக்கவே விரும்பாத லேவியராகம புத்தகம் உதவியது அல்லவா! தேவனாகிய கர்த்தர், அநேக தலைமுறைகள் அடிமைகளாக வாழ்ந்து தரமில்லாதிருந்த இஸ்ரவேல் மக்களை சீர்ப்படுத்த, தம்முடைய பிள்ளைகளாக மாற்ற இந்த விதிமுறைகளைக் கொடுத்தார் என்று பார்த்தோம். அதுமட்டுமல்ல இந்த புத்தகம் தேவனுடைய தெய்வீகத்தன்மைகளை நமக்கு காட்டிற்று. அவருடைய முகத்தை அதிகதிகமாக நோக்கும் போது, அவருடைய சாயலை நாமும் அடைவோம்!

அவருடைய சாயலை நாம் அடைய வேண்டும், அவரைப் போல பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்ற ஆவல் நமக்கு ஒவ்வொரு நாளும் தேவை. அப்படியில்லாவிட்டால் நாமும்  லேவியராகமம் 24 ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு வித்தியாசமான குடும்பத்தின் கதையைப் போல தவறான முடிவை எடுத்து விடுவோம்.

இந்தக் கதையின் மூலம் நாம் வாழ்க்கையில் எடுக்கும் தீர்மானங்கள் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன என்று பார்க்கப்போகிறோம். உன்னுடைய பாவ மூட்டையை இறக்கிவிட்டு  பரலோகத்துக்கு போவாயா? அல்லது பாவ மூட்டையை சுமந்துகொண்டு நரகத்துக்கு போவாயா என்ற ஜாண் பனியனின் வார்த்தைக்கேற்ப, நம்முடைய தீர்மானங்கள் நம்முடைய வாழ்வின் முடிவை தீர்மானிக்கின்றன.

நம் தீர்மானங்கள் நம்முடைய வாழ்க்கைத் தரத்துக்கேற்றவாறு மாறுகின்றன. நாம் தவறான தீர்மானங்களையே பலமுறை எடுப்போமானால் நம்முடைய இருதயம் அதற்கேற்றவாறு கடினமடைந்துவிடும் என்பது நாம் அறிந்த உண்மையே.

இன்று வாசித்த வேதபகுதியின் மூலம், இந்தக் கதையில் வருபவர்கள் எடுத்த தீர்மானங்கள், மற்றும் அந்த தீர்மானங்களால் ஏற்பட்ட நன்மை தீமைகள் இவற்றை இந்த கதையின் மூலம் காணப்போகிறோம்.

ஒவ்வொரு நாளும் நன்மை தீமைக்கான தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டியதுள்ளது. சோதனைகளில் வீழ்ந்துவிடாமல் நம்மை பரிசுத்தமாய் காத்துக்கொள்ள சரியான தீர்மானங்கள் எடுக்க வேண்டும். ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய பரிசுத்த தேவனின் கட்டளைகளை மதிக்காமல் தவறான தீர்மானம் எடுத்த இந்தக் குடும்பத்தின் கதை நமக்கொரு பாடமாக அமைகிறது.

நாளை நாம் இந்தக் கதையில் வரும் தாய் எடுத்த தீர்மான சரியா தவறா என்று பார்ப்போம்! இஸ்ரவேல் குமாரத்தியாகிய அவள் ஒரு எகிப்தியனை மணந்தது சரியா? தவறா?

திங்கள் அன்று நாம், அவளுடைய மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து, தூஷிக்க எடுத்த தீர்மானம் சரியா? தவறா?

செவ்வாய்க் கிழமை நாம், இந்த சம்பவத்தில் இஸ்ரவேல் மக்கள் எடுத்த தீர்மானம் சரியா? தவறா? என்று தியானிப்போம்.

கடைசியாக, தவறான தீர்மானங்கள் எடுப்பதால் வரும் விளைவுகளைப் பற்றி சிந்திக்கலாம். தொடர்ந்து வாசிக்கத் தவறாதீர்கள்!

 

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த எந்த தீர்மானம் உங்கள் வாழ்க்கையை அதிகமாக பாதித்திருக்கிறது? என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com