Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 348 சரியாகப் பேசத் தெரிந்த ஒரு சிறுமி!

சில நாட்கள் நாம்  மோசேயின் தாயாகிய யோகெபெத்தைப் பற்றிப் பார்த்தோம்! இன்று முதல் மோசேயின் தமக்கையாகிய மிரியாமைப் பற்றி ஒரு சில நாட்கள் படிப்போம்.

குழந்தை மோசேயை நாணல் பெட்டியில் வைத்து நைல் நதியோரமாய் நாணல் நிறைந்த கரையில் மிதக்க வைத்து, குழந்தையின் அக்காவாகிய மிரியாமை தூரத்தில் இருந்து காவல் காக்கும்படி செய்தாள் யோகெபெத்.

மிரியாமுக்கு அப்பொழுது பத்திலிருந்து பதின்மூன்று வயதிற்குள் இருக்கும். யார் அந்த நதிக்கரையோரமாக வருவார்களோ? யார் இந்த பெட்டியைப் பார்ப்பார்களோ?  என்று அவள் ஆவலும், பயமும் கலந்து கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோது, அவள் கண்களை நம்பவே முடியவில்லை! பார்வோனின் ராஜகுமாரத்தி தன் தாதியரோடு நீராட அங்கு வருகிறாள்.

இந்த வயதில் நான் எப்படி இருந்தேன் என்று ஒரு நிமிடம் யோசித்து பார்த்தேன்! என்னுடைய நிழலைப் பார்த்து நானே பயந்த வயது அது! யாரையும் பார்த்தால் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட தைரியமாய் பேசாமல் அம்மாவுக்கு பின்னால் ஒளிந்து கொள்வேன்!
ஆனால் இந்த மிரியாம் இவ்வளவு சிறிய வயதில் தைரியமாய், தெளிவாய் பேசும் வரத்தை தேவனிடமிருந்து பெற்றிருந்தாள். பார்வோன் குமாரத்தி நாணல் பெட்டியை திறப்பதையும், குழந்தை மோசே அழுத சத்தத்தையும் கேட்ட மிரியாம், குழந்தையை வளர்க்க உதவி செய்வதாக ராஜகுமாரத்தியிடம் பேசும் எண்ணத்தில் நெருங்குகிறாள்.  எவ்வளவு தைரியமும், தெளிவும் கொண்ட பெண் இவள்! ஒருவேளை தேவனாகிய கர்த்தரை விசுவாசித்த தாய் யோகெபெத் விதைத்த நம்பிக்கையின் விதை இவளுக்குள் கிரியை செய்ததோ? யாருடைய கட்டளையின் கீழ் எபிரேய ஆண் பிள்ளைகள் கொலை செய்யப்பட்டர்களோ, அந்த பார்வோனின் குமாரத்தியையே அணுகி பிள்ளையை வளர்க்க ஏற்பாடு செய்ய தைரியம் எப்படி வந்தது?

சிறு வயதிலேயே அவள் தாயின் பாதத்தில் அமர்ந்து கற்றுக்கொண்ட ஞானம் அவள் மற்றவர்களைத் தெளிவாக புரிந்துகொள்ள உதவியது. ராஜகுமாரத்தி குழந்தையைப் பார்த்தவுடன் மிரியாம் அவளை கூர்ந்து கவனித்தாள். அவள் முகத்தில் தெரிவது என்ன? கனிவா? வெறுப்பா? ராஜகுமாரத்தியின் முகத்தில் கனிவையும், கண்களில் பரிவையும் கண்டவுடன் அவளிடம் விரைகிறாள். குழந்தையை வளர்க்க ஒரு எபிரெயத் தாயை அழைத்து வருவதாக சொல்கிறாள். ராஜகுமாரத்தியின் இருதயத்தை ஊடுருவி, நன்மையா தீமையா என்று பகுத்தறியும் ஞானம் இந்த சிறு பெண்ணுக்கு தேவன் அருளியிருந்தார்.

எல்லா குணங்களைப் பார்க்கிலும் மற்றவர்களைத் தெளிவாக புரிந்து கொண்டு, நன்மைதீமையை பகுத்தறிந்து, ஞானமாய் பேசி, ஞானமாய் நடந்து கொள்ளும் விசேஷமான கிருபைக்காக நாம் ஒவ்வொருவரும் தேவனிடம் ஜெபிக்க வேண்டும்.

I ராஜா: 3: 9, ல் தாவீதிடமிருந்து சிங்காசனத்தைப் பெற்றுக் கொண்ட சாலோமொன் ராஜா, ஆஸ்திகாகவோ, வல்லமைக்காகவோ தேவனிடம் கேட்காமல், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கத் தக்க தெளிவான ஞானமுள்ள இருதயத்தை கேட்பதைப் பார்க்கிறோம்.

நம்முடைய சரீரத்துக்கு கண்கள் போல செயல்பட்டு, நம்முடைய இருதயத்தின் சிந்தனைகளையும், செயல்களையும் ஆராய்ந்து பார்த்து, நாம் ஒரு காரியத்தை செய்வதும், பேசுவதும் சரியா? தவறா? என்று நமக்குள் உணர்த்துவது இந்த ஞானமே. இந்த விசேஷ ஞானமில்லாமல் நாம் எத்தனை தவறுகள் செய்திருக்கிறோம். பேசக்கூடாத இடத்தில் பேசக்கூடாத வார்த்தைகளை பேசி எத்தனை பிரச்சனைகளை சந்தித்தோம்! பின்னர் ‘ஐய்யோ நான் ஞானமில்லாமல் நடந்து கொண்டேனே! இதனால் என் குடும்பம் இரண்டாகிவிட்டதே! என் கணவர் என்னை விட்டு போய்விட்டாரே! என் பிள்ளை என்னோடு பேசாமல் இருக்கிறானே!’ என்றெல்லாம் கதறி அழுதால் என்ன பிரயோஜனம்?

தேவன் நமக்கு மிரியாமைப் போல இதைப் பேசலாமா? வேண்டாமா? என்று பகுத்தறியும் ஞானத்தை, மற்றவர்களைத் தெளிவாக புரிந்து கொள்ளும் ஞானத்தை அருளுமாறு ஜெபிப்போம்.

சங்கீ: 25: 4, 5 கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும்.

உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி என்னைப் போதித்தருளும். நீரே என் இரட்சிப்பின் தேவன்; உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

 
கர்த்தர் தாமே அவருடைய வார்த்தையின் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

ஜெபக்குறிப்புகள் இருந்தால் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்! உங்களோடு இணைந்து ஜெபிக்கிறேன்!

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

Leave a comment