Archive | August 2016

மலர் 7 இதழ்: 459 தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிய முரட்டு ஆடு !

நியா: 4: 18 “யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர் கொண்டு போய்….”

நாம் ஒவ்வொருவரும் நம் பிள்ளைகள் எப்படி, யாரைப்போல வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டே பெயர்களை தெரிந்தெடுக்கிறோம்.

இன்றைக்கு நாம் இஸ்ரவேலை அடக்கி ஆண்ட யாபீன் என்கிற ராஜாவின் சேனாதிபதி சிசெராவை அழித்து சரித்திரத்தில் இடம் பெற்ற யாகேல் என்ற பெண்ணைப் பற்றிப் படிக்கப் போகிறோம்!

யாகேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா? வரையாடு! வரையாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா?

சில வருடங்களுக்கு முன்னால் இந்த வரையாடுகளைப் பார்ப்பதற்காக மூனார் மலைப்பகுதியில் வெகுதூரம் நடந்து சென்றோம். ஆனால் ஒன்று கூட கண்ணில் படவில்லை. அதன் பின்னர் பலமுறை நான் வால்பாறை செல்லும் வழியில் குடும்பமாக குட்டிகளோடு அலைந்த வரையாடுகளைப் பார்த்தேன். கடந்த மாதம் நான் வால்பாறை சென்றபோது ஒரு பெரிய ஆடு, என்னுடைய கார் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தது. இந்த ஆடுகள் மலைப்பிரதேசத்தில் தான் வாழும்! செங்குத்தான மலையின் மேல் கால்கள் சருக்காமல் ஏறும் திறமையுள்ளவைகள்!

யாகேல் அல்லது வரையாடு என்ற பெயர் கொண்ட இந்த பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ள நாம் அவள் குடும்பப் பிண்ணணியை சற்றுப் பார்ப்போம்.

இவள் தெற்கு பாலஸ்தீனத்தை சேர்ந்தவள். அவளுடைய குடும்பத்தினர் நாடோடிகளாக கூடாரங்களில் வசித்தவர்கள். பாலைவனத்தில் வாழ்ந்த அவர்களுடைய தினசரி வாழ்க்கையே மிகக் கடினமானது. அவளுடைய கணவனாகிய ஏபேர், கேனியன் என்று வேதம் சொல்லுகிறது. கேனியர் இரும்பு, செம்பு போன்ற உலோகங்களில் ஆயுதம், மற்ற கருவிகள் செய்யும் திறமை வாய்ந்தவர்கள். அதனால் அவர்கள் கானானில் உள்ள மக்களுக்கு வேண்டப்பட்டவர்களாய் இருந்தார்கள்.

நியா: 4: 11 கூறுகிறது, “ கேனியனான ஏபேர் என்பவன்…..கேனியரை விட்டுப் பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்” என்று. ஏன் அவன் இவ்வாறு பிரிந்தான் என்று நமக்குத் தெரியவில்லை! ஒருவேளை குடும்பத்தில் ஏதாவது சண்டை காரணமாயிருந்திருக்கலாம். ஆதலால் அவன் கேதேஸ் அருகே சானாயிம் என்ற இடத்தில் குடியிருந்தான். அங்கே அவன் கானானியருடன் சமாதானத்துடன் வாழ்ந்தான். கானானியரின் ராஜாவாகிய யாபீனுக்கு தொள்ளாயிரம் ரதங்கள் இருந்தன, அவனுக்கு நிச்சயமாக , உலோகத்தில் வேலை செய்யும் ஏபேரின் உதவி தேவைப் பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நம்முடைய வரையாடு  என்கிற யாகேல் வாழ்ந்து வந்தாள். அவளுடைய் குடும்பப் பின்னணி அவளை முரட்டுப் பெண்ணாக உருவாக்கியிருந்தது! அவளுடைய கடினமான கூடார வாழ்க்கை, அவளை சொந்தமாக சிந்தித்து முடிவெடுக்கும் பெண்ணாக உருவாக்கியிருந்தது! அவளுடைய கணவனாகிய ஏபேர் கானானியரிடமும், அவர்கள் ராஜாவாகிய யாபீனிடமும், அவனுடைய சேனாதிபதி சிசெராவிடமும் சமாதானம் கொண்டிருந்தாலும், அவள் இஸ்ரவேலின் எதிரிகளை அழிக்க முடிவெடுத்தாள்! அவள் கானானியரின் நிலத்தில் வாழ்ந்த போதிலும், அவர்கள் கர்த்தருடைய பிள்ளைகளை ஒடுக்கி ஆண்டவர்களோடு சமாதானம் பண்ண விரும்பவில்லை!

யாகேல் தேவனுக்கு கீழ்ப்படிந்த ஒரு முரட்டாடு! அவளுடைய குலமோ, கோத்திரமோ, குடும்பமோ, அவளுடைய கணவனோ யாரும் அவள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதைத் தடை செய்ய முடியவில்லை!

நாம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற எத்தனை சாக்குபோக்கு சொல்லுகிறோம்?

நாளையும் இந்த மலர்த்தோட்டத்துக்கு வாருங்கள்! யாகேலைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

God can change your impossibilities today!

This evening I was reading I Samuel 23, where David was told by God that he was the chosen leader of Israel. But very much like Moses who waited eighty years to really be in the place God needed him, it took God some time to get David from the pasture into the palace.

Patience is something for you and me to be reminded of in the way God works! His pace seems too slow isn’t it?

Look what happens to David! He had a spear thrown at him by King Saul. He was let out a window by his wife Michal in order to save his life. He was warned by his best friend Jonathan that he was in danger. David had to run to the wilderness where he lived in caves and mountains.

Remember that David had already been anointed by the prophet Samuel as the next King of Israel!!

I am sure when David was being chased by King Saul, he must have wondered How is God going to get him out of this mess and put him on the throne! How???? When????

Doesn’t it sound familiar in our life too? How long Lord? When will it all change?

How did it all change? A strange thing happened out there in the wilderness. Out of the blue a messenger arrived informing King Saul that the Philistines were attacking which made King Saul take off and David was free.

Unbelievable!1 This is how quickly our Father can change things. In one moment there’s no hope. In the very next moment safety is just one step ahead.

How about you? Are you in a situation like David? Let me advice you to keep in constant communication with our Father like David walking every moment within the protective covering of His will and way!

God can change your impossibilities today!

Prema Sunder Raj

மலர் 7 இதழ்: 458 நட்புடன் நுழைந்தான் சிசெரா!

நியா: 4: 17  “சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.”

வெற்றி! வெற்றி! சிசெராவின் சேனை ஒழிந்தது! கர்த்தர் நமக்கு வெற்றி கொடுத்தார்! சிசெராவும் அவனுடைய  900 இரும்பு ரதங்களும் ஒழிந்தன!

இஸ்ரவேல் மக்களுக்குள் இவ்வாறு வெற்றி செய்தி காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருந்த வேளையில், ” தலைப்புச் செய்திகள்… சிசெரா ஒழிந்து போகவில்லை! தப்பித்து விட்டான்!” என்ற பரபரப்பான செய்தி வெளியாகி மக்களை திடுக்கிட வைத்தது.

பாராக்கின் சேனைகளுக்கும், சிசெராவின் சேனைகளுக்கும் இடையே  நடந்த கடும் யுத்தத்தின் மத்தியில், சிசெரா கால்நடையாகவே தப்பித்து தலைமறைவாகி விட்டான்.

துரதிருஷ்டவசமாக இந்த வசனம் நமக்கு சிசெராவைப் பற்றி சற்று அதிகமாகவே கற்பிக்கிறது! அவன் தைரியசாலி! புத்திசாலி! தப்பி ஓட ரதம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, தன் கால்களை தன் குதிரையின் கால்களைப் போல் உபயோகித்து தப்பிக்க அவனுக்கு தெரியும்!

சரி தப்பித்து எங்கே ஓட முடியும்? இஸ்ரவேலில் யார் கண்களில் அவன் பட்டாலும் அவன் தலை உருண்டு விடும்!

நியா: 4: 17 கூறுகிறது,” சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.” அவன் சமாதானத்தின் கூடாரத்தை நோக்கி ஓடினான்.

எபிரேய மொழியில், இந்த  சமாதானம் என்ற வார்த்தைக்கு, போரற்ற நிலை என்று மாத்திரம் அர்த்தம் இல்லை, இருதரத்தாருக்குள்ளான நட்பு செழிப்பு போன்ற அர்த்தமும் உண்டு.

புத்திசாலிதான்! சரியான இடத்தை நோக்கிதான் ஓடியிருக்கிறான்! கேனியனான ஏபேரின் வீட்டுக்குள் நுழையும்போது தனக்கு அங்கு ஒரு நண்பனைப் போல் பாதுகாப்பு கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும்!

ஒருநிமிடம்!  நம் வாழ்க்கையில் சிசெராவைப் போன்ற பாவங்கள், சிற்றின்பங்கள் ஒழிந்து விட்டன, சிசெராவையும் அவன் ரதங்களையும், சேனைகளையும் முற்றிலும் ஒழித்து விட்டேன், இனி எனக்கு பயமில்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில், திடீரென்று சிசெரா தலை தூக்குகிறான்.

இந்த முறை ரதத்தில் ஏறி ஆடம்பரமாய் நம் வாழ்க்கைக்குள் வரவில்லை! நாம் எதிர்பார்க்காத வேளையில் பின்வாசல் வழியாக நுழைகிறான். சிசெரா! அந்த வஞ்சிக்கிற சர்ப்பம் நாம் எதிர்பாராத இடத்தில் ஒளிந்திருந்து விட்டு, எதிர்பாராத வேளையில் நமக்குள் தலை தூக்குகிறான்.

ஏபேரின் வீட்டில் அவனுக்கு சமாதானம் உண்டு என்று அறிந்திருந்தான்! சமாதானம் என்ற வார்த்தைக்கு நான் கண்ட அர்த்தம் இன்னொன்றும் உண்டு! நட்பும், செழிப்பும் தான்!  ஆம்! நம்முடைய வாழ்க்கை என்னும் கூடாரத்தில் சிசெரா என்னும் வஞ்சனைக் காரனுக்கு தகாத நட்பு, அல்லது செழிப்பான, ஆடம்பரமான வாழ்க்கை என்ற இடத்தை ஒதுக்கி அவன் ஒளிந்து கொள்ள அனுமதித்திருக்கிறோமா? Continue reading

மலர் 7 இதழ்: 457 சிலந்தி வலை போன்ற பெலென்!

நியா: 4 : 16 ” பாராக் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.”

நாம் கடைசியாக சிசெராவைப் பற்றி  நியா: 4:15 லிருந்து படித்த போது, கர்த்தர் சிசெராவின் சேனையைக் கலங்கப் பண்ணினார் என்று பார்த்தோம். கலங்கடித்தார்  என்பதற்கு முறியடித்தார் அல்லது முற்றும் அழித்தார் என்ற அர்த்தத்தையும் பார்த்தோம்.

இன்றைய வேத பகுதியில், தேவனுடைய மக்களின் சேனைத் தலைவனாகிய பாராக் சிசெராவின் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான் என்று பார்க்கிறோம். பாராக் அவர்களை முற்றிலுமாக கானானை விட்டு ஓட ஓட விரட்டினான். ஒருசிலரை கூட விட்டு வைக்கவில்லை. இது நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பகுதி!

இந்த சம்பவத்துக்கு வெகு காலத்துக்கு முன்னமே, கர்த்தர் தம்முடைய தாசனாகிய மோசேயின் மூலமும், பின்னர் யோசுவாவின் மூலமும், தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் மக்களுக்கு தாம் வாக்குக் கொடுத்த கானான் தேசத்தில், எதிரிகளாகிய கானானியருக்கு இடமில்லை என்று தெளிவாகக் கூறியிருந்தார். ஏன் அப்படி சொன்னார்? கானானியரை ஏன் அவர் அனுமதிக்கவில்லை? ஒருசில கானானியர் கூட அவர்கள் மத்தியில் வாழக்கூடாதா? என்ன அநியாயம்? என்ற எண்ணம் நமக்குத் தோன்றவில்லையா?

நம்மையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கர்த்தர் வேதத்தின் மூலமாக நம்மோடு பேசி, நம்மை சரியான பாதையில் நடத்துகிறார். நம்மை பாவ சேற்றில் விழாமல் பாதுகாக்கிறார். ஆனால் பல நேரங்களில், நமக்குள் புதைந்திருக்கும் ஒருசில சிற்றின்பங்களின் தூண்டுதலால், ஏன் எனக்கு கர்த்தர் இப்படி வாழ சுதந்தரம் கொடுக்கவில்லை, அப்படி வாழ சுதந்தரம் கொடுக்கவில்லை, நான் ஏன் மற்றவர்களைப் போல  வாழக்கூடாது என்றெல்லாம்  எண்ணி, நம்மைப் பாதுகாக்கும் தேவனை ஏதோ நம் சுதந்தரத்தைப் பறித்தவர் போல நோக்குகிறோம்.

உண்மை என்ன என்றால், சிசெராவின் சேனையில் ஓரிரு கானானியர் விடப்பட்டாலும், அல்லது நம்முடைய வாழ்வில் ஒருசில சிற்றின்பங்கள் விடப்பட்டாலும், அந்த ஓரிருவர் மூலமாய் நாம் முற்றிலும் வழிமாறிப் போய்விட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதனால் தான் சேனைத்தலைவன் பாராக் சிசெராவின் சேனையை பட்டயக்கருக்கினால் அழித்தான். இந்த சேனையை நம்முடைய சேனைகளோடு இணைத்துக் கொண்டால் நமக்கு மிகப் பெரிய சேனை இருக்குமல்லவா என்று சற்றும் எண்ணவில்லை. அவர்களை விட்டு வைத்தால், அவர்கள் கர்த்தருடைய ஜனத்தை முற்றும் திசை திருப்பி அழித்துவிடுவார்கள் என்று அவர்களை பட்டயத்துக்கு ஒப்புவித்தான்.

நம்மில் அநேகரின் வாழ்க்கையில் சிசெராவின் சேனை போன்ற சிற்றின்பங்கள் முற்றிலும் அழிக்கப்படவில்லை. அவற்றை நமக்குள் புதைத்துக்கொண்டு, அவற்றின் மேல் வெற்றி சிறந்தது போல வாழ முயற்சி செய்வது,  நம்முடைய சுய பெலத்தால் சிற்றின்பங்களை அடக்க நினைப்பது,  இவை எப்படி இருக்கிறது தெரியுமா? காற்றினால் அலைந்து கடலில் மூழ்கப்போகிற கப்பலை, சிலந்தி நூலைக் கொண்டு திசை திருப்ப நினைப்பது போல இருக்கிறது!

இதற்கு தீர்வு என்ன? பரிசுத்த பவுல், பிலிப்பியர் 4:13 ல்  “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு பெலனுண்டு” என்று இதற்கு தீர்வு காண்கிறார். அவருடைய பெலத்தினாலே எனக்கு பெலனுண்டு! அவருடைய பெலத்தினாலே சிசெராவின் சேனையை முறியடிப்பேன்!

சுய பெலத்தினாலே பாவங்களை மேற்கொள்ள முடியாது! சாத்தானை முறியடிக்க முடியாது! ஆனால் நமக்குள் வாசம் செய்யும் இயேசு கிறிஸ்துவின் பெலத்தினாலே சாத்தானின் சேனையை முறியடிக்க முடியும்! இது அவர் நமக்கு கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம்!

சுய பெலனா? அது சிலந்தி நூல் போன்றது! தேவ பெலனைப் பெற்று வெற்றியுடன் வாழ்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 456 நம் எதிரிகளைக் கலங்கடிப்பார்!

நியாதிபதிகள்: 4: 14, 15 அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள், கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்.

வாழ்க்கையை தன் அதிகாரத்துக்குள் வைத்திருப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? தான் சொல்வதுதான் சட்டம், எல்லாமே தனக்கு சொந்தம், எல்லோருமே தனக்கு அடிமைகள், எதிர்காலமே தன் கையின் சுண்டு விரலில் தான் உள்ளது என்பவை போன்ற எண்ணம் கொண்டவர்களைப் பற்றித் தான் கேட்கிறேன்!

அப்படிப்பட்ட ஒருவன் தான் யாபீன் என்கிற கானானியரின் ராஜா என்று வேதம் சொல்லுகிறது. 20 வருடங்கள் இஸ்ரவேல் மக்களை அடக்கி ஆண்டு கொண்டிருந்தான். சேனாதிபதி  சிசெராவின் உதவியோடு, 900 இருப்பு ரதங்களோடு, தன்னை யாரும் முறியடிக்க முடியாது என்ற இருமாப்பில் ஆண்டான்.

நியா: 4 :2 கூறுகிறது, யாபீன் ஆத்சோரை ஆண்டான் என்று, ஆனால் ஆத்சோரை மட்டுமல்ல, அண்ட சராசரங்களையும் அடக்கி ஆளும் தேவாதி தேவனைப் பற்றி அவனுக்கு அறிவே இல்லை. அந்த தேவனுக்கு மனதிராவிட்டால் யாபீன் ஆள ஒரு பிடி மணல் கூட இந்த பூமியில் இருந்திருக்காது என்பதை உணராமல் வாழ்ந்தான்.

தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் மக்களை இந்த யாபீனின் இரும்பு ஆட்சியிலிருந்தும், சிசெராவின் இரும்புப் பிடியிலிருந்தும் விடுவிக்க தேவனாகிய கர்த்தர் முடிவு செய்தார்.

கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார் என்று வேதம் கூறுகிறது. பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார் என்பதற்கு, முற்றும் அழித்தார் என்று அர்த்தம்.

11 சாமுவேல் 22:15, ” அவர் அம்புகளை எய்து, அவர்களை சிதற அடித்து, மின்னல்களை பிரயோகித்து அவர்களை கலங்கப் பண்ணினார்”  என்ற வார்த்தை நமக்கு இதை தெளிவாக விளக்குகிறது. வானத்தையும், பூமியையும் ஆளும் பரலோக தேவனுக்கு நிகராகத் தங்களை இணைத்த யாபீனுக்கும், சிசெராவுக்கும் எதிராக தேவன் தம் வல்லமையுள்ள புயத்தை வெளிப்படுத்தினார். இஸ்ரவேல் மக்களின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லவர், சர்வத்தையும் ஆளுபவர் என்று அவர்கள் புரிந்து கொண்டனர்.

கர்த்தர் யாபீனையும், சிசெராவையும் கலங்கப்பண்ணின சம்பவத்திலிருந்து, இஸ்ரவேல் மக்களும், விசுவாசிகளாகிய நாமும் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதிருந்தது.

தேவனாகிய கர்த்தர் சர்வத்தையும் ஆளுகிறார் என்ற எண்ணமே இல்லாமல் நாம் வாழும்போது, தேவனாகிய கர்த்தரின் கண்கள் தம் பிள்ளைகள்ளகிய நம்மேல் நோக்கமாயிருக்கிறது என்று நினையாமல் நாம் வாழ்க்கையின் சுமைகளைத் தாங்கும் போது, கர்த்தர் நம்மை நோக்கி, எழுந்திரு! போ! நான் உனக்கு முன் செல்கிறேன்! என்று ஏன் சொல்லுகிறார் தெரியுமா? அவர் நம் எதிரிகளைக் கலங்கடிக்கப் போகிறார்!

நம்முடைய பிரச்சனைகளுக்கு மத்தியில் நாம் தேவனாகிய கர்த்தரை சர்வ வல்லவர் என்று விசுவாசிக்கிறோமா?

 அவர் வல்லவர்! சர்வ வல்லவர்! அவர் உனக்காக யுத்தம் செய்வார்! உன் எதிரிகளை கலங்கடித்து உனக்கு ஜெயம் கொடுப்பார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 7 இதழ்: 455 உனக்கு முன்னால் செல்லும் கர்த்தர்!

நியா:4:14  அப்பொழுது தெபோராள் ..எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்.

நேற்று நாம் கர்த்தர் நம்மை எதிரிகளிடமிருந்து விடுவிக்க வல்லவர் என்று பார்த்தோம். தெபோராள் பாராக்கை எழுந்து போ ,கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்றாள்.

இன்று நாம் இந்த வசனத்தை தொடர்ந்து தியானிக்க போகிறோம்.

இதை வாசிக்கும்போது என்னை மிகவும் கவர்ந்த காரியம் என்ன என்றால், கர்த்தர் இஸ்ரவேல் மக்களையும், தெபோராளையும் எழுந்து போ என்று மாத்திரம் கட்டளை கொடுக்கவில்லை, அதோடு கூட அவர்களுக்கு முன்னால் செல்லும் வழிகாட்டியையும் கவனிக்கும்படி கூறுகிறார்.

வழிகாட்டி என்ற வார்த்தையை நான் எழுதும்போது, மலைப்பகுதிகளில் மாணவர்களுடன் முகாமிட்டு, முதுகிலே பயணத்துக்குத் தேவையான ஒரு பையை தூக்கிக்கொண்டு, அவர்களை சிகரங்கள் ஏற வழிகாட்டுபவர்கள் தான் நினைவுக்கு வந்தது! கரடுமுரடான பாதையிலும் மாணவர்களுக்கு முன்பாக அவர்கள் செல்வார்கள்!

கர்த்தர் இஸ்ரவேல் மக்களை நோக்கி நீங்கள் தெபோராவை பின்பற்றுங்கள் என்றோ அல்லது பாராக்கை பின்பற்றுங்கள் என்றோ அல்லது நீங்கள் ஒருவரையொருவர் பின்பற்றுங்கள் என்றோ கூறாமல், அவர்களை நோக்கி, நான் உங்களுக்கு முன்னால் புறப்பட்டு விட்டேன்! என்னை பின்பற்றுங்கள் என்பதைப் பார்க்கிறோம். ஆம்! கர்த்தராகிய தேவனே நம் வாழ்வின் வழிகாட்டி!

நாம் எத்தனைமுறை நமக்கு முன் செல்லும் தேவனாகிய கர்த்தர் மேல் கண்களை வைக்காமல் தெபோராளைப் போன்ற, பாராக்கைப் போன்ற உலகத்தலைவர்கள் மேல் நம் கண்களை வைக்கிறோம். கர்த்தர் சில நல்ல தலைவர்களை நமக்கு கொடுத்திருக்கலாம்! அவர்கள் உங்களை சரியான ஜீவ பாதையில் வழிநடத்தியிருக்கலாம்! தெபோராளைப் போல நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை நமக்கு கொடுத்திருக்கலாம்!  ஆனாலும் அவர்களையல்ல, தேவனாகிய கர்த்தரையே நாம் பின்பற்ற வேண்டும்!

கர்த்தரைப் பின் தொடருதல் என்பது சில நேரங்களில் சுலபமான காரியம் அல்ல என்பதைப் போல தோன்றும்! என்னுடைய வாழ்க்கையில் பலநேரங்களில் என்னுடைய வழிகாட்டியான  கர்த்தரை விட்டு விட்டு அவருக்கும் முன்னால் செல்ல நான் முயன்றிருக்கிறேன். அப்படி நான் முன்னால் ஓடி, என் சுயமாக எடுத்த முடிவுகள் எதுவுமே இதுவரை வெற்றியாக முடிந்ததில்லை. ஏனெனில் என் வாழ்க்கையை நான் பார்க்கும் விதம் வேறு, கர்த்தர் பார்க்கும் விதம் வேறு. நான் என்னை சுற்றிலும் உள்ளவைகளைத் தான் காணமுடியும், அடுத்த நிமிடம் என் வாழ்க்கையில் நடக்கப் போவதைக் கூட என்னால் காண முடியாது. ஆனால் கர்த்தர் தம்முடைய சிங்காசனத்திலிருந்து என்னை நோக்குகிறார்! என்னுடைய எதிர்காலம் அவருக்குத் தெரியும்! ஆதலால் அவருடைய வழிநடத்துதல் நிச்சயமாக என்னுடைய நலத்துக்காகத்தான் இருக்கும்!

இன்று கர்த்தர் நம்மிடம்  எழுந்து போ உன்னை எதிரிகளிடமிருந்து விடுவிப்பேன்! நோயின் பிடியிலிருந்து விடுவிப்பேன், தீராத பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பேன் என்று அழைக்கும் சத்தம் கேட்டு அவருக்கு நாம் கீழ்ப்படியும் போது, உனக்கு முன்பாக நான் செல்கிறேன், என்னைப் பின்பற்று! என்கிறார்.

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு முன்பதாக செல்கிறார் என்ற எண்ணம் எத்தனை இன்பமும், ஆறுதலுமாயிருக்கிறது!

கண்ணுக்கு பசுமையாகத் தோன்றும் எல்லா புல்வெளிகளிலும் நான் செல்ல ஆவலாய் அவருக்கு முன்னல் ஓட முயற்சி செய்யும் போதெல்லாம், கரடு முரடான பள்ளத்தாக்கில் போய் நின்று அழுவதுண்டு! தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாக ஓட முயன்றான்.  

ஆனால் “சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். கர்த்தருடைய உடன்படிக்கையையும், அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும், சத்தியமுமானவைகள்.” (சங்: 25: 9,10) என்ற உண்மையை அவன் வாழ்க்கையில் உணர்ந்து கொண்டான்.

தேவனால் போதிக்கபடும்படியான, வழிநடத்தப்படும்படியான மனப்பக்குவம் கொண்டவர்களைத்தான் தாவீது சாந்தகுணமுள்ளவர்கள் என்கிறான்!  அதனனால் ” கர்த்தாவே உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்” என்கிறான்.

தேவனால் போதிக்கப்படும், வழிநடத்தப்படும் மனப்பக்குவம் உனக்கு உண்டா? வழிகாட்டியான கர்த்தரின் பின் செல்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 454 பாராக்! எழுந்திரு!

நியா: 4:14 “அப்பொழுது தொபோராள் பாராக்கை நோக்கி; எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; “

அருமையான காலைப்பொழுது! பறவைகளின் சத்தம் காதுகளில் தொனித்தது ! இன்றைய பொழுது எப்படியாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் கண் விழித்து பார்த்தான் பாராக்!

பாராக்! எழுந்திரு! எழுந்திரு! என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் துன்னியமாக தொனித்தன! எழுந்திரு! கர்த்தர் இன்று சிசெராவை உன்னுடைய கரங்களில் ஒப்புவித்தார் என்று உரத்த சத்தமாய் கூறினாள் தெபோராள்.

இதை வாசிக்கும் போது காலைதோறும்  ‘எழும்பு! எழும்பு! என்று உரத்த சத்தமாய் எழுப்பிய என் அம்மாவின் நினைவுதான் வந்தது. அதிகாலையில் தூங்குவது எனக்கு மிகவும் பிரியம். அம்மா வந்து எழுப்பும்வரைதான் தூக்கம் நீடிக்க முடியும். காலையில்  எவ்வளவு வேலை இருக்கிறது, எழும்பு என்று எப்படியாவது எழும்ப வைத்து விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகருவார்கள்.

அப்படித்தான் தெபோராள்  பாராக்கை எழுப்பியிருப்பாள்.  பரலோக தேவனின் தெய்வீக சித்தத்தை நிறைவேற்ற பாராக்கை அனுப்ப வேண்டிய அவசரம்!

எழுந்திரு என்ற வார்த்தைக்கு தாழ்விலிருந்து உயர எழும்பு என்ற அர்த்தமும் உண்டு. பூமியின் தாழ்விடங்களிலிருந்து உலகப்பிரகாரமான பிரச்சனைகளையே நோக்கிக்கொண்டிராமல், உயர மான உன்னத தேவனை நோக்கு என்று தெபோராள் இஸ்ரவேல் மக்களையும், பாராக்கையும், அழைக்கிறாள்!

பூமியின் தாழ்விலிருந்து உயர பரலோகத்தை நோக்கு! என்று கர்த்தர் இன்று உன்னையும் அழைக்கிறார்.

எழும்பு என்பதோடு தெபோராள் நிறுத்திக்கொள்ளவில்லை! கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்று பரலோக தேவனிடத்திலிருந்து ஒரு விசேஷமான செய்தியையும் கொடுத்தாள்.

கர்த்தர் உன் எதிரியை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே!  ஒப்புக்கொடுக்கும் என்ற வார்த்தையைப் பாருங்கள்! எபிரேய மொழியில் அந்த வார்தைக்கு,  விடுதலையைக் கொடுக்கும் என்ற அர்த்தமும் உண்டு! இன்று உனக்கு விடுதலையக் கொடுப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்!

உன் வாழ்வின் சிசெரா என்னும் எதிரி நோயாக இருப்பின் கர்த்தர் இன்று உனக்கு விடுதலையக் கொடுப்பேன் என்கிறார். உன் வாழ்வின் எதிரி திருமண பந்தத்தில் உள்ள பிரச்சனையாயிருப்பின் கர்த்தர் இன்றே உன் எதிரியிடமிருந்து உனக்கு விடுதலையைக் கொடுப்பேன் என்கிறார்.

பலவிதமான கஷ்டங்கள் என்னும் எதிரி நம்மை சூழும்போது , சிசெராவிடமிருந்து இஸ்ரவேலை விடுவித்த தேவன் இன்றும் வல்லவரா?என்ற எண்ணம் தான் எழுகிறது. ஆனால் நான் இன்று உங்களுக்கு சாட்சியாக எழுதுகிறேன், உங்கள் எதிரி  யாராக இருப்பினும் சரி, தீராத நோயோ அல்லது திருமண உறவோ அல்லது கடன் தொல்லையோ, அல்லது மாமியார் நாத்தனார் பிரச்சனைகளோ, அபாண்டமாய் சுமத்தப்பட்ட பழியோ எதுவானாலும் சரி, என்னுடைய தேவனாகிய கர்த்தரால் உனக்கு விடுதலையைக் கொடுக்க முடியும்.

இந்த வார்த்தைகளை திட்டமாக எழுதும் தகுதியை நான் பெற, கர்த்தர் என்னை கடுமையான அனுபவத்துக்குள் 2007 ம் ஆண்டு கொண்டு சென்றார். மலை போல எனக்கு எதிராக திரண்டு வந்த எதிரிகளை முறியடித்து என்னை விடுவித்தார்! இது என் சாட்சி! தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து இதை உன்னுடைய சாட்சியாக்கு!

“கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து தாமதியார்” என்று  11 பேதுரு 3:9 கூறுகிறது. தெபோராளுக்கு சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்று கர்த்தர் வாக்கு கொடுத்திருப்பாராயின், அந்த வாக்குத்தத்தம் உனக்கும் சொந்தம் ஏனெனில் அவர் வாக்கு மாறாதவர்! இது நம் பரம தகப்பனின் வாக்குத்தத்தம்!

இது உன்னுடைய நாள்! இயேசு கிறிஸ்து உன்னை விடுவிக்க வல்லவர்! உன் எதிரியை இன்று உன்னிடம் ஒப்புக்கொடுப்பார்!