யோவான் 15:15 நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்
பிதாவாகிய தேவனைப் பற்றி சில நாட்கள் சிந்திக்கலாம் என்று சொன்னேன்!
நெருக்கமான நண்பர்களோடு பேசிக் கொண்டு இருக்கும்போது நேரம் போவதே தெரியாது அல்லவா? ஒவ்வொருத்தர் நண்பர்களுக்கு எவ்வவளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்! நண்பர்களைத் தன் குடும்பத்துக்கும் மேலாக கருதுபவர்களைப் பார்த்ததுண்டா?
நாம் வாசிக்கும் இந்த வசனத்தில், கர்த்தராகிய இயேசுவானவர் நம்மோடு கொள்ள ஆசைப்படும் உறவை வெளிப்படுத்தினார். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்கிறதில்லை, சிநேகிதர் என்றேன் என்றார். தேவன் நம்மை ஒரு நல்ல, நம்பகமான நண்பர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய இருதயத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறார். இருளான வேளையிலும் அவரை முற்றிலும் நம்பும் ஒரு நண்பராக நாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
பிதாவாகிய தேவனுடைய இந்த வாஞ்சையைத் தான் இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். அவருடைய பிதாவானவர், வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவர், மகத்துவமுள்ளவர்,நம்முடைய இரட்சகர், நம்மிடம் நட்பை எதிர்பார்க்கிறார். இதை நினைக்கும்போது புல்லரிக்கிறதல்லவா?
நான் ஸ்கூலில் படித்த போது அங்கு எல்லோராலும் விரும்பப்பட்ட அழகான, திறமையுள்ள ஒரு பெண் இருந்தாள். எல்லாருக்கும் அவளுடைய நட்புக்காக ஓடுவார்கள். நான் அமைதியாக ஒதுங்கியிருப்பேன். ஒருநாள் அவள் என்னிடம் வந்து என்னோடு நட்பு கொள்ள ஆசையாக இருப்பதாக சொன்னாள். எனக்கு சொல்ல முடியாத அளவு மிகவும் சந்தோஷம்.
ஆனால் கர்த்தராகிய இயேசு சொன்ன இந்தக் காரியம் நமக்கு 10000 ஆயிரம் மடங்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றல்லாவா?
தேவாதி தேவனோடு நட்பு! அவர் இதை என்னிடமும் உன்னிடமும் விரும்புகிறார்! தினமும் என்னோடு பேச வேண்டுமாம்! என்னோடு நடக்க வேண்டுமாம்! என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறார்.
அவரை நண்பராகக் கொள்வதால் அவர் என்னைக் கண்மணி போல் காக்கிறார்! அவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை! நான் அவரோடு பேசும்போது மகிழ்ச்சியடைகிறார் ஏனெனில் அவருடைய நட்பை நான் ஏற்றுக்கொண்டதால் பரலோகத்தில் அத்தனை மகிழ்ச்சி!
இவரை நண்பராகக் கொண்டதற்காக நான் கர்த்தருக்கு என்றென்றும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். என்னுடைய நன்மையை விரும்பும் ஒரு நண்பர், என்றும் மாறாத நட்பு, நம்பகமான நட்பு நமக்கு அளிப்பவர்!
சாது சுந்தர்சிங் சொன்னர்,’ நாம் பத்து அல்லது இருபது நிமிடம் ஜெபம் பண்ணவே கஷ்டப்படுகிறோமே! எப்படி ஆண்டவோடு கூட் நித்தியமாய் வாழப்போகிறோம்! இங்கேயே அவரோடு அதிகம் பேசி, அவரோடு வாழப் பழக வேண்டாமா? என்று.
தேவாதி தேவனுடைய நல்ல நட்பு உனக்கு வேண்டாமா?
உன்னுடைய இன்றைய உறவு, நீ செலவிடும் நேரம் இவை உன்னை நான் கர்த்தருடைய சிநேகிதர் என்று உணர வைக்கிறதா?
இல்லையானால் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
ஜெபக்குறிப்புகள் இருக்குமாயின் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
