நியாதிபதிகள்: 16: 28 “அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கி கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே பலப்படுத்தும் என்று சொல்லி..”
சில நாட்களுக்கு முன்பு என்னுடன் வேதாகமக் கல்லூரியில் படித்த ஒரு நண்பர் போன் பண்ணினார். 33 வருடங்கள் கழித்து அவருடைய குரலைக் கேட்டபோது என்னால் யார் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. நான் உங்களோடு படித்தேனே உங்களுக்கு ஞாபகம் இல்லையா என்று பலமுறை கேட்டார். நான் அத்தனை வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் கொடுத்த ஒரு செய்தியையும் ஞாபகம் வைத்திருப்பதாக சொன்னார். நிச்சயமாக நானும் அந்த நண்பரின் பெயரையும், உருவத்தையும் மறக்கவேயில்லை!
இது கர்த்தர் நமக்குக் கொடுத்த ஒரு பரிசு என்றுதான் எண்ணுகிறேன். எத்தனை வருடங்கள் ஆனாலும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், ஒருவரையொருவர் நினைவுகூறும் தன்மை மனிதராகிய நமக்கு மட்டுமே கர்த்தர் கொடுத்திருக்கிறார். அவருடைய சாயலாக படைக்கப்பட்ட நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆற்றல், தேவனாகிய கர்த்தருக்கு நம்மை நினைவுகூறும் ஆற்றல் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்று நம்மை சிந்திக்க வைக்கிறது!
தன்னுடைய வாழ்க்கையை வீணடித்துவிட்ட சிம்சோன், இன்றைய வேதாகமப்பகுதியில், இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும் என்று தேவனாகிய கர்த்தரை நோக்கி வேண்டுகிறதைக் காண்கிறோம். சிம்சோன் செய்த அட்டகாசங்களைப் பார்க்கும்போது அவனைப்போன்ற ஒருவனைக் கர்த்தர் எப்படி மறந்து போவார் என்று நினைத்தேன்!
அதுமட்டுமல்ல! சிம்சோன், நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே பலப்படுத்தும் என்று கேட்பதைப் பார்க்கிறோம். பழிவாங்கும்படிக்கு என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியாக்கத்தில் ,’ தண்டிக்கும்படிக்கு’ என்று எழுதியிருக்கிறதைக் காணலாம். சிம்சோனின் வாழ்க்கையில் அவனைக் குறிவைத்து தாக்கி, அவன் ஆவிக்குரிய கண்களையும், சரீரக்கண்களையும் இழக்கக் காரணமான பெலிஸ்தர், அவனுக்கு மட்டுமல்ல, கர்த்தருக்கும் விரோதிகள் தான்!
நியாதிபதிகள் 16 ம் அதிகாரம் முழுவதையும் படிக்கும்போது கர்த்தர் அவனுடைய வேண்டுதலுக்கு பதிலளிப்பதைக் காண்கிறோம். அவனுடைய பலம் அவனுக்கு திரும்ப வந்தது! கர்த்தருடைய விரோதிகளான பெலிஸ்தரும், அவர்களுடைய பிரபுக்களும் அழிக்கப்பட்டனர் என்று பார்க்கிறோம்.
இந்த இடத்தில் தேவனாகிய கர்த்தரைப் பற்றிய ஒரு அருமையான பாடத்தை நாம் சிம்சோனின் வாழ்க்கை மூலமாக படிக்கப் போகிறோம். நம்மில் பலர் , பழைய ஏற்பாட்டின் தேவனாகிய கர்த்தரை ஒரு தீவிரவாதி போலவும், புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்துவை ஒரு இனிமையானவர் போலவும் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்!
யோவான் 14:9 ல் பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்றுக் கேட்ட பிலிப்புவிடம் ‘ என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்’ என்று இயேசுவானவர் கூறியதை விடத் தெளிவாகத் தம்மை வெளிப்படுத்திய இடம் வேறு எதுவுமே இருக்காது என்று நினைக்கிறேன்.
அதேவிதமாக, இயேசுவானவர் தம்முடைய பிள்ளைகளை நடத்தும் விதம் நமக்கு தேவனாகிய கர்த்தர் தம் பிள்ளைகளை எவ்வாறு நடத்துகிறார் என்பதைத் தான் பிரதிபலிக்கிறது.
பிதாவானவர் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் பாருங்கள்!
தம்முடைய சித்தத்தையும் அழைப்பையும் விட்டு வழிவிலகிப்போய்த் தன்னுடைய வாழ்வை வீணாக்கின சிம்சோன் தன்னை நோக்கி ‘ இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்’ என்று வேண்டியபோது அவனுக்கு மனதிரங்கியதைப் பார்க்கும்போது கர்த்தர் தன் பிள்ளைகளுக்கு எவ்வாறு இரங்குகிறார் என்று நமக்கு விளங்குகிறது அல்லவா?
சிம்சோனுக்குக் கர்த்தர் இரங்கியது போல, கொல்கொதா மலையின்மேல், சிலுவையில் தொங்கினத் திருடன் ஒருவன் ‘உம்முடைய ராஜ்யத்தில் என்னை நினைத்தருளும்’ என்று வேண்டியபோது, இயேசு கிறிஸ்து அவனுக்கு இரங்கியது நம் நினைவுக்கு வருகிறது அல்லவா?
சிம்சோனைப் போல நாம் வழிவிலகிப் போனபோதும், தேவனாகிய கர்த்தர் நம்மை அதிகமாக நேசிப்பதால், நாம் செய்த எந்தப் பாவமும், அல்லது நாம் வழி தப்பி சென்ற எந்தப் பாதையும் அவர் நம்மை மறக்கும்படி செய்யவே முடியாது! அவர் நம்மை மறக்கவே மாட்டார்!
‘இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்’ ( ஏசா: 49: 16) என்ற தேவனிடம் நீ, கர்த்தாவே என்னை ஒருவிசை மாத்திரம் நினைத்தருளும் என்று ஜெபிப்பாயானால், அவர் ‘நான் உன்னை மறந்ததே இல்லையே‘ என்றுதான் பதிலளிப்பார்
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்