கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1080 அவர் முகசாயலை பிரதிபலிக்கும் பரிசுத்த வாழ்க்கை!

லேவி:20:26 ”கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே, நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு உங்களை மற்ற ஜனங்களை விட்டு பிரித்தெடுத்தேன்.”

லேவியராகமத்தின் மூலம் நாம் தேவனாகிய கர்த்தருடைய குணநலன்களை அல்லது தன்மைகளைப் பற்றி படித்து வருகிறோம்.

தம்முடைய வார்த்தைகள் மூலமாய் அவர் நம்மை நிலைப்படுத்துகிறார் என்று பார்த்தோம், அவரை உண்மையின் அல்லது சத்தியத்தின் தேவனாகப் பார்த்தோம், அவரை தூய்மையின் தேவனாகப் பார்த்தோம், இன்று அவரை பரிசுத்தராக இந்த புத்தகத்தின் மூலம் காணப்போகிறோம். லேவியராகமத்தில் பரிசுத்தர் என்ற வார்த்தை 90 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏன் இத்தனை முறை தன்னை இந்த ஜனங்களுக்கு ‘கர்த்தராகிய நான் பரிசுத்தர் என்று மறுபடியும் மறுபடியும் கூறுகிறார் என்று நினைக்கத் தோன்றும். ஏறக்குறைய ஆறு தலைமுறைகளுக்கு மேலாக, 400 வருடங்களாக  அடிமைத்தனத்தில், பார்வோனையே தேவனாக எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு, தேவனாகிய கர்த்தரைப் பற்றின உபதேசம் மறந்தே போய்விட்டது. அதனால் அவர்களுக்கு கர்த்தர் தம்மை தான் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று மறுபடியும், மறுபடியும் கூறுகிறார். அவர் அநேக கடவுள்களில் ஒருவர் இல்லை, அவர் ஒருவரே தேவனாகிய கர்த்தர். யாத்தி: 20 ம் அதிகாரத்தில் அவர் மோசேயின் மூலம் இஸ்ரவேல் புத்திரருக்கு பத்து கட்டளைகளை அளித்தபோது, அதில் முதல் கட்டளையாக, ‘என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்’ என்றார். அடுத்த வசனத்தில் அதையும்விட ஒருபடி மேலே போய், ‘ யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.”

 கர்த்தர் இந்த கட்டளையை கொடுத்த சில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள், பொன்னால் செய்யப்பட்ட கன்றுக்குட்டியை வழிபடுவதைப் பார்க்கும்போது, இவர்கள் என்ன காதில் பஞ்சையா  வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று கேட்கத்தோன்றுகிறது அல்லவா?

இந்த சம்பவங்கள், ஏன் தேவனாகிய கர்த்தர், தலையில் ஆணியடித்தாற்போல் ‘நான் கர்த்தர், நான் பரிசுத்தர்’ என்று திரும்ப திரும்ப சொல்கிறாரென்று நம்மை புரிந்துகொள்ள செய்கின்றன. யார் பரிசுத்தர் என்று அவர்கள் மனதில் எந்த சந்தேகமும் வரக்கூடாது! அதுமட்டுமல்ல தம்முடைய பிள்ளைகள் பரிசுத்தராயிருக்கவேண்டும் என்று அவர்களை மற்ற ஜனங்களைவிட்டு பிரித்தெடுத்தேன் என்கிறார்.

எகிப்திலிருந்தும், பார்வோனிடமிருந்தும், புறஜதியினரிடமிருந்தும் அவர்களை பிரித்தெடுத்து, தமக்கென்ற பரிசுத்த ஜனமாக்க விரும்பினதுமட்டுமல்ல, அவர்களுடய பரிசுத்த வாழ்க்கை உலகத்துக்கே ஒரு எடுத்துக் கட்டியாயிருக்க விரும்பினார். ஏனெனில் நம் வாழ்க்கையே நாம் யாருடைவர்கள் என்று உலகத்துக்கு பறைசாற்றும்.

பிரசங்கி டி.எல்.மூடி கூறினது போல ’கப்பலுக்கு திசை காட்டும் விளக்கு ஸ்தம்பம், ஒலி கொடுக்க அவசியமில்லை, அது ஒளி மட்டும்தான் கொடுக்கும், அதே விதமாக நம்முடைய வார்த்தைகளைவிட, நம் பரிசுத்த வாழ்க்கையே அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.’  

 இன்று இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நான் பரிசுத்தராயிருப்பது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியதிருக்கிறது. நாம் எப்பொழுதெல்லாம், கர்த்தருடைய பரிசுத்தத்தை உணர்ந்து, அவரை நெருங்கி சேருகிறோமோ, அப்பொழுதெல்லாம் சாத்தான் நம்மை நெருங்கி, பரிசுத்த தேவனை விட்டு பின்வாங்க செய்ய முயற்சி செய்கிறான்.

பரிசுத்த தேவனுடைய பரிசுத்தத்தில் பங்கு பெறுவதெ நம்மை பரிசுத்தராக்கும். அவருடைய பரிசுத்தத்தில் பங்கு பெற விரும்பினால், நாம் ஞாயிற்று கிழமை கிறிஸ்தவர்களாயிருப்பதை விட்டு விட்டு, ஒவ்வொரு நிமிடமும் அவர் முகத்தை தேடும் அவருடைய பிள்ளைகளாக மாறவேண்டும்!

அவர் முகத்தை தொடர்ந்து தேடும்போது அவர் முகசாயல் உன்னில் பிரகாசிக்கும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Leave a comment