ரூத்: 1: 1 “நியாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று “.
இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம்! கொரொனாவின் மூன்றாம் அலையைப் பற்றிப் பேசப்படுகின்ற இந்நாட்களில் தேவனாகிய கர்த்தர் நம் ஒவ்வொருவரின் குடும்பத்தையும் பாதுகாக்கும்படியாக ஒரு நொடி ஜெபித்து விட்டு இதைத் தொடருவோம்!
தேசத்திலே கொடிய பஞ்சம்! அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு !
ஒருவேளை நான் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தேனானால் , கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணிய கானான் தேசத்தில் எப்படி பஞ்சம் உண்டாகலா? பாலும் தேனும் ஓடும் தேசத்தையல்லவா நமக்குக் கொடுத்தார்? இந்த தேசத்தில் பஞ்சம் உண்டாகும் என்று கர்த்தர் ஒருநாளும் கூறவில்லையே, ஏதோ தவறு நடந்து விட்டது போலும்! என்றுதான் எண்ணியிருப்பேன்.
நீங்கள் எப்படி? கர்த்தரின் வழிநடத்துதலின்படி, வாக்குத்தத்தத்தின் படி செய்த ஒரு காரியத்தில் ஏதோ ஒரு குறை வந்தவுடன் எத்தனை கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறீர்கள்!
நான் மனம்விட்டு ஒரு காரியத்தை சொல்லுகிறேன். நான் எப்பொழுதெல்லாம் தேவனால் வழிநடத்தப்பட்டு, கர்த்தருடன் மிகவும் ஐக்கியமாக வாழ்கிறேன் என்று திருப்தியுடன் இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் சாத்தான் அநேக பிரச்சனைக்குள் என்னைத் தள்ளுவதைப் பார்த்திருக்கிறேன். ஒருதடவை அல்ல! பல தடவைகள் நான் தாவீதைப் போல வேட்டையாடப்பட்டு,
கர்த்தாவே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர்க் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்..”(சங்:28:1) என்று கதறியிருக்கிறேன்.
ரூத் முதலாம் அதிகாரம் முதலாம் வசனம் கூறுகிறது, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரில் எலிமெலேக்கு என்ற மனிதன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான் , அப்பொழுது அந்த ஊரில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று என்றும், அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் அந்த பிரச்சனைக்கு தானே ஒரு முடிவு காண வேண்டுமென்று அந்த மனிதன் தன் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு மோவாப் தேசத்துக்கு சென்றான் என்றும் படிக்கிறோம்.
ஒரு நிமிஷம்! தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டவுடன், அந்தப் பிரச்சனைக்குத் தானே முடிவுகட்ட, தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு வேறொரு தேசத்துக்குப் போன இன்னொரு தேவனுடைய மனிதனைப்பற்றி நாம் படித்தது நினைவுக்கு வரவில்லையா?
ஆம்! ஆபிரகாம் தேவனுடைய வழிநடத்துதலின்படி கானானை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, அங்கே பஞ்சம் உண்டாயிற்று. உடனே ஆபிரகாம் தன் கால்களைத் திருப்பி தன் குடும்பத்தோடு எகிப்துக்கு சென்றான். நம்மைப்போல ஒருவேளை பஞ்சத்தின் மத்தியில் கர்த்தரால் தன்னை போஷிக்க முடியாது, அதற்கு நாமே ஒருவழி காணவேண்டுமென்று யோசித்தானோ என்னவோ!
அதன் விளைவு? எகிப்தை விட்டு வெளியேறிய போது அளவுக்கு மிஞ்சிய வெகுமானத்தோடு சென்றதால் அவன் குடும்பமே பிரியவேண்டியதாயிற்று! பார்வோனால் பரிசாக கொடுக்கப்பட்ட ஆகார் என்ற அடிமைப்பெண் ஒருநாள் அவனுக்கு மறுமனையாட்டியானாள்!
ஆபிரகாமும், எலிமெலேக்கும் அவர்கள் வாழ்க்கையில் பஞ்சம் ஏற்பட்டபோது , அதை தானாகத் தீர்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு எடுத்த முடிவு அவர்களுடைய குடும்பத்தை எவ்வாறு பாதித்து விட்டது பாருங்கள்! இதுதான் இன்று நாம் இவர்களுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்கிற பாடம்!
இன்று உங்களுடைய வாழ்க்கையென்னும் தேசத்தில் எப்படிப்பட்ட ‘பஞ்சம் ‘ நேரிட்டு இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஆபிரகாமைப்போல, எலிமெலேக்கைப்போல நாம் வழிதவறி எகிப்துக்கும், மோவாபுக்கும் போகுமுன்னால், நம்முடைய பரமபிதா நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு அழகானத் திட்டம் வைத்திருக்கிறார் என்பதை சற்று ஞாபகப்படுத்திக் கொள்ளுவோம்.
நம்முடைய வாழ்க்கை என்னும் பிரயாணத்தில் நமக்கு முன்பால் உள்ள ஒரு அடியைக்கூட நம்மால் பார்க்கமுடியாது. கர்த்தர் தம்முடைய மகா பெரிய கிருபையால் நாம் ஒவ்வொரு அடியாக நடக்க உதவி செய்கிறார். தூரத்திலே சற்று இருளாய்த் தோன்றும் பாதை , நாம் அருகில் செல்லும்போதுதான் நம் கண்களுக்குப் புலப்படும்.
தான் பிரயாணம் பண்ணிய கப்பல் உடைந்து போனதால் ஒரு தீவில் சிக்கித் தவித்த ஒருவன், ஒவ்வொரு நாளும் ஏதாவது கப்பல் அந்தப்பக்கம் வராதா என்று ஆவலுடன் பார்த்தான். கடவுளே எனக்கு உதவியை அனுப்பும் என்று வேண்டியும், பலநாட்கள் எந்தக் கப்பலும் வராததால், அவன் அங்கேயே தனக்கு ஒரு குடிசையைப் போட்டுத் தங்கினான்.
ஒருநாள் உணவைத்தேடி அலைந்து விட்டுத் திரும்பியபோது அந்தக் குடிசை தீக்கு இரையாகிக் கொண்டிருந்தது. மனமுடைந்து போய் கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிறீர் என்று அழுதான். மறுநாள் காலை ஒரு கப்பல் அந்தப் பக்கமாய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்து ஓடினான். கப்பல் மாலுமியைப் பார்த்து, நான் இங்கு இருப்பதை எப்படி அறிந்தீர்கள் என்று ஆச்சரியமாய்க் கேட்டான். அதற்கு அந்த மாலுமி, நீர் எரித்து காட்டிய நெருப்பின் புகைதான் எங்களுக்கு நீர் இருப்பதை அறிவித்தது என்றார். தீக்கு இரையான அவனுடைய குடிசையே அந்தக் காரியத்தை செய்திருந்தது என்றதை அறிந்தவுடன் கடவுள்தானே அவனுக்காக கிரியை செய்திருந்ததை உணர்ந்தான்!
இன்றைக்கு ஒருவேளை உன் வாழ்வில் பஞ்சம் இருக்கலாம் , ஆனால் நாளை உன் வாழ்வில் வரப்போகிற நிறைவை கர்த்தர் மட்டுமே அறிவார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்