Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!

 

யாத்தி: 2: 3 அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக் கூடாமல், ஒரு நாணற்ப்பெட்டியை எடுத்து, அதற்கு பிசினும், கீலும் பூசி , அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்.

மோசே அழிவிலிருந்து மீட்கப்பட்ட இந்த கதையை மறுபடியும் வாசிக்கும்போது, கண்ணில் பட்ட இன்னுமொரு அருமையான காரியம், யோகெபெத்தின் கைவிரல்களின் சிருஷ்டிப்பு திறமை!

யொகேபேத் தன்னுடைய பத்து விரல்களால் திறமையாக, அங்கே நைல் நதியண்டை கிடைக்கிற சாதாரண நாணல் என்னும் புல்லைக் கொண்டு, ஒரு பேழையை செய்தாள். அதில் தன் செல்ல மகனுக்கு மூச்சு விட காற்றும் வேண்டும், அதே சமயத்தில் அதற்குள் நீர் புகுந்துவிடக் கூடாது என்பதற்காக பக்குவமாக அதின் அடிப்புறம் பிசினும், கீலும் பூசினாள்!

எத்தனை திறமையாக இந்தப் பெண் இதை படைத்திருக்க வேண்டும்! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல அவள் விரல்கள் அந்த நாணலை எடுத்து.. பதப்படுத்தி….வளைத்து….நெளித்து…..பின்னி… இணைத்து….. எத்தனை வேலைகள் செய்தன!  இதை அவள் சரிவர செய்யாமலிருந்திருந்தால் அவள் குழந்தை மூச்சு திணறி இறந்திருப்பான் அல்லது நீரில் மூழ்கியிருப்பான். தன்னுடைய குழந்தையை காப்பாற்ற அவளுடைய திறமையை வெளிப்படுத்துகிறாள் யோகெபெத்

செய்யும் வேலையை சிறப்பாய் திறமையாய் செய்யும் தன்மையை தேவன் நம் ஒவ்வொருவருக்கும் அருளியிருக்கிறார். நம்மில் எத்தனை பேர் நம்முடைய விரல்களின் படைப்புத் திறமையினால் நம் குடும்பத்தை காப்பாற்றுகிறோம்? கையினால் பூக்கள் கட்டுவதில் இருந்து, கம்ப்யூட்டரில் டைப் அடிப்பது வரை எத்தனை விதமான வேலைகளை பெண்கள் செய்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்!

யோகெபெத் நாணல் புல்லை வைத்து பெட்டியை சிருஷ்டித்து தன் குழந்தையை காப்பாற்றிய கதை நம் ஒவ்வொருவருக்குள்ளும் சிருஷ்டி கர்த்தர் கொடுத்திருக்கும் திறமையை காண்பிக்கிறது.  நம்முடைய தேவனாகிய கர்த்தர், வானத்தையும் பூமியையும் உருவாக்கினவர். வானத்தை சிங்காசனமாகவும், பூமியை பாதபடியாகவும் கொண்ட தேவன் அவருடைய கரத்தின் சிருஷ்டியாகிய நமக்குள்ளும் சிருஷ்டிப்பு என்கிற திறமையை கொடுத்திருக்கிறார்!

சங்கீ: 8: 3,4 உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சந்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதர்க்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதர்க்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்

இருளை நட்சந்திரங்களைக் கொண்டு அழகு படுத்துகிற தேவன், நம் வாழ்வை இருள் சூழும் போது, நமக்குள்ளே அவர் கொடுத்திருக்கிற படைப்பின் திறமையின் மூலம் நம்மை ஆபத்திலிருந்து காத்துக் கொள்ள வகை செய்கிறார்.

வானத்தில் நட்சத்திரங்களை திறமையாய் தொங்க வைக்கிற தேவன், தன்னுடைய குழந்தையை காப்பாற்ற அலைமோதின ஒரு தாய்க்கு நாணல் புல்லைக் கொண்டு ஒரு பெட்டியை, பேழையைப் போல திறமையாய் செய்து, இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்க வந்த குழந்தை மோசேயை காப்பாற்ற உதவி செய்த அதே தேவன், உனக்கும் எனக்கும் தேவையான திறமையை அனுக்கிரகம் செய்வார். அவர் உனக்கு கொடுக்கும் இந்த விசேஷக் கிருபையால் நீ வேலை செய்யும் ஸ்தலத்தில் முன்னேறுவாய்! நீ கையிட்டு செய்யும் வேலையை ஆசீர்வதிப்பார்! நீ எந்த துறையில் வேலை செய்தாலும் சரி, அதை சிறப்பாய், திறமையாய் செய்து முடிக்க கர்த்தர் உதவி செய்வார்!

எத்தனை முறை ஐயோ ஏன் என்னிடத்தில் திறமையே இல்லை! என் வேலையில் திறமை காட்டினால் தான் எனக்கு ப்ரமோஷன் கிடைக்கும் நான் என்ன செய்வேன் என்றெல்லாம் கலங்குகிறீர்கள்? யோகேபெத்தின் கதை வாழ்க்கையில் சோர்ந்து போயிருக்கும் உங்களை உற்சாகப்படுத்தட்டும்! நமக்கு வற்றாத ஜீவ ஊற்றாய் உதவி செய்யும் நம் சிருஷ்டி கர்த்தர் நம்மோடிருக்கும்போது நாம் எதையும் கண்டு அஞ்ச வேண்டாம்! அவர் நம் வாழ்வில் சூழும் பிரச்சனைகளை திறமையாய் எதிர்கொள்ள உதவி செய்வார்!

தேவன் தாமே தம் வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

 

Leave a comment