Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 353 கனவுகள் நொறுங்கிப் போன குடும்ப வாழ்க்கையா?

யாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு  கொடுத்தான்;

அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான்.

மோசே! 40 வருடங்கள் பார்வோனின் அரண்மனையில் வாழ்ந்தான்! பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய ராஜகுமாரன், எபிரேயரைக் கொடுமைப் படுத்திய ஒரு எகிப்தியனை வெட்டிக் கொன்றதால், பார்வோனின் வெறுப்புக்கு ஆளாகி, சிங்காசனத்தை துறந்து மீதியான் நாட்டின் வனாந்தரத்துக்கு ஓடிப்போனான்.

யாத்தி: 2: 15 ல் வேதம் கூறுகிறது, மோசே மீதியான் தேசத்திலே ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். அதே அதிகாரத்தில் நாம், மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள், அவர்கள் மோசே அமர்ந்திருந்த துரவண்டை வந்து தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்கு தண்ணீர் மொண்டு கொடுத்தபோது, அங்கிருந்த மேய்ப்பர்கள் அவர்களை துரத்தினார்கள், அப்பொழுது மோசே அவர்களுக்கு துணைநின்று அவர்கள் மந்தைக்கு தண்ணீர் காட்டினான் என்று வாசிக்கிறோம்.

அவர்கள் வீட்டுக்கு சீக்கிரம் வந்து சேர்ந்த காரணத்தை அவர்கள் தகப்பன் கேட்டபோது எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களை தப்புவித்து எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான் என்றார்கள். மோசே எகிப்தைவிட்டு புறப்பட்டபோது அணிந்தருந்த எகிப்தியரின் ஆடை அவனை எகிப்தியன் என்று அந்தப் பெண்களுக்கு காட்டிற்று.

மீதியான் தேசத்தில் அவன் வாழ்ந்தபோது, அந்த பாலைவன மக்கள் அரேபியரான இஷ்மவேலருடன் தொடர்புள்ளவர்கள் என்று உணர்ந்தான். ஆதி 37 ம் அதிகாரத்தில், இந்த மீதியானியர் யோசேப்பை இஸ்மவேலரிடம் விற்றதை மறந்து விட வேண்டாம். அதுமட்டுமல்ல மீதியானியர் என்பவர்கள், ஆபிரகாம் சாராள் மரித்தபின்னர் தன்னுடைய 100 வயதுக்கு மேல் மணந்த கெத்தூராளின் பிள்ளைகளின் வம்சத்தினர்.

விளக்கமாகக் கூறுகிறேன்!

மோசே ஒரு இஸ்ரவேலன், ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஈசாக்கின் வழியில் வந்தவன்.

இஸ்மவேலர், ஆபிரகாமுக்கும், ஆகாருக்கும் பிறந்த பிள்ளையின் வம்சத்தார்.

மீதியானியர், ஆபிரகாமுக்கும் கெத்தூராளுக்கும் பிறந்த பிள்ளைகளின் வம்சத்தினர்.

இந்த மூன்று வம்சங்களுக்குமே தகப்பன் ஆபிரகாம் தான். இது ஒன்றே அவர்களுக்குள் போட்டியையும் பொறாமையையும் கொண்டு வர போதுமான காரணம் அல்லவா! எங்காவது ஒரு தகப்பனின் மூன்று மனைவிமாருக்கு பிறந்த பிள்ளைகள் ஒற்றுமையாய் இருப்பதை நாம் கண்டிருக்கிறோமா?

இப்பொழுது ஒரு அழகிய ராஜகுமாரன் மீதியான் தேசத்து ஆசாரியனின் வீட்டுக்கு வருகிறான். அவனுடைய ஏழு குமாரத்திகளில் சிப்போராள் ஒருவேளை மூத்தவளாக இருந்திருக்கலாம். ஒரு ஆசாரியனின் மூத்த மகளாகிய அவள் அந்த தேசத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவளாக இருந்திருப்பாள். அவளை அவள் தகப்பன் திருமணத்தில் மோசேக்கு கொடுத்தபோது, அவள் ஒரு விலையேறப்பெற்ற பரிசாகத்தான் இருந்திருப்பாள். மீதியான் பாலைவனத்தில் மோசேக்கு கிடைத்த நீரோடையல்லவா அவள்!

பல கனவுகளோடு தன்னுடைய ராஜ குமாரனுக்காக காத்திருந்த அவளுக்கு என்ன கிடைத்தது தெரியுமா? ஒரு எபிரேய மேய்ப்பன் தான்!  40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான்! பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். சிப்போராளின் கனவு பலிக்கவுமில்லை! அவள் கால்கள் ஓயவும் இல்லை!

சிப்போராள் தன் கணவனோடும், பிள்ளைகளோடும் அமைதியாய் மீதியான் தேசத்தில் வாழ விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண்ணாகத்தான் இருந்திருப்பாள் ஆனால் அவள் ஆசை நிறைவேறவில்லை! அவள் இஸ்ரவேலரை 40 வருடங்கள் வனாந்தரத்தில் வழிநடத்திய மோசேயோடே காடு மேடாக அலையவேண்டியதாயிற்று!

இன்று உன் திருமண வாழ்க்கையில் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்த நீ ஒருவேளை ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று உன் உள்ளத்தில் நீ நினைக்கலாம்! உன் கனவுகள் கண்ணாடித் துண்டுகள் போல நொறுங்கியிருக்கலாம்.

சரியான துணை கிடைக்கவில்லை என்று அழுது புலம்புவதை விட கர்த்தருடைய உதவியோடு சரியான துணையாக நாம் வாழ்வதுதான் முக்கியம்.  சிப்போராளைப் பார்! அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை! ஆனாலும் சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக இருந்தாள்!

 
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்த்த எந்த குணநலனுமே இல்லையெனினும், நம்மை அளவில்லாமல் நேசிக்கிறாரே அந்த நேசத்தைதான் நாம் நம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டும்!

கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்   

Leave a comment