ரூத்: 1 : 13 “… என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால் உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.”
நாம் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் தன் மருமக்களை நோக்கித் தங்கள் குடும்பத்துக்கு திரும்பிப் போகுமாறு கூறியதைப் பார்த்தோம்.
வாழ்க்கையில் பிரச்சனைகள், வியாதி, வேதனைகள், ஏமாற்றங்கள்,கடைசியில் மரணம் இவற்றை ஒன்று பின் ஒன்றாய் அனுபவித்த நகோமியின் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் ஒரு கசப்பான மாத்திரை போல இருந்தது. கணவனையும், இரு மகன்களையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுத்த அவள், இன்று தன் மருமக்களையும் திரும்ப அனுப்பிவிட்டு, வெறுங்கையுடன் பெத்லெகேமை நோக்கிப் புறப்பட ஆயத்தமானாள்.
ஒருவேளை உங்களில் யாராவது இன்று , நகோமியைப் போல என்னுடைய பாத்திரம் கசப்பான துன்பங்களால் நிரம்பி வழிகிறது, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?
நீங்கள் மட்டுமல்ல! நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஏதோ ஒரு சமயத்தில் , வேதத்தில் நாம் காணும் யோபைப் போலவும், நகோமியைப் போலவும் கஷ்டங்களை அனுபவிக்கிறோம்.
நாம் கடவுளை நோக்கி, நான் உம்மைதானே பின் பற்றுகிறேன், உம்மைதானே நேசிக்கிறேன், உமக்குத்தானே ஊழியம் செய்கிறேன், எனக்கு ஏன் இத்தனை துன்பங்களைக் கொடுக்கிறீர்? நான் உமக்கு என்ன துரோகம் செய்தேன் , என்னால் தாங்க முடியாத அளவு ஏன் என்மேல் பாரத்தை சுமத்துகிறீர், என்றெல்லாம் கதறுகிறோம் அல்லவா?
ஒருவேளை நீங்கள் அப்படி ஜெபிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் நான் ஜெபித்திருக்கிறேன்! நகோமியைப்போல கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறது என்று நாம் நினைப்பது நம் எல்லோருக்கும் சகஜம் தான்! ஒருவேளை நகோமி , இதைவிட நிலைமை மோசமாகிவிடுமோ என்று கூட நினைத்திருக்கலாம்.
நம்முடைய துன்பங்கள் மூலமாக நமக்கு பெரிய ஆசீர்வாதங்களைக் கொடுக்க வேண்டும் என்ற விசேஷமான திட்டம் எதுவும் இல்லாமல் நம்முடைய தேவனாகியக் கர்த்தர் எந்தத் துன்பமும் நம்மை அணுக விடமாட்டார் என்று யாரோ எழுதியது நினைவுக்கு வருகிறது.
இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை! அதுமட்டுமல்ல என்னுடைய அநேக நண்பர்கள் இவ்விதமாக மழைக்கு பின்னால் வரும் வானவில் போல பெருந்துன்பங்களுக்கு பின்னால் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதையும் பார்த்திருக்கிறேன்.
உன் துன்பங்கள் உனக்கு காயங்களையும் தழும்பையும் உண்டாக்கலாம். உன் காயங்களை ஆற்ற கிறிஸ்து இயேசு உனக்காக சிலுவையில் காயப்பட்டார் என்பதை மறந்து போகோதே! அவர் தழும்புகளால் நீ குணமாவாய்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்