ரூத்: 1: 1 நியாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில்…
ஞாயிற்றுக்கிழமை காலைதோறும் நாங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரட் டோஸ்ட் பண்ணுவது எனக்கு வழக்கம். இது அமெரிக்க தேசத்தாராகிய என்னுடைய மருமகன் கற்றுக் கொடுத்தது!
இப்பொழுதெல்லாம் பல வகை தானியங்களால் செய்யப்பட்ட பிரட் கிடைக்கிறது. இரண்டு துண்டு பிரட்டுக்கு நடுவே வேர்க்கடலை பட்டரை த்தடவி , அதின்மேல் வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி அடுக்கி வைத்து டோஸ்ட் செய்வது மிகவும் ருசியாக இருக்கும்! இது ருசியாக மட்டும் அல்ல, நன்றாக பசியும் தாங்கும் ஏனெனில் இதில் நமக்குத்தேவையான புரதச் சத்து அதிகம் உள்ளது!
நாம் கர்த்தருடைய வார்த்தையை அப்பத்துக்கு ஒப்பிடுகிறோம்! ஜீவ அப்பம்! முழுமையான அப்பம்! ஆத்தும பசியையும் போக்கும்! இனிமையையும் கொடுக்கும்!
ராஜாவின் மலர்களுக்காக , வேதத்தை ஆராய்ந்து படித்து எழுத ஆரம்பித்த பின்னர், வேதத்தில் புதைந்து உள்ள அநேகப் புதையல்களை என்னால் காண முடிந்தது. விசேஷமாக நியாதிபதிகள் புத்தகத்தை நான் வாசித்தபோது , கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏற்படும் வெற்றித் தோல்விகள் மூலமாக செயல்படும் விதமானது, எனக்கு வைரங்களும் முத்துகளும் உள்ள புதையலைத் தோண்டிக்கண்டு பிடித்தது போலவே இருந்தது.
என்னிடம் யாராவது நியாதிபதிகள் புத்தகம் எப்படி இருந்தது என்று கேட்டால் , 12 வகை தானியங்களால் செய்யப்பட்ட ரொட்டியோடு, புரத சத்து நிறைந்த வேர்க்கடலை பட்டர் சேர்ந்த சாண்ட்விச் போலவே இருந்தது என்று சொல்வேன். ஒவ்வொரு துளியும் நம் வாழ்க்கைக்குத் தேவையான ஆத்மீக சத்துக்களால் நிறைந்து இருந்தது. அந்த சாண்ட்விச்சின் நடுவே வைக்கப்படுகிற இனிமையான வாழைப்பழ துண்டுகளைப் போல அமைந்துள்ளது இன்று நாம் ஆரம்பிக்கப்போகும் ரூத்தின் சரித்திரம்!
அவனவன் தன் கண்களின் பிரியத்தின்படி நடந்ததின் விளைவுதான் நியாதிபதிகளில் நாம் பார்த்த கீழ்ப்படியாமைக்கு காரணம்! கர்த்தரால் நியமிக்கப்பட்ட சில நியாதிபதிகள் கூட , பல பெண்களை மணந்தவர்களாகவும், கர்த்தரின் வழிநடத்துதலுக்கு கீழ்ப்படியாதவர்களுமாயிருந்தார்கள். கர்த்தரே மனம் நொடிந்து, இந்த ஜனங்கள் எனக்கு வேண்டாம், நான் வேறொரு மக்களை தெரிந்துகொள்ளப்போகிறேன் என்று சொல்லிவிடப் போகிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவர்களுடைய கீழ்ப்படியாமை இருந்தது.
இப்படிப்பட்ட காலகட்டத்தில், நியாதிபதிகள் நியாயம் விசாரித்த நாட்களில், வேதம் ஒரு அற்புதமான பொக்கிஷத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. ரூத் என்ற அழகிய பெண்ணின் இனிமையான சரித்திரம்! எந்த மக்களின் வாழ்க்கையில் கர்த்தருக்கு இடமேயில்லை என்பதுபோலத் தோன்றியதோ அவர்கள் மத்தியில் ஒரு ரூத்தின் கதை இடம்பெற்றுள்ளது!
கேட்கும்பொழுதே இனிமையாக உள்ளது அல்லவா!
இதற்காகத்தான் நாம் வேதத்தை படித்து வருகிறோம்! ஒவ்வொரு சத்தான ரொட்டித்துண்டின் நடுவிலும் ஒரு இனிமையூட்டும் வாழைப்பழத்துண்டு வைக்கப்பட்ட்து போல சத்திய வேதம் நமக்கு சத்துவத்தையும், பெலனையும், இனிமையையும் தருகிறது. உலகத்தில் எந்த புத்தகமும் வேதத்துக்கு இணையாகாது!
தொடர்ந்து நாம் ரூத்தின் புத்தகத்தை படிக்கும்போது கர்த்தர் வேதத்தின் அதிசயங்களைப் பார்க்க நம் கண்களைத் திறக்க வேண்டுமென்று ஜெபிப்போம்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்