Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 347 ஒரு தாயின் கனவு!

எண்ணா: 26: 59 அம்ராமுடைய மனைவிக்கு யொகெபெத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும், அவன் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்

யோகெபெத்தைப் பற்றி நாம் படித்து வருகிறோம்! அவள் ஆரோன்,மிரியாம், மோசே இவர்களைப் பெற்றத் தாய்!

யோகெபெத் வாழ்ந்த சமயம் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர். அவர்கள் மேல் கடினமான சுமை சுமத்தப்பட்டது. அப்படிப்பட்ட இருண்ட சமயத்தில் வாழ்ந்த இந்த இளம் தாய் தன் பிள்ளைகளுக்கு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தேவனாகிய கர்த்தரின் வழிகளை  போதித்தாள். அவர்களை  வளர்க்கும்போதே தேவனாகிய கர்த்தரின் வல்லமையைப் பற்றியும், அவர் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்க வல்லவர் என்றும் போதித்தாள்.

மோசே குழந்தையாய் இருந்தபோது அவனைத் திறமையாய் காப்பாற்றி அவனுக்கு ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் தேவனைப் பற்றி சொல்லிக்கொடுத்து, பார்வோனின் அரண்மனையின் எல்லா செல்வ சிறப்புகளிலும், எல்லா கலைகளிலும் வல்லவனாய் அவன் வளருவதை தூரத்திலிருந்து பார்த்து, என்றாவது ஒருநாள் தன் மகன் நம் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பான் என்று கனவு கண்டுகொண்டிருந்தாளே, அவள் கனவு நனவாயிற்றா?

மோசே பெரியவனானபோது அவன் தன் சகோதரர் சுமை சுமந்து கஷ்டங்கள் அனுபவிப்பதை பார்த்து, ஒரு எகிப்தியனை வெட்டிப் போட்டு விட்டு, அது பார்வோன் செவிகளுக்கு எட்டியபடியால், எகிப்தை விட்டு ஓடிப் போனான். அவன் மீதியான் தேசத்தில் 40 வருடங்கள் ஆடு மேய்த்து அலைந்து திரிந்த போதும் அவள் மோசே மேல் கொண்ட நம்பிக்கையை இழக்கவில்லை.

ஆம்!  40 வருடங்களுக்கு பின்னர், யோகெபெத் தன் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்திய அதே தேவனானவர், அவளுடைய மூன்று பிள்ளைகளையும், இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் மிகப்பெரிய ஊழியத்துக்கு அழைத்ததைப் பார்க்கிறோம். ஆம்! அவளுடைய மூன்று பிள்ளைகளும் தேவனுடைய பணிவிடைக்காரர் ஆயினர். மோசே அந்த ஊழியத்தின் தலைவனாகவும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசாரியராகவும், மிரியாம் தேவனுடைய முதல் தீர்க்கதரிசியாகவும் ஆயினர்! ஒரு தாயின் கனவு நிறைவேறிற்று!

யோகேபெத்தை எத்தனை அருமையான ஒரு தாயாகப் பார்க்கிறோம். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு சொத்து சுகம் தேடிகொடுத்தால் மட்டும் போதாது, அவர்களை கர்த்தரின் வழிகளில் நடத்த வேண்டும். நாம் தேடி வைக்கிற பணத்தினால் நம் பிள்ளைகள் நம்மை நினைவு கூற மாட்டார்கள். நாம் எவ்வளவு தூரம் அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தோம் என்பதைக்கொண்டு தான் நினைவு கூறுவார்கள். கர்த்தருடைய சமூகத்துக்கு போய் 38 வருடங்கள் கடந்து போனாலும், என்னுடைய அம்மாவைப் பற்றி நினைத்தவுடன் என் கண்கள் கலங்கும். அவர்கள் எனக்கு சொத்து தேடி வைத்துவிட்டு செல்லவில்லை, ஆனால் என் வாழ்க்கையில் அவர்கள் ஆசீர்வாதமாக இருந்ததுதான் நினைவுக்கு வரும்.

பரிசுத்த பவுல் பிரயாணங்கள் செய்து பல நாடுகளில் தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்து, பல சபைகளை நிறுவியவர் என்று நமக்கு நன்கு தெரியும். அவர் ஒவ்வொரு இடத்தை விட்டு சென்ற பின்னரும், அவர்களுக்கு கடிதம் எழுதி அவர்களை கர்த்தருக்குள் உற்சாகப்படுத்துவார். அப்படி எழுதப்பட்டவை தாம் நாம் வேதத்தில் படிக்கிற ரோமர், கலாத்தியர், எபிசேயர், கொரிந்தியர், கொலோசெயர், பிலிப்பியர் என்கிற நிருபங்கள். இதில் சில நிருபங்களை அவர் சிறையிலிருக்கும்போதும் எழுதினார். எபிரேயருக்கு விசேஷமாக ஒரு நிருபத்தை எழுதினார். அதுமட்டுமல்ல தன்னுடைய ஆவிக்குரிய மகன் தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும், பிலேமோனுக்கும்  தனியாக நிருபங்களை எழுதினர்.

பவுல் எழுதிய இந்த நிருபங்கள் இரண்டாயிரம் வருடங்களாக, தலைமுறை தலைமுறையாக கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஆசீர்வாதமாக இருந்து வருகிறது. அவருடைய வாழ்க்கையும், அவருடைய வார்த்தைகளும் நம்மை எவ்வாறு ஒவ்வொருநாளும் கிறிஸ்தவ வாழ்க்கையில் பெலப்படுத்துகிறது என்பதை பவுல் இன்று பரத்திலிருந்து கண்ணோக்குவாரானால் அசந்து விடுவார். பரிசுத்த பவுல் நம் எல்லாருக்கும் விட்டு சென்றது ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கை!

யோகெபெத் தன் பிள்ளைகள் மூவரையும் கர்த்தருக்குள் வழி நடத்தியதால், அவளுடைய மூன்று பிள்ளைகளும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியக்காரராகி, இஸ்ரவேலின் சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்றனர். ஒரு தாயால் இதைவிட பெரிய ஆசீர்வாதத்தை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமா?

நீ  இன்று யாருக்கு ஆசீர்வாதமாக இருக்கிறாய் என்று எண்ணிப்பார்! உன் பிள்ளைகளை கர்த்தருக்குள் வழிநடத்தியிருக்கிறாயா? கர்த்தரின் வார்த்தைகளை போதிக்கிறாயா? நீ கிறிஸ்துவால் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாயானால் நிச்சயமாக நீயும் உன் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாய் இருப்பாய்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

ஜெபக்குறிப்புகள் இருக்குமாயின் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். உங்களோடு சேர்ந்து ஜெபிக்க வாஞ்சையுடன் இருக்கிறேன்!
.

Leave a comment