கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1081 வாழ்வைத் தீர்மானிக்கும் தீர்மானங்கள்!

லேவி: 24: 10 -12 ”அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன், இஸ்ரவேல் புத்திரரோடேக்கூட புறப்பட்டு வந்திருந்தான். இவனும், இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டை பண்ணினார்கள்.

அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.

கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.

நாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படித்து வந்தோம்.  அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள நாம் வாசிக்கவே விரும்பாத லேவியராகம புத்தகம் உதவியது அல்லவா! தேவனாகிய கர்த்தர், அநேக தலைமுறைகள் அடிமைகளாக வாழ்ந்து தரமில்லாதிருந்த இஸ்ரவேல் மக்களை சீர்ப்படுத்த, தம்முடைய பிள்ளைகளாக மாற்ற இந்த விதிமுறைகளைக் கொடுத்தார் என்று பார்த்தோம். அதுமட்டுமல்ல இந்த புத்தகம் தேவனுடைய தெய்வீகத்தன்மைகளை நமக்கு காட்டிற்று. அவருடைய முகத்தை அதிகதிகமாக நோக்கும் போது, அவருடைய சாயலை நாமும் அடைவோம்!

அவருடைய சாயலை நாம் அடைய வேண்டும், அவரைப் போல பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்ற ஆவல் நமக்கு ஒவ்வொரு நாளும் தேவை. அப்படியில்லாவிட்டால் நாமும்  லேவியராகமம் 24 ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு வித்தியாசமான குடும்பத்தின் கதையைப் போலத் தவறான முடிவை எடுத்து விடுவோம்.

இந்தக் கதையின் மூலம் நாம் வாழ்க்கையில் எடுக்கும் தீர்மானங்கள் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன என்று பார்க்கப்போகிறோம். உன்னுடைய பாவ மூட்டையை இறக்கிவிட்டு  பரலோகத்துக்கு போவாயா? அல்லது பாவ மூட்டையை சுமந்துகொண்டு நரகத்துக்கு போவாயா என்ற ஜாண் பனியனின் வார்த்தைக்கேற்ப, நம்முடைய தீர்மானங்கள் நம்முடைய வாழ்வின் முடிவை தீர்மானிக்கின்றன.

நம் தீர்மானங்கள் நம்முடைய வாழ்க்கைத் தரத்துக்கேற்றவாறு மாறுகின்றன. நாம் தவறான தீர்மானங்களையே பலமுறை எடுப்போமானால் நம்முடைய இருதயம் அதற்கேற்றவாறு கடினமடைந்துவிடும் என்பது நாம் அறிந்த உண்மையே.

இன்று வாசித்த வேதபகுதியின் மூலம், இந்த சம்பவத்தில்  வருபவர்கள் எடுத்த தீர்மானங்கள், மற்றும் அந்த தீர்மானங்களால் ஏற்பட்ட நன்மை தீமைகள் இவற்றை இந்த கதையின் மூலம் காணப்போகிறோம்.

ஒவ்வொரு நாளும் நன்மை தீமைக்கான தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டியதுள்ளது. சோதனைகளில் வீழ்ந்துவிடாமல் நம்மை பரிசுத்தமாய் காத்துக்கொள்ள சரியான தீர்மானங்கள் எடுக்க வேண்டும். ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய பரிசுத்த தேவனின் கட்டளைகளை மதிக்காமல் தவறான தீர்மானம் எடுத்த இந்தக் குடும்பத்தின் கதை நமக்கொரு பாடமாக அமைகிறது.

புதன் கிழமை நாம் இந்தக் கதையில் வரும் தாய் எடுத்த தீர்மானம் சரியா தவறா என்று பார்ப்போம்! இஸ்ரவேல் குமாரத்தியாகிய அவள் ஒரு எகிப்தியனை மணந்தது சரியா? தவறா என்று சிந்தியுங்கள்!

வியாழன் அன்று நாம், அவளுடைய மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து, தூஷிக்க எடுத்த தீர்மானம் சரியா? தவறா என்று பார்ப்போம்!

வெள்ளி அன்று நாம், இந்த சம்பவத்தில் இஸ்ரவேல் மக்கள் எடுத்த தீர்மானம் சரியா? தவறா? என்று தியானிப்போம்.

கடைசியாக, தவறான தீர்மானங்கள் எடுப்பதால் வரும் விளைவுகளைப் பற்றி சிந்திக்கலாம்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த எந்த தீர்மானம் உங்கள் வாழ்க்கையை அதிகமாக பாதித்திருக்கிறது? என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். 

இந்தப் புதிய ஆண்டில் நாம் எடுக்கும் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் சரியான தீர்மானங்களாக அமைய இந்தக் கதை நமக்கு உதவட்டும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Leave a comment